விஜய்சேதுபதி வித் வெற்றிமாறன்!
ஆனந்தவிகடனில் 1992-ல் வெளியான 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு படம் இயக்கிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். மாவோயிஸ்ட்டு பின்னணியைக் கொண்ட இந்தக்கதையில் பாரதிராஜாவும், சூரியும் நடிப்பதாக இருந்து சத்தியமங்கலத்தில் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால், பாரதிராஜாவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காததால் இப்போது அந்த கேரெக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங்கை முதலில் 40 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வெற்றிமாறன் ஸ்டைலில் கதைக்களம் இன்னும் விரிவடைவதால் படத்தின் ஷூட்டிங் இன்னும் நீளும் என எதிர்பார்க்கலாம். 'விசாரணை' போன்று மீண்டும் ஒரு படம் என்பதையே தன் நோக்கமாகக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் இந்தப்படத்தை திரைவிழாக்களுக்கான படமாகத்தான் இயக்கி, அவரே தயாரிக்கிறார். இந்தப்படம் முடிந்ததும் ஜூலையில் சூர்யாவோடு, 'வாடிவாசல்' படம் தொடங்குகிறார்.
சையது முஸ்தாக் கோப்பையை வெல்லுமா தமிழ்நாடு!
மீண்டும் சையது முஸ்தாக் அலி இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறது தமிழ்நாடு. ராஜஸ்தானை மிக எளிதாக வென்றுவிட்ட தமிழ்நாடு, இறுதிப்போட்டியில் பரோடாவை சந்திக்கிறது. அரையிறுதிப் போட்டியில் அருண் கார்த்திக் அடித்து வெளுக்க, பெளலிங்கில் அசத்தினார் முகமது. ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்நாடு அணிக்குத் திரும்பிய 34 வயது அருண் கார்த்திக்கின் இந்த இன்னிங்ஸ் தமிழ்நாடு அணியின் மிடில் ஆர்டருக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. இறுதிப்போட்டியில் பரோடாவை தமிழ்நாடு வெல்லும் என்பதே கணிப்பு. நாளை இரவு வரை பொறுத்திருப்போம்!
கபில்தேவின் 431!
27 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ம் ஆண்டு இதே ஜனவரி 30-ம் நாள் பெங்களூருவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 431 விக்கெட்கள் எடுத்து உச்சம் தொட்டார் கபில்தேவ். அவுட்ஸ்விங்கர்களால் எதிரியணினரை மிரட்டிய இந்தியாவின் மிகச்சிறந்த பெளலரான கபில்தேவ், இலங்கையின் டான் அனுராஶ்ரீரியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையைப் படைத்தார்.
'வலிமை' அப்டேட்!
இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது 'வலிமை' ஷூட்டிங். இன்னும் சில நாட்களே ஷூட்டிங் மிச்சமிருக்கும் நிலையில் பைக் ஸ்டன்ட் காட்சிகள் படம்பிடிக்கப்பட இருக்கின்றன. சூப்பர் பைக்கில் பறந்து பறந்து எதிரிகளை வேட்டையாட இருக்கிறாராம் அஜித். ஜூன் மாதவாக்கில் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறது 'வலிமை' டீம்!
காற்றிலேயே மொபைல் சார்ஜ்!
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி 'Air Charge' என்கிற தொழில்நுட்பத்தை முதல் முறையாக உலகிற்கு காட்சிபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் காற்றிலேயே போன்களை சார்ஜ் செய்ய முடியும். ஷாவ்மி இப்படி அதன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மோட்டோரோலா நிறுவனமும் இதே போன்றதொரு தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருவதாக அறிவித்திருக்கிறது. இதை 'Motorola One Hyper' என அழைக்கிறது அந்நிறுவனம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/valimai-update-to-vetrimaaran-vijay-sethupathy-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக