``ஓர் ஆண், ஒரு குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு, அவள் முன்னிலையில் தன் பேன்ட்டை அவிழ்த்தால்... அது பாலியல் தாக்குதல் ஆகாது."
- இது யாரோ ஒரு வக்கிரக்காரரின், ஆணாதிக்கவாதியின் கூற்று அல்ல. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
நீதிபதி புஷ்பா கனெடிவாலா, குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல் வழக்குகளில் இப்படித்தான் `நீதி'யை எழுதுகிறார். கடந்த வியாழன் அன்று, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளைக்கு வந்த மேல்முறையீட்டு வழக்கில் இவர் எழுதியுள்ள தீர்ப்பில் உள்ள வரிகள்தான் மேலே சொன்னவை. இவர்தான், `ஆடைக்கு மேலே கை வைத்து சிறுமியின் மார்பை அழுத்துவது, பாலியல் தாக்குதல் என்ற சட்டப் பிரிவின் கீழ் வராது' என்று சமீபத்தில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியவர். மக்களின் கடும் கண்டனங்கள் காரணமாக, உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்குக் கடந்த புதன்கிழமை தடை விதித்தது. அதற்கு மறுநாளே, நீதிபதி புஷ்பா இப்படி ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார் என்றால், அந்த வழக்காடு மன்றத்தில் நீதிக்கான உத்தரவாதம் என்ன?
Also Read: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற `சர்ச்சை' தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!
12 வயதுச் சிறுமியை 39 வயது ஆண் பாலியல் கொடுமை செய்த மேல்முறையீட்டு வழக்கில், சட்டத்தின் பிரிவுகளைக் காட்டி, ``தோலும் தோலும் தொட்டுக்கொள்ளும்படி எந்தத் தப்பும் நடக்கல. ஆடை மேல கைவெச்சு மார்பை அழுத்துறது அவ்ளோ பெரிய குற்றமல்ல. அதனால, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்குத் தர்ற 3 - 8 வருஷம் சிறைத்தண்டனையெல்லாம் இதுக்குத் தேவையில்ல. `பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு' என்ற பிரிவின் கீழ் ஒரு வருஷம் போதும்" என்பது, ஜனவரி 19 அன்று நீதிபதி புஷ்பா அளித்த முந்தைய தீர்ப்பு. மக்களின் கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
தடை வந்த மறுநாளே, 5 வயதுக் குழந்தையை 50 வயது ஆண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய வழக்கின் மேல்முறையீட்டில், ஜஸ்டிஸ் புஷ்பா அதே `நீதி'யை எழுதியுள்ளார். இந்த வழக்கில் புகார் அளித்திருந்த பெண், ``நான் வேலைக்காக வெளியில் சென்றுவிட்டேன். வேலை முடிந்து வீடு திரும்பியபோது, என் குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் தன் பேன்ட்டின் ஸிப்பை அவிழ்த்தபடி நின்றார். மேலும், அவர் என் குழந்தையை படுக்கைக்கு உறங்க வருமாறு அழைத்ததாக என் குழந்தை கூறினாள்" என்று தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
படிக்கும்போதே பதறவைக்கும் இந்தக் குற்ற வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டம் பிரிவு 10-ன் கீழ் 5 வருடங்கள் சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தது கீழமை நீதிமன்றம். இதன் மேல்முறையீட்டு வழக்கில், ``குழந்தை முன் பேன்ட்டை அன்ஸிப் செய்வதை பாலியல் தாக்குதல் என்று கொள்ள முடியாது. அது பாலியல் தொல்லை என்றே கொள்ளப்படும்" என்று தனது தீர்ப்பை வாசித்த நீதிபதி புஷ்பா, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து அவரை விடுவித்துள்ளார்.
பொதுவாக, தங்களுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல்களை பெண்களும், தங்கள் பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் தாக்குதல்களை பெற்றோர்களும், சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சி மறைக்கும் போக்கே இங்கு பெரும்பான்மை. அதையும் தாண்டி பதிவுக்கு வருவது சில வழக்குகளே. அதிலும், சில காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள் செய்யும் `நடந்தது நடந்துபோச்சு, சரி சரி விடுங்க' பஞ்சாயத்துகளுடன் வீடு திரும்பிவிடுகின்றன.
இத்தனை கட்டங்களையும் தாண்டி கீழமை நீதிமன்றம் வரை வழக்கை எடுத்து வந்து நீதி பெற்று, அவ்வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குச் சென்றபோது அங்கேயும் தளராது சென்ற இந்த 5, 12 வயதுச் சிறுமிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், நீதிபதி புஷ்பாவின் தீர்ப்புகள் சொல்லியிருக்கும் செய்தி என்ன? ``உங்களுக்கு நடந்தது அவ்ளோ பெரிய விஷயமில்ல, அதெல்லாம் பாலியல் தாக்குதல் கணக்குல வராது, அதனால குறைந்தபட்ச தண்டனைதான் கொடுக்க முடியும்" என்பதைத்தானே?
Also Read: `ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்?
சம்பந்தப்பட்ட இரு வழக்குகளிலும், அச்சிறுமிகளின் அம்மாக்கள் சம்பவம் நடந்தபோது அங்கு சென்று சேர்ந்ததால், அவர்கள் மீட்கப்பட்டார்கள். ஒருவேளை அப்போது அவர்கள் அங்கு சென்றிருக்கவில்லை எனில்..? இதுபோன்ற சூழல்களில் உயிர்வரை பறிக்கப்பட்ட எத்தனை குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம்? இந்தக் குற்றத்தில் ஓர் ஆணின் நோக்கம் என்ன, இந்தக் குற்றத்தின் தன்மை என்ன, அது அச்சிறுமிகளுக்கு வாழ்நாள் முழுக்க ஏற்படுத்தக்கூடிய மன அதிர்வுகள் என்ன என்பதைக்கூட உணராமல், ஒரு பெண் நீதிபதியால் எவ்வாறு இந்தத் தீர்ப்புகளை எழுத முடிகிறது?
ஆண்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் இந்த உலகத்தில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த, இத்தனை ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாகப் போராடிய சமூகச் செயற்பாட்டாளர்களின், பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகள் அடர்த்தியானவை. அக்குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு சட்ட தண்டனைகள் மூலம் உண்டாக்கப்பட்டுள்ள அச்சமென்பது, பல சட்டத் திருத்தங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்புகளில் உள்ள சில வரிகள், அந்த முன்நகர்வுகளை எல்லாம் பின்னோக்கி எட்டி உதைத்துவிட்டிருக்கின்றன.
மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்த புஷ்பாவை, நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கொலிஜீயம் அளித்திருந்தது. நீதிபதி புஷ்பாவின் இந்த இரண்டு சர்ச்சைக்குரிய, ஆபத்தான தீர்ப்புகளையும் தொடர்ந்து, இப்போது உச்ச நீதிமன்றம் தன் பரிந்துரையைத் திரும்பப் பெற்றுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நீதிக்கு வழி என்ன?
இதில் இன்னோர் அச்சமும் ஏற்படுகிறது. இது மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால், ஒரு வைரல் அலை மூலம் நாட்டின் கண்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் எத்தனை தீர்ப்புகள் நீதிக்குப் புறம்பாக நம் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன தெரியவில்லை. கீழமை நீதிமன்றங்களில் எத்தனை சிறுமிகளும் பெண்களும், `உங்களுக்கு நடந்தது அவ்வளவு மோசமான விஷயம் ஒண்ணுமில்ல' என்று சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள் தெரியவில்லை. `அதுக்காக மூணு வருஷம் சிறைத்தண்டனையெல்லாம் கொடுக்க முடியாது' என்று எத்தனை குற்றவாளிகள் சட்டப் பிரிவுகளின் சந்துகள் வழியாக வெளியேற வைக்கப்படுகிறார்கள் தெரியவில்லை.
சென்ற நூற்றாண்டுகளில் காணப்பட்ட பல சமூகக் குற்றங்கள் படிப்படியாகக் குறைந்தும், சில குற்றங்கள் மறைந்தும் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், பெண் இனத்துக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மட்டும் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. நிர்பயா முதல் ஹத்ராஸ் பெண் வரை ஒவ்வோர் உயிரை கொடூரமாகப் பலிகொடுக்கும்போதும், இதற்குத் தீர்வுதான் என்ன என்று நாம் அயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது எத்துணை ஆபத்தானது?
இப்போது இதைப் படியுங்கள். உங்கள் பெண் குழந்தையை, ஓர் ஆண் தனியாக அழைத்துச் சென்று, அவள் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, அவள் முன்னிலையில் தன் பேன்ட்டின் ஸிப்பை அவிழ்க்கிறான். உங்கள் குழந்தை மிரள்கிறாள். ஆனாலும், அந்த ஆண் செய்தது பாலியல் தாக்குதல் ஆகாது. அதிகம் பதறுகிறது அல்லவா? எந்தச் செய்தியும் இங்கு செய்தி மட்டுமேயல்ல, யாரோ ஒருவரின் வாழ்வே. அது நாளை நம் வீட்டிலும், நமக்கும் நடக்கலாம் என்பதே நிதர்சனம். எனவேதான், அறம் மூச்சடைக்கப்படும்போதெல்லாம் சமூகத்தின் குரல் ஒன்றுபடுவது அவசியமாகிறது. `சிறுமியின் மார்பை ஆடைக்கு மேல் அழுத்தியது பாலியல் தாக்குதல் அல்ல' என்ற தீர்ப்புக்கு அப்படியாக ஒருங்கிணைந்து எழுந்த குரல்களே, அதை தடைசெய்ய வைத்தது.
இப்போது மீண்டும் உரக்கச் சொல்வோம்... Holding kid's hand and unzipping pant is undoubtedly a sexual assault.
- அவள்
இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!
source https://www.vikatan.com/social-affairs/women/why-bombay-hc-judge-pushpa-ganediwala-judgments-on-sexual-abuse-cases-are-dangerous
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக