சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை ஆகிவிட்டார் சசிகலா. தற்போது கர்நாடகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவரை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கும், இந்த சூழலில் தமிழகத்தில் தேர்தல் களமும் உச்சகட்டத்தில் இருக்கிறது. இன்னும் கூட்டணிகள் உறுதி செய்யப்படவில்லை. என்றாலும் பிரசார கூட்டங்கள் அனல் பறக்க தொடங்கி விட்டது.
இந்த சூழலில் சசிகலாவின் வருகை சில தாக்கத்தை ஏற்படுத்த கூடm என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. விரைவில் தமிழகம் திரும்பும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். `சட்டப்போராட்டம் நடத்தி, அ.தி.மு.க வை மீட்டெடுப்பது தான் சசிகலாவின் பணியாக இருக்கும்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், முதல்வர் பழனிசாமியோ `சசிகலாவை அ.தி.மு.க வின் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்கிறார்.
இந்த சூழலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் அ.தி.மு.க – அ.ம.மு.க இணைப்பிற்கும் மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. `ஆணைகள் இட்டு யார் தடுத்தாலும்...’ என தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ``சின்னமா பூரண உடல் நலம் பெற இறைவனிடம் வேண்டுதலை வைத்திட்ட அம்மாவின் விசுவாசிகள், தொண்டர்கள் படையை திரட்டி சின்னம்மா சிறப்பாக வரவேற்க வேண்டும் என்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதோடு, தாயின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் சின்னம்மா ஒருவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதையும் ஒவ்வொரு தொண்டனும் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.
இதனை அறிந்த துரோகக் கூட்டமும், இனி நமக்கு அஸ்தமனம் தான் என்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பச்சோந்தி கூட்டங்களும் ஆணையிட்டு தடுத்திடும் வேலைகளை அரங்கேற்றி வருகிறார்கள்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சியை காப்பாற்றி முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் தந்திட்ட அத்தகைய ஒப்பற்ற தியாக தலைவியை `கட்சியை விட்டு நீக்குகிறோம்’, `100% சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று மனசாட்சியை விற்று விட்டு நன்றி கெட்ட மனிதராக வலம் வருவது, இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளுக்கு இனி சரித்திரத்தில் பச்சோந்திகள், நம்பிக்கை துரோகிகள் என்ற அடையாளம் மட்டுமே வரலாறாக பேசப்படுமே தவிர, இவர்களால் அம்மாவின் ஆட்சி அமைக்க முடியாது. அம்மாவின் தொண்டர்களையும் காத்திட முடியாது என்பதே உண்மை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கட்டுரையில், ``இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகள் எத்தகைய தடை போட்டாலும், ஆணை போட்டாலும், அம்மாவின் தொண்டர்களையும் தடுக்கமுடியாது. மடை திறந்த வெள்ளம் போல் படை திரண்டு வந்து சின்னமாவை வரவேற்பார்கள். சின்னம்மாவின் தலைமையில் கழகம் மீட்டெடுக்கப்போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. எத்தனை சதிகளை தீய சக்திகளோடு சேர்ந்து தீட்டினாலும் அவை புஸ்வானமாகி விடும்.
தமிழகத்தில் நடப்பது எல்லாம் நாட்டு மக்கள் அறிவார்கள். விரைவில் தமிழக மக்களை சின்னம்மா சந்திக்க போகிறார்கள். ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் வஞ்சக பிறவிகளின் சுய ரூபங்களை மக்களிடம் வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டது. அப்போது உண்மையை மக்களிடையே வெளிப்படுத்துவார்கள்.
ஆளாக்கிய வரை அவதூறு பேசும் அர்பர்களின் முகத்திரையை கிழிப்பார்கள். கோபுர பொம்மைகள் எல்லாம் இன்றைக்கு ஆணையிட்டு தடைபோட ஆளாய் பறக்கிறது. அந்த கோபுரத்தை தாங்கி நிற்கும் பூமியாக இருப்பவர் சின்னம்மா அவர்கள் தான். அத்தகையவருக்கே தடைபோட்டும் பச்சோந்திகள் குறை கூறுவதன் விபரீதத்தை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
பதவி வெறியர்களே, வேஷம் போடாமல் விசுவாசத்தை காட்டுங்கள். குதர்க்க அரசியல் செய்யும் கோமாளிகள் போன்று பொய்களை இட்டுக்கட்டி பேசுவதை தவிர்த்திடுங்கள். பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு கைகட்டி சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்ததும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். திரை மறைவு அரசியல் நடத்துவதை இதயதெய்வம் அம்மா போன்று எப்போதும் சின்னம்மா விரும்புவதில்லை.
Also Read: சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு... டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?
தனியாக நின்று டெபாசிட் கூட வாங்க யோக்கியதை இல்லாத பச்சோந்தி கூட்டங்கள் எல்லாம் தொண்டர்களிடம் பசப்பு வார்த்தை பேசி பாசாங்கு நாடகம் நடத்தி, அணை போட்டு தடுத்தாலும் மீண்டும் உங்களால் கூறமுடியாது. சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த சின்னம்மாவுக்கு காட்டும் விசுவாசம் இதுதானா? கீழே விழுந்து விட்டால் என்ன ஆகும் என்பதை மறந்து விட்டு மலை உச்சியில் கொண்டு போய் அமர வைத்த தியாகத் தலைவியிடமே வாலாட்டுவதா?
ஒரு தனிமனிதனுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட பதவி வெறி என்னும் பேராசையால் புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்ட, இதயதெய்வம் அம்மா வார்க்கப்பட்ட இயக்கத்தையே சிதைக்க நினைக்காதே..! சின்னாபின்னம் ஆக்கிட முயலாதே. கோடான கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம் பதவி வேறியால் சிதறுண்டு போக வேண்டுமா? சுயமான சிந்தனை செய்! தீர்க்கமான தெளிவான முடிவினை, கோடி தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவினை எடு! ஆணைகளை உடைத்தெறிந்து சின்னம்மாவை ஒருசேரக் கூடி வரவேற்போம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க களப்பணிக்கு தயாராவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் சசிகலா தமிழகம் திரும்ப இருக்கும் நிலையில் , அ.தி.மு.க – அ.ம.மு.க இணைப்பிற்கு நமது எம்.ஜி.ஆர் நாளேடு மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இதனை பார்க்க முடிகிறது. இதற்கு அ.தி.மு.க தரப்பில் என்ன மாதிரியான எதிர்வினை இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... இந்த கட்டுரை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘சசிகலாவுவையும் அ.ம.மு.கவையும், அ.தி.மு.கவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தெளிவுபடுத்திவிட்டார்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/namathu-mgr-newspaper-article-on-sasikala-and-admk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக