Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

சென்னை: ஃபேஸ்புக்கில் பெண்கள் போட்டோ; போனில் காதல் வலை! `வழிப்பறி’ நண்பர்கள் சிக்கியது எப்படி?

சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன் மாதவரம் ரெட்டேரி அருகே பைக்கில் சென்றார். அப்போது மர்மநபர்கள் ஐயப்பனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஐயப்பன் அணிந்திருந்த கைச்செயின் மற்றும் செல்போன், பைக் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து ஐயப்பன் மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ முத்து தலைமையில் போலீஸார் விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

தமிழ்

இந்தநிலையில் மாதவரம் தோல் தொழிற்பேட்டை அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் போலீஸாரைப் பார்த்ததும் அங்கிருந்து வேறு வழியில் சென்றனர். அதைக் கவனித்த போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் கொடுங்கையூரைச் சேர்ந்த விஜயகுமார் (23), மாதவரத்தைச் சேர்ந்த தனீஷ் (23), மாதவரம் உடையார்தோட்டத்தைச் சேர்ந்த தமிழ் என்கிற படையப்பா (22), மாதவரம், எம்.ஆர்.ஹெச் சாலையைச் சேர்ந்த மோனீஷ் (20) எனத் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் நண்பர்கள். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Also Read: புதுக்கோட்டை: டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு! - பணம் பறிக்க முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட விஜயகுமார், தினேஷ், மோனீஷ், தமிழ் ஆகியோர் ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருந்து வந்திருக்கின்றனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் தங்களின் புகைப்படங்களைp பதிவு செய்யாமல் அழகான பெண்களின் போட்டோக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். அந்த விவரங்களைப் பார்த்து ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் விடுப்பவர்களின் அழைப்பை உடனடியாக இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

விஜயகுமார்

பின்னர் செல்போன் நம்பர்களைக் கேட்டு வாங்குவார்கள். அதன்பிறகு முகம் தெரியாத நபருடன் பெண் குரலில் இவர்கள் போனில் பேசுவார்கள். அப்போது எதிர்முனையில் பேசுபவர்களின் பலவீனம் மற்றும் அவர்கள் குறித்த முழு தகவல்களையும் சேகரித்துக் கொள்வார்கள். இதையடுத்து காதல் வலை விரிப்பார்கள். அதை உண்மையென நம்புபவர்களிடம் நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வரவழைப்பார்கள்.

அதை நம்பி வருபவர்களிடம்தான் இந்தக் கும்பல் வழிப்பறி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பணம், பொருள்களை இழப்பவர்கள் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை. அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் பழகி இந்தக் கும்பல் பலரிடம் நகை, பணம், செல்போன்களை வழிப்பறி செய்து வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் மோனீஷ் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

தனீஷ்

சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். ஐயப்பனிடமிருந்து வழிப்பறி செய்த பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறோம். கொரோனா பரிசோதனைக்குப்பிறகு 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

`ஐயப்பன் புகார் கொடுத்தபோது அதை வழிப்பறி வழக்கு என்ற கோணத்தில்தான் விசாரித்தோம். விசாரணையில்தான் ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழகி, பெண்கள் குரலில் பேசி நூதன முறையில் வழிப்பறியில் இந்தக் கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற ஆபத்தை சந்திக்க நேரிடும்' என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாதவரம் பகுதியில் கடந்த ஆண்டும் இதே ஸ்டைலில் வழிப்பறி சம்பவம் நடந்தது. அவர்கள் தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-madhavaram-police-arrested-4-youths-over-robbery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக