Ad

புதன், 27 ஜனவரி, 2021

ஊழிக்காலம் - 1 | அன்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகினால் ராமநாதபுரத்துக்கு என்ன பிரச்னை?!

"2020 முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியடையவேண்டாம். மேட் மேக்ஸ் திரைப்படத்தின் கதை 2021-ல் நடக்கிறது என்று ஒரு கருத்து உண்டு, நினைவிருக்கட்டும்!" - சமீபத்தில் இப்படிப்பட்ட மீம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. எதுவுமே வளராத தரிசு நிலம், தட்டுப்பாடு, பஞ்சம், அதீத வன்முறை போன்ற மேட் மேக்ஸ் காட்சிகளை நினைத்தால் சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களையும் புனைவுகளையும் ஆங்கிலத்தில் 'Dystopian' என்று அழைப்பார்கள். சிதைந்துபோன எதிர்கால சமூகத்தைப் பற்றியது என்று நாம் இதைப் புரிந்துகொள்ளலாம். ஜோம்பிகளின் தாக்குதல், 2012 திரைப்படத்தில் காட்டப்படுவதுபோன்ற அடுத்தடுத்த பேரிடர்கள், கதிர்வீச்சால் சீரழிக்கப்பட்ட பூமி, நொறுக்கப்பட்ட சமூக அறங்கள், கொள்ளை நோய்கள், வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பு, உணவுப்பஞ்சம், அணு ஆயுதப் போர், சுவாசிக்க முடியாத காற்று, மூன்றாம் உலகப் போர், எரிபொருள் இல்லாத உலகம், மூழ்கிய நவீன நாகரீகங்கள், தண்ணீர்ப்பஞ்சம், சூரிய ஒளியே இல்லாத உலகம், ராட்சத மிருகங்களின் தாக்குதல் என்று ஹாலிவுட் கதையாசிரியர்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு எத்தனையோ எதிர்காலங்களைப் படைத்திருக்கிறார்கள்.

Mad Max: Fury Road

மேட் மேக்ஸ் கதை உண்மையிலேயே 2021 ஆண்டில் நடப்பதுதானா என்றெல்லாம் இணையவாசிகள் அனல் பறக்க விவாதித்துக்கொண்டிருக்க, "மீம் கிடக்கட்டும். உண்மையில் எதிர்கால சூழல் எந்த டிஸ்டோப்பியன் சினிமாவையும் விட மோசமாக இருக்கும்'' என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். நம் கற்பனைக்கெட்டாத ஆபத்துகள் நிறைந்ததாக எதிர்காலம் இருக்கப்போகிறது என்பது அவர்களது கருத்து.

அறிவியலாளர்களின் இந்த எச்சரிக்கை வெற்றுக் கூச்சலல்ல என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. ஐந்து வருடங்களுக்கு முன்பு நாம் கேட்டிராத 'ரெட் அலர்ட்' என்கிற சொல் நமக்குப் பரிச்சயமானதாக, சகஜமாக மாறிவிட்டது. "வர்தா புயல் வந்தப்போதான் நான் பைக் வாங்கினேன்'' என்று புயல்களை வைத்து வருடங்களை அடையாளம் காண்கிறோம். டிசம்பர் மாதத்துக்கும் சென்னைக்கும் உள்ள அச்சமூட்டுகிற தொடர்பைப் பற்றி மீம்கள் வருகின்றன. மழை அறிவிப்பு வந்த உடனேயே ரொட்டி/நூடுல்ஸ் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்திகள் வாங்கிவைத்துக்கொண்டு, பவர்பேங்குக்கு சார்ஜ் ஏற்றுகிறோம்.

வெறுமனே மழை என்பது மாறி, 'மிக கன மழை', 'அதி கன மழை', 'மிக மிக அதிக கன மழை' என்றெல்லாம் பிரிவுகள் வந்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ முறை சுழற்றியடிக்கும் காற்றுக்கு நடுவே, ரெயின்கோட் அணிந்தபடி ஒரு செய்தியாளர் நேரலையில் பேசுவதைப் பார்த்துவிட்டோம். பருவம் தப்பிய மழையும், பொய்த்துப்போன பருவ மழையும் சாதாரணமான விஷயங்களாகிவிட்டன. மழையையே பார்க்காத ஊர்களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது. பொங்கல் வைக்க வேண்டும் என்று சூரியனின் வருகைக்காக மழையில் காத்திருந்த முதல் தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

அன்டார்டிகா பனிப்பாறைகள் உருகுதல்
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, பனிப்பாறைகள் உருகுதல், கலிஃபோர்னியா மாகாணத்தின் காட்டுத்தீ, ஆஸ்திரேலியக் காட்டுத்தீ, அமேசான் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, அதீத குளிர், கனமழை, நிவர் புயல் என்று பல அம்புகளை நம் மேல் எய்துவிட்டுப் போயிருக்கிறது 2020-ம் ஆண்டு. கொரோனாவின் பிடியில் இருந்ததால் இவை நம் உளவியலைப் பெரிதாக பாதிக்கவில்லை என்பதே உண்மை.

உலக அளவில் காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படப்போகிற 181 நாடுகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் பல கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. பருவமழையைப் பெரிதும் நம்பியிருக்கிற விவசாயம் மிக அதிகமாக பாதிக்கப்படும், உணவுப்பற்றாக்குறை ஏற்படலாம் என்கின்றன அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்.

'Fridays for Future' என்ற பொருண்மையில் உலகெங்கிலும் உள்ள சூழலியலாளர்கள் வாராவாரம் வெள்ளிக்கிழமை சிறு பேரணியோ போராட்டமோ நடத்துகிறார்கள். கோவிட்-19 காலத்தில்கூட இது இணையதளங்களில் ஹேஷ்டேக் போராட்டமாகவும் ஜூம் சந்திப்புகள் மூலமாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருபவர்கள், "எதிர்காலத்தில் பூமி வாழ்வதற்குத் தகுந்த இடமாக இருக்காது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் குழந்தையைப் பெற்றுக்கொள்வது அந்தக் குழந்தைக்கு செய்யும் துரோகம். ஆகவே நான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை"என்று அறிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்-காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கைகளில் காணப்படும் தரவுகள், எண்கள் எல்லாமே நம்மால் கற்பனை செய்ய முடியாதவையாக இருக்கின்றன. "2100-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 250 மில்லியன் மக்கள்..." என்று ஒரு வரி இருந்தால் எப்படிப் புரிந்துகொண்டு அணுகுவது?! மனித அறிவின் எல்லையையும் தாண்டியதாக மாறிவிட்டது காலநிலைப் பேரிடர்.

"கோவிட்-19 பிரச்னை முடிந்ததும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்று காத்திருக்கிறோம். ஆனால், கொரோனா காலத்துக்கு முன்னால் நம் இயல்பு வாழ்க்கை என்பதே காலநிலை மாற்றத்தால் நெருக்கடியாகத்தானே இருந்தது?" என்று கேட்கிறார் செயற்பாட்டாளர் க்ரெட்டா தன்பர்க். "நம் முன்னால் இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்னை இதுதான். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில்தான் மனித இனத்தின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது" என்கிறார்கள் உலக நாடுகளின் பிரதிநிதிகள்.

காலநிலை மாற்றம்

'உலகம் அழிந்துவிடும்' என்று 2012ம் ஆண்டைப் பற்றி ஒரு புரளி வந்ததே.... இதுவும் அதைப் போலத்தானா? இது புரளி இல்லை என்றால் காலநிலை மாற்றத்தின் அறிவியல் பின்னணி என்ன? புவி வெப்பமடைதல் என்பதை ஏன் காலநிலை மாற்றம் என்று அழைக்கிறார்கள்? பூமி சூடாகிறது என்றால் எப்படி மழையும் குளிரும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது? கடலோர நகரங்கள்தானே மூழ்கப்போகின்றன, கடலே இல்லாத ஒரு கிராமத்தில் இருப்பவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? இது உண்மையிலேயே அவ்வளவு பெரிய பிரச்னை என்றால் ஏன் உலகநாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகள் செய்யவில்லை?

எங்கேயோ அன்டார்டிகாவில் இருக்கிற பனிப்பாறை உருகி பென்குயின்கள் இறக்கின்றன என்றால் நாமக்கல்லிலும் ராமநாதபுரத்திலும் இருப்பவர்களுக்கு என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது? இது வெறும் சூழலியல் பிரச்னை இல்லை, உலகம் முழுவதற்குமான அச்சுறுத்தல் என்கிறார்களே, ஏன்? காலநிலை மாற்றத்தை நாம் எப்படி எதிர்கொள்வது, அதில் தனி மனிதனின் பங்கு என்ன, இதிலிருந்து நம்மால் வெற்றிகரமாக மீள முடியுமா?

நாராயணி சுப்ரமணியன்

இவை மட்டுமல்லாமல் இன்னும் நமக்குள் இருக்கிற பல சூழலியல் கேள்விகளுக்கு இந்தத் தொடர்மூலம் விடைகளைத் தேடலாம். காலநிலை மாற்றத்தின் அடிப்படை அறிவியலையும் அதனால் ஏற்படப்போகிற பாதிப்புகளையும் நாம் துல்லியமாகத் தெரிந்துகொண்டால் மட்டுமே அதை சரியான விதத்தில் எதிர்கொள்ளமுடியும்.

முதலில் காலநிலை மாற்றம் என்பது எதனால் ஏற்படுகிறது, அதற்குப் பின்னாலிருக்கிற அறிவியல் என்ன என்பதை அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்துகொள்ளலாம்...


source https://www.vikatan.com/government-and-politics/environment/how-a-small-environmental-change-happening-across-the-globe-affects-us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக