Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

சீர்காழி கொலை: ஜெயங்கொண்டத்தில் போடப்பட்ட பிளான்... சிக்கிய கொள்ளையர்கள்!

சீர்காழி கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடை நடத்தி வந்ததும், அங்கிருந்த படியே இதற்கான திட்டத்தை தீட்டியதாகவும் வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் கடை நடத்தி வந்த மணிஷ்

சீர்காழியில் நேற்று முந்தினம் காலை வட மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர் தாய், மகனை கொலை செய்து விட்டு, 17 கிலோ நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மகிபால் சிங் என்பவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு இறந்த நிலையில் ரமேஷ், மணிஷ், கருணாராம் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொள்ளையர்களில் ரமேஷ், மணிஷ் ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளை சம்பவத்திற்கான திட்டத்தை தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம், `ரமேஷ், மணிஷ் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ரமேஷ் ஜெயங்கொண்டத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்டோமொபைல் கடை நடத்தி வந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கடையை வேறு ஒரு வடமாநிலத்தை சேர்ந்தவரிடம் விற்று விட்டார்.

பின்னர் கும்பகோணம் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதே போல் மணிஷ் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்கிற பெயரில் கிளாஸ் அண்ட் பிளைவுட்ஸ் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ரமேஷ், ஜெயங்கொண்டத்திற்கு வந்து அடிக்கடி மணிஷை சந்தித்து பேசி வந்துள்ளார். சொல்லப்போனால் இங்கிருந்த படிதான் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்.

கருணாராம்

ரமேஷ் ஜெயங்கொண்டத்தில் தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.நேற்று முந்தினம் அதிகாலை கிளம்பி மணிஷை அழைத்து கொண்டு கும்பகோணம் சென்றுள்ளார். அங்கிருந்து கும்பகோணத்தில் செருப்பு கடை நடத்தி வரும் கருணாராம் என்பவரின் காரில் சீர்காழி சென்றுள்ளனர்.

பின்னர் ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை கொலை செய்ததுடன், தன்ராஜ், அகில் மனைவி நெகல் ஆகியோரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பியுள்ளனர். செல்போன் பயன்படுத்தினால் மாட்டி கொள்வோம் என்பதால் அவர்கள் யாரும் செல்போனையும் எடுத்து கொண்டு செல்லவில்லை.

Also Read: சீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை! -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்?

இந்த கொலை சம்பவம் தமிழகத்தை தாண்டியும் கடும் பரபரப்பை உண்டாக்கியது. துரிதமாக செயல்பட்ட போலீஸார் உடனடியாக கொள்ளையர்களை கைது செய்தனர். மணிஷ் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே ஜெயங்கொண்டம் பகுயில் பெரும் பரபரப்பு உண்டானது.

வியாபாரத்தில் கறாராக இருக்கும் மணிஷ், யாரிடமும் அதிகம் பேச மாடான் என்கிறார்கள் அப்பகுதியினர். மணிஷ் கடை வைத்திருந்த கடையின் உரிமையாளர், மணிஷின் அப்பாவை தொடர்பு கொண்டு உடனே ஊருக்கு கிளம்பி வரசொல்லியிருப்பதுடன் கடையையும் காலி செய்ய சொல்லிவிட்டார். அவர் வந்ததுமே கடைக்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கடையினை திரும்ப பெற இருக்கிறார். ரமேஷ், மணிஷ் இருவருமே ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்தவர்கள் என்பதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மகிபால் சிங்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், வடமாநிலத்தை சேர்ந்த பலர் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தபடி மொபைல் ஷாப், பிளைவுட் கடை, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கடைகள் நடத்தி வருகின்றனர். அத்துடன் 500-க்கும் மேற்பட்டவர்கள் லட்டட வேலை, இன்டீரியர் ஒர்க்ஸ், டைல்ஸ் அமைத்து கொடுப்பது என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.

Also Read: சீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை! -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்?

மேலும் அருகே உள்ள ஊர்களிலும் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வட மாநிலைத்தை சேர்ந்தவர்கள் இந்த கொடிய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வட மாநிலத்தவர்கள் வாடகைக்கு எடுத்துள்ள வீடு, கடை ஆகியவற்றை உடனே காலி செய்ய வேண்டும் எனவும் சிலர் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வருகிறார்கள். வேலைக்காக சொந்த ஊரை விட்டி இங்கு வந்திருக்கும் இவர்களில், சிலர் செய்யும் கொடூரதனத்தால் அப்பாவி மக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/sirkazhi-murder-issue-planned-in-jayankondam-says-sources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக