Ad

புதன், 27 ஜனவரி, 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஓவர்டேக் செய்த ராகுல் காந்தி?! - கொங்கு மண்டல விசிட் அலசல்

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தூசிதட்டி புத்துயிர் கொடுக்கும் விதமாக, ஒரு மாதத்தில் இரண்டு முறை தமிழகம் வந்துவிட்டார் ராகுல் காந்தி. ராகுலின் வருகை சத்தமே இல்லாமல் சில தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி கோவை வந்த அதே 23-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கோவையில் தான் இருந்தார். ராகுலின் திட்டப்படி, 23-ம் தேதி காலை குறு, சிறு, நடுத்தர தொழில் அமைப்பினரை சந்தித்து கலந்துரையாடுவது தான் முதல் நிகழ்ச்சி.

ராகுல் காந்தி

Also Read: `மூன்று மாதங்களில் சீனா என்ற பெயரைக்கூட உச்சரிக்கவில்லை!’ - மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி, முதலில், 23-ம் தேதி மாலை அல்லது 24-ம் தேதி தான் தொழில் அமைப்பினரை சந்திப்பதாக இருந்தது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால், ராகுலை ஓவர்டேக் அடிக்க, 22-ம் தேதி இரவே எடப்பாடி தொழில் அமைப்பினரை சந்தித்து பேசிவிட்டார். 'தேர்தல் பரப்புரையில், தாமதமாகிவிடக் கூடாது. முதல்வர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார்' என்று தொழில் அமைப்பினரிடம் அ.தி.மு.க தரப்பில் காரணமும் கூறியுள்ளனர்.

23-ம் தேதி காலை டெல்லியில் இருந்து ராகுல் தனிவிமானம் மூலம் கோவை வந்தார். அதேநாள் எடப்பாடியும் பிரசாரத்தை தொடங்குவதால், கூட்டம் எல்லாம் அங்கே சென்றுவிட்டது. கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர், அடுத்த பிரதமர், நாட்டின் எதிர்காலம் என்றெல்லாம் சிலாகிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளால் பெரிய அளவுக்கு கூட்டத்தை சேர்க்க முடியவில்லை.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி விமான நிலையத்தில் இருந்து சித்ரா சந்திப்பில் தான் முதலில் பேசினார். அந்த சந்திப்பில் காங்கிரஸ் கொடி கிழிந்து கந்தலாகியிருந்தது. அதைக் கூட காங்கிரஸார் சரிசெய்யவில்லை. ராகுலின் பயணம் முழுவதும் இதேபோலதான் காங்கிரஸ் கட்சியினர் சொதப்பியிருந்தனர்.

ராகுல் காந்திக்கு ஏற்பாடு செய்திருந்த வாகங்களும் சுமார்ரகம்தான். சமீபத்தில் கட்சி தொடங்கியவர்களே பிரமாண்ட பிரசார வாகனங்களில் வலம் வர, ராகுலுக்கு Tata Winger மற்றும் Kia Carnival வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மக்களிடம் பேசும்போது ராகுல் மிகவும் சிரமப்பட்டுதான் அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார். பல இடங்களில் அவருக்கு மைக் வசதி கூட செய்துத்தரவில்லை. ராகுலுக்கும், அவரது பேச்சை மொழிபெயர்ப்பவர்களும் ஒரே மைக்கில்தான் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

வாகனத்தில் சிரமப்பட்டு ஏறும் ராகுல்

தொழில் அமைப்பினருடனான சந்திப்பில் ராகுல் அடித்த பந்துகள் எல்லாமே சிக்ஸர் தான். ஒவ்வொருவரின் பிரச்னை குறித்தும் விரிவாக பேசி, அதற்கான தீர்வு குறித்தும் தெளிவாக விளக்கினார். சென்னையில் இருந்து வந்த ரகுநாதன் என்ற தொழிலதிபர், 'நீங்கள் ஒருவர் மட்டும்தான் எங்களின் நம்பிக்கை' என உருக்கமாக பேசினார்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும், ராகுலின் பேச்சில் தொழில்துறையினர் திருப்திடைந்துள்ளனர். இதற்கு முன்பு, தி.மு.க, மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க என்று பலரும் தொழில்துறையினரை சந்தித்தனர். ஆனால், ராகுல் அளவுக்கு தங்களது பிரச்னைகளை புரிந்து வைத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்பதுதான் தொழில்துறையினரின் பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது. அடுத்து சின்னியம்பாளையம் பகுதி பரப்புரையில் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் சொதப்பினர். மீண்டும் மைக் பிரச்னை எழுந்தது. ஒரு கட்டத்தில் ராகுல் பேசியது எதுவுமே மக்களுக்கு கேட்கவில்லை. மாற்று மைக்கை எடுத்து வந்தவர்கள், அதை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த கே.எஸ் அழகிரியின் கையில் கொடுத்துவிட்டனர்.

மைக் பிரச்னை

அவரும் அந்த மைக்கை ராகுலுக்கு கொடுக்கவில்லை. கடுப்பான மக்கள், 'இவர் பேசறத கேட்கவா நாங்க வந்தோம்..? மைக்கை அவர்கிட்ட கொடுங்கய்யா" என்று அர்ச்சனை செய்தனர்.

ஒரு கட்சியின் மாநில தலைவர் வந்தாலே, ஒன்றிய செயலாளர் முதல் அனைவரும் அவர் பின்னால் சென்று கொண்டிருப்பார்கள். ஆனால், ராகுல் பயணத்தில் அவரை சுற்றி, குறிப்பிட்ட மாநில நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். மாவட்ட தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் மட்டுமே தலை காட்டி சென்றுவிட்டனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், "ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், இந்தமுறை ராகுலின் பயணத்தில் மரியாதை நிமித்தத்துக்காக கூட தி.மு.க மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் வரவில்லை.

ராகுல் காந்தி வாகனம்

இந்த காரணங்களால், பெரியளவில் கூட்டம் கூடவில்லை. அதேபோல, ராகுலின் பயணத்தை வெற்றியாக மாற்றிவிடக் கூடாது என்று போலீஸாருக்கும் அஸைன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது போல. பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர், 'எங்க தலைவர் வரார்.. ரோடை பிளாக் பண்ணுங்க' என்று வாக்குவாதம் செய்தனர். கோவையில், போக்குவரத்தில் சிக்கி ராகுல் வாகனம் ஊர்ந்து சென்ற சம்பவங்களும் நடந்தன.

கோவையை கடக்கும்போது, ராகுல் டாப் கியர் போட்டார். படுகர் இன மக்களுடன் நடனமாடுவது, பேக்கரியில் தேநீர் சுவைத்தது, குழந்தைகளை கொஞ்சுவது, மக்களுக்கு கைக்கொடுத்து கட்டிப்பிடித்தது, செல்ஃபி எடுத்தது, நெசவாளர்களுடன் உணவு சாப்பிட்டு உரையாடியது என்று அடித்து ஆடினார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய 5 தலைவர்களின் சிலைகளுக்கும் மலர்தூவி மரியாதை செய்தார் ராகுல். அவரின் இந்த செயல் திராவிட கட்சிகளையும் திகைக்க வைத்தது. பிறகு ராகுல், அரச்சலூர் அருகேயுள்ள ஓடாநிலைக்குச் சென்று, அங்கிருந்த தீரன் சின்னமலை மணி மண்டபத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் ராகுல்

Also Read: `தமிழக மக்களிடமிருந்து இந்தியா கற்க வேண்டும்!’ - கோவையில் ராகுல் காந்தி

சமீபத்தில் ஓடாநிலைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட, தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்யவில்லை. கொங்கு சமுதாய மக்களின் அடையாளமாகச் சொல்லப்படும் தீரன் சின்னமலைக்கு, கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடியே மரியாதை செய்யவில்லை என சலசலப்பு இருக்கிறது. ஆனால், டெல்லியிருந்து வந்த ராகுல் காந்தி, தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார்.

ராகுல் காந்திக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது மொழிபெயர்ப்பு. அதுஇந்த முறையும் விடாத கருப்பாக துரத்தியது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தங்கபாலு செய்த பணியை, இந்தமுறை பல தலைவர்கள் சேர்ந்து செய்தனர். கோவையில் கே.எஸ். அழகிரிதான் ராகுலின் பேச்சை மொழி பெயர்த்தார். ராகுல் சொன்ன பல விஷயங்கள் அவருக்கு புரியவில்லை, 'என்ன சொன்னீங்க?' என்பது போலவே கேட்டுக் கொண்டிருந்தார். ராகுல், "எனக்கு உங்களின் (மக்களிடம்) Love and Affection மட்டும்தான் வேண்டும்" என்று சொன்னதை, "நீங்கள் என்னிடம் அன்பாகவும், பணிவாகவும் இருக்க வேண்டும்" என்று மொழிபெயர்த்தார் அழகிரி.

ராகுல் காந்தி வரவேற்பு

திருப்பூர் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடலை எம்.பி ஜெயக்குமார் மொழி பெயர்த்தார். ராகுல் சொன்ன பல விஷயங்களை அவர் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டார். இதை ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியே கண்டுபிடித்து, "வேறு மொழிபெயர்ப்பாளரே இல்லையா?" என்று கேட்டுள்ளார்.

ஈரோட்டில் மொழி பெயர்ப்பு பிரச்னை ஒருபடி மேலே சென்றுவிட்டது. ராகுல், "வணக்கம்" என்று சொன்னதை, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "அனைவருக்கும் வணக்கம்" என்று சொல்லி அட்டன்டெண்ஸ் போட்டார். சரி கட்சிக்காரர்கள்தான் சரியில்லையே என்று வெளியில் இருந்து முகமது இம்ரான் என்பவரை அழைத்து வந்தனர். ஆனால், அவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஜூரம் ஒட்டிக் கொண்டது. பல இடங்களில், "என்ன..? என்ன..? என்பது போல கேட்டவர், ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டுவிட்டார்.

ராகுல் காந்தி

தாராபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்தான் இந்தப் பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. அங்கு, ராகுலின் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் ஓரளவுக்கு நன்றாக மொழி பெயர்த்தார். ஒரு இடத்தில் ராகுல், "நாக்பூர் நிக்கர் வாலாக்கள். தமிழக அரசியலை தீர்மானிக்க முடியாது" என்று சொல்ல, பீட்டர் அல்போன்ஸ் அதை லிக்கர் என நினைத்துவிட்டு, "நாக்பூர் சாராய வியாபாரிகள்" என்று சொல்லி நானும் காங்கிரஸ்காரன் தான்யா என்று உணர்த்தினார்.

ஒருவழியாக பொதுக்கூட்டத்துக்கு சற்று கூட்டம் கூட்டிவிட்டனர். பொதுக்கூட்டத்தில் சில நிர்வாகிகளுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. தாராபுரம் எம்.எல்.ஏ காளிமுத்து, "எனக்கு சீட் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி" என்று அவரை வளர்த்துவிட்ட தலைவர்கள் பெயரையெல்லாம் சொல்ல, "தலைவரே மேடைல இருக்கறது ராகுல் ஜி. நீங்க. என்ன பேசிட்டு இருக்கீங்க.." மக்களே சிரித்துவிட்டனர். கடைசியாக மைக் பிடித்த ராகுல் காந்தி, " கடந்த மூன்று மாதங்களாக கவனித்து வருகிறேன்.. மோடி, சீனா என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட மறுக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

Also Read: கரூர்: மண்பானைச் சமையல்... குழந்தைகளுடன் செல்ஃபி! - ராகுல் காந்தியின் ஒரு நாள் விசிட்

மோடி பலவீனமானவர் என தெரிந்துதான் சீனா நம் பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது. 56 இன்ச் மார்பை கொண்ட மோடி இப்போது எங்கே சென்றார்?" என்று மோடியை பாய்ந்தடித்தவர், அ.தி.மு.க அரசையும் தாக்கினார். "மோடி சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதை இந்த அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார். அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள இவர்கள் தயாராக இருக்கின்றனர். தமிழக அரசை கட்டுப்பட்டுத்துவதன் மூலம் தமிழக அரசையும் கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார். தமிழ் மொழி, கலாசாரம் அவமானப்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று கூறினார். தனது பயணம் முழுக்கவே, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்கள் குறித்து மிகவும் பெருமையாக பேசினார் ராகுல்.

கரூர் சென்ற ராகுல், விவசாயிகளை சந்தித்தது, மண்பானை உணவு சாப்பிட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டார். டெல்லி புறப்படும் முன்பு, செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க கூட்டணி உறுதிபடுத்தி, கூட்டணி சர்ச்சைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டார். ராகுலின் பேச்சை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கவும் செய்கின்றனர். பல இடங்களில் இளைஞர்கள், "ராகுல் வி லவ் யூ" என்று தங்களது அன்பை வெளிப்படுத்திய சம்பவங்களும் நடந்தன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சொந்தக்கட்சியினரின் ஏற்பாட்டில் சொதப்பல், கூட்டணிக் கட்சிகளின் சப்போர்ட் இல்லை, ஆளுங்கட்சியின் அழுத்தம் ஒருபக்கம் என்று பல நெருக்கடிகளுக்கு மத்தியில், ராகுலின் பயணம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முழுகாரணம் ராகுல்காந்தி மட்டுமே. மக்களிடம் பழகிய அவரது அணுகுமுறை தான் காரணம். ஆனால், ராகுலின் முக்கியத்துவத்தை முதலில் உணர வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான். அவர்சொல்லும் கருத்துகளை மொழிபெயர்க்கக் கூட, திணறுபவர்களால், அவரை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.?



source https://www.vikatan.com/government-and-politics/politics/rahul-gandhis-kongu-belt-visit-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக