Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

மதுரை: பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு! - பா.ஜ.க-வினரை உற்சாகப்படுத்திய ஜெ.பி.நட்டா விசிட்

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை வருகையில் கோயில் தரிசனம், நிர்வாகிகள் கூட்டங்களில் கலந்துகொண்டு தேரதலுக்கான பல ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திலும் பேசியதால் தமிழக பா.ஜ.க-வினர் உற்சாகமாகியுள்ளனர்.

பா.ஜ.க பிரசாரப் பொதுக் கூட்டம்

கடந்த 29-ம் தேதி இரவு தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா, 30-ம் தேதி காலையில் மனைவியுடன் சென்று மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்பு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

ரிங் ரோடு அருகேயுள்ள அரங்கத்தில் தமிழக அளவிலான பா.ஜ.க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தேர்தலைச் சந்திப்பது பற்றி ஆலோசனைகளை ஜெ.பி.நட்டா வழங்கினார்.

ஜெ.பி.நட்டா

அதன்பின்பு பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வருகிற தேர்தலில் அவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டுமென்று பேசினார்.

இப்படி தொடர்ச்சியாக கட்சியின் சார்பு அணிக் கூட்டங்களில் கலந்துகொண்ட ஜெ.பி.நட்டாவை, ஜெயலலிதா கோயிலைத் திறந்து வைக்க மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி உடனே சென்ன கிளம்பிவிட்டார்.

ஜெ.பி.நட்டா

அன்று மாலையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மட்டும் நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்பட்டது.

மாலையில் பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா, ``தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

ஜெ.பி.நட்டா

மதுரையில் மீனாட்சியம்மனின் ஆசியுடன் மதுரை மக்களின் ஆசியையும் பெற்றுள்ளேன். காந்தி நினைவு தினம் கொண்டாடப்படும் இந்நாளில் மதுரைக்கும் காந்திக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நினைத்துப் பார்க்கிறேன்.

மீனாட்சியம்மன் ஆட்சி செய்த மதுரையை ராணி மங்கம்மாள், சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி செய்தார்கள். தமிழ் கலாசாரத்தை வளர்த்தார்கள். நம் பிரதமரும் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Also Read: ராகுல் - நட்டா- மோகன் பகவத் தமிழக விசிட் என்ன பின்னணி?| Vikatan Tv

தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கியது மோடி ஆட்சியில்தான். மதுரையில் எய்ம்ஸ், சென்னையில் மெட்ரோ என்று பல திட்டங்களைக் கொடுத்தது இந்த ஆட்சியில்தான்.பா.ஜ.க-வை குறைகூறும் தி.மு.க போன்றவை தீவிரவாதக் கட்சிகளாக உள்ளன. திமுக, காங்கிரசால் தமிழகம் சரிவடைந்துள்ளது. இப்போது, தி.மு.க-வினர் வேல் எடுத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அதற்கு பா.ஜ.கதான் காரணம்.

பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த கட்சியினர்

அ.தி.மு.க எப்போதும் தேசிய நீரோட்டத்தோடு இணைந்து செல்ல விரும்பும் கட்சி. அதனால், அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம். இக்கூட்டணி பெரும் வெற்றி பெறும்" என்றார்.

ஜெ.பி.நட்டா ஒரு நாள் முழுவதும் மதுரையில் தங்கியிருந்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், ஐடி விங் நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர், சமுதாயத் தலைவர்கள் உட்பட பா.ஜ.க சார்பு அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார். அத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திலும் பேசிவிட்டுச் சென்றதால் பா.ஜ.க-வினர் உற்சாகமாகியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/jp-naddas-madurai-visit-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக