Ad

சனி, 30 ஜனவரி, 2021

``சிப்பாயாகச் சேர்ந்தவர் `ஹவில்தார்' ஆக உயர்ந்தார்!" - `வீர் சக்ரா' பழனியின் மனைவி வானதிதேவி

இந்திய சீன எல்லைப் பகுதியான கல்வானில் சீன ராணுவத்தினருடன் நடந்த தாக்குதலில் பலியான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு, மத்திய அரசு `வீர் சக்ரா' விருது அறிவித்திருக்கிறது. இது தன் கணவரின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த பெருமை என நெகிழ்கிறார், அவரின் மனைவி வானதிதேவி.

கல்வான் பள்ளத்தாக்கு

இந்திய, சீன எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவிவந்தது. லடாக் பகுதியில் இந்தியக் கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தொடர்ந்து அங்கு படைகளைக் குவித்து வந்தது. முன்னதாக சீன ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் லடாக் பகுதியில் பறந்ததால் கடும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் இந்திய சீன, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் குவிக்கப்பட்ட சீனப் படைகள் சற்று பின்வாங்கின. இதனால் எல்லையில் நிலவி வந்த பதற்றமான சூழல் அடுத்த சில நாள்களில் குறைந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கல், இரும்புக் கம்பிகள் கொண்டு இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த `ஹவில்தார் (gunner)' பழனியும் ஒருவர்.

ராணுவ வீரர் பழனிக்கு அஞ்சலி.

இதையடுத்து கடுக்கலூர் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்ட பழனியின் உடல் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கிடையே ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரமரணம் அடைந்த பழனியின் மனைவி வானதிதேவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

பழனியின் சீருடை உள்ளிட்டவை.

மேலும் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. பழனியின் மனைவி வானதி தேவிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுப் பணிக்கான உத்தரவையும் வழங்கினார்.

இந்நிலையில் நாட்டின் 72 -வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, எதிரிகளை இந்திய எல்லைக்குள் நுழையவிடாமல் துரிதமாகச் செயல்பட்டு உயிர் தியாகம் செய்த பழனிக்கு `வீர் சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான `வீர் சக்ரா' விருது பழனிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வானதிதேவியிடம் பேசினோம்.

``என் கணவர் தனது 40 ஆண்டுக்கால வாழ்வில், 23 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் ராக்‌ஷாக், யு.என்.எஸ்.எஃப் அபார்ட் மற்றும் மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஹைபசாட் போன்ற ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டு தாய் நாட்டுக்காகப் போராடியுள்ளார்.

குடும்பத்துடன் பழனி.

Also Read: `15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்த என் கணவர் தன் சிறப்பான செயல்பாடுகளால் நாயக், ஹவில்தார் என அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தார். அவரது செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் `சுரக்‌ஷா CDR ரக்‌ஷா', `சைன்ய சேவா' உள்ளிட்ட பல மெடல்களைப் பெற்றுள்ளார்.

இறுதியாக, கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியான கல்வானில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலைத் தடுக்க முயன்று, தனது தாய் நாட்டுக்கு தன்னையே தந்து வீர மரணம் அடைந்துள்ளார். அவரின் இழப்பு, என்னையும் பிள்ளைகளையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நானும் குழந்தைகளும் மீள, தமிழக அரசு செய்த உதவிகளும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் காட்டிய பரிவு மற்றும் ஆறுதலும் உதவின.

வீர மரணம் அடைந்த பழனி.

Also Read: கல்வான் மோதலில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு நினைவுச்சின்னம்! - கிழக்கு லடாக்கில் அமைப்பு

சென்னையில் உள்ள லூகாஸ் டி.வி.எஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில், என் கணவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் நிதியுதவி அளிக்க என்னை அழைத்திருந்தனர். அதற்காக சென்னை சென்றுகொண்டிருந்தபோது, `வீர் சக்ரா' விருது என் கணவருக்கு அறிவிக்கப்பட்ட செய்தி கிடைத்தது. இந்திய ராணுவத்தின் இந்த உயரிய விருது என் கணவருக்கு அறிவிக்கப்பட்டதன் மூலம், நாட்டுக்காக அவர் செய்த உயிர்த் தியாகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியை எங்களுக்குத் தந்துள்ள மத்திய அரசுக்கும், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விகடன் வழியாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றவரின் கண்களில் நீர் கோத்தது.



source https://www.vikatan.com/news/general-news/galwan-valley-martyr-havildar-palani-wife-vanathi-devi-speaks-about-vir-chakra-honour

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக