விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் குளத்தைப் பார்வையிட வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எந்தக் கட்சியிலுமே, எந்தப் பொறுப்புமே நிரந்தரமான பொறுப்பு கிடையாது. புரட்சித் தலைவருக்குப் பிறகு கட்சியை மீட்டெடுத்து மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை மீட்டெடுத்து எங்களையெல்லாம் வாழவைத்த தெய்வம் அம்மா. அதனால், எங்கள் மனதில் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாதான். ஆனால், அ.தி.மு.க உள்பட எந்தக் கட்சியிலுமே நிரந்தரத் தலைவர் என்று யாரும் கிடையாது. யாரும் நிரந்தரமாக இருக்கப் போவதும் கிடையாது. அது தவறான கருத்து. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபடக் கூடிய சூழலில் கட்சியும், சின்னமும் யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நடைபெற்றது.
அப்போது டி.டி.வி தினகரன் பெயரிலும், அந்த அணியில் மதுசூதனன் பெயரிலும் வழக்கு நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பல வழக்குகள் ஒருபுறம். தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை நடைபெறும்போது இரு அணிகளும் ஒன்றாக இணைந்துவிட்டன. முதல்வரும், துணை முதல்வரும், `இனி அ.தி.மு.க ஒன்றாகச் செயல்படும்’ என்று கூறிவிட்டார்கள். அதனடிப்படையில்தான் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் நாங்கள்தான் அ.தி.மு.க என்று கூறி வழக்கை நடத்தினார்கள். அ.தி.மு.க நாங்களா அல்லது அவர்களா என்பது உலகத்துக்கே தெரியும்.
தேர்தல் ஆணையம் இறுதியாக அளித்த தீர்ப்பில் அ.தி.மு.கவில் 100-க்கு 99% தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் இருக்கிற இயக்கம்தான் உண்மையான அ.தி.மு.க. அவர்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தின் உரிமை என்று கூறி முடித்து வைக்கப்பட்டுவிட்டது. இதை அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் கூறுவதை கேட்டு ஏமாந்துவிடுவோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். கட்சியையும், கட்சிக்காரர்களையும் ஏமாற்றித் தின்றவர்கள். 30 ஆண்டுகாலம் கொள்ளையடித்த இவர்களைப்போல இல்லை.
தேர்தல் ஆணையம் இறுதியாகக் கூறிவிட்டது. ஒரு கட்சியை ஆரம்பித்த பிறகு அதற்குரியை அங்கீகாரத்தைக் கொடுப்பது தேர்தல் ஆணையம். அந்தத் தேர்தல் ஆணையமே தீர்ப்பு கூறிவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப் போட்டு தோல்வியடைந்தார்கள்.
உச்ச நீதிமன்றம் இந்த பக்கம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும், அவைத் தலைவர் மதுசூதனன் பெயரையும் வழக்கின் பிரதிவாதியாகச் சேர்த்திருந்தார்கள். அந்தப் பக்கம் சசிகலா பொதுச்செயலாளர் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, டி.டி.வி தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கொடுத்த தீர்ப்பு சரி என்று தீர்ப்பளித்ததுடன் வழக்கையும் தள்ளுபடி செய்துவிட்டது. அதுதான் இறுதித் தீர்ப்பு.
``இப்போது, `நீதிமன்றத்துக்குச் செல்வேன், அ.தி.மு.க எங்களுடையதுதான்’ என்று கூறிவரும் இதே டி.டி.வி தினகரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர். `நாங்கள் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரவில்லை’ என்று டி.டி.வி தினகரன் வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அதன்பிறகு கொடுக்கப்பட்ட இறுதித் தீர்ப்புதான் உண்மையான அ.தி.மு.க குறித்த தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு செல்லும் என்பது. அதை எதிர்த்து அன்றை தினம் சிறையில் இருந்த சசிகலா சார்பாக டி.டி.வி தினகரனே உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மறு சீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இன்று சட்டவிரோதமாக அ.தி.மு.க-வின் கொடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. நாங்கள்தான் அ.தி.மு.க என்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுதான் இறுதித் தீர்ப்பு. வேறு எங்கும் வழக்கு இல்லை. அ.தி.மு.க யார்? அதன் கொடியை யார் பயன்படுத்துவது? இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மீது ஆட்சேபனை இருந்தால், இறுதியான மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். அங்கேயும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருப்பதுதான் உண்மையான அ.தி.மு.க. இவர்கள் மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.
அதெல்லாம் இனி நடக்காது. 30 ஆண்டுகாலம் ஏமாந்தது எல்லாம் வேறு. உங்களையெல்லாம் யாரும் மனசளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்னைக்கு அம்மா இருந்தார்கள். அம்மாவின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து உங்களை ஏற்றுக்கொண்டோம். அதனால் இன்று கொடியை சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கும் சசிகலாவாக இருந்தாலும், கட்சியை விட்டு நீக்கப்பட்ட வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது, இது எங்கள் சொத்து. இதை பயன்படுத்துவதற்கு எந்தக் கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது. அவர்கள் மீது உரிய வழக்கு கண்டிப்பாகத் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டு எல்லைக்குள் இரட்டை இலை கொடியைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது நாங்கள் வழக்க்குத் தொடருவோம். அதுமட்டுமல்ல அ.தி.மு.க-வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும்” என்று கூறியவரிடம் `டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அ.ம.மு.க-வை இணைத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கே.பி.முனுசாமி கூறியிருக்கிறாரே?’ என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு,
Also Read: `பாய்ந்த பன்னீீர்... சீறிய சி.வி.சண்முகம்' - அவசரகதியில் முடிந்த அ.தி.மு.க கூட்டம்!
``அது நாங்கள் வழக்கமாகக் கூறுவது. யார் எந்த தப்பு செய்தாலும் அனைத்துக் கட்சியிலும் கூறுவது மன்னிப்புக் கடிதம்தான். அவர் பொதுவாகக் கூறிய கருத்து அது. எந்த காலத்திலும், எந்த நிலையிலும் இனி அவர்களுக்கு இந்தக் கழகத்தில் இடமில்லை. 200% அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்தக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டார். யாரையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. அ.தி.மு.க சட்டவிதிகளின்படி கழகத்தை எதிர்த்து வழக்கு தொடர்பவர்கள், அவர்களாகவே அந்த அடிப்படை உரிமையை இழந்துவிடுகிறார்கள். அவர் எப்போதோ நான்தான் அ.தி.மு.க என்று தனியாக போய்விட்டார். வெளியேறியவரைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை?” என்று பதிலளித்தார்.
source https://www.vikatan.com/news/politics/minister-cve-shanmugam-warns-sasikala-over-admk-flag
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக