தன் வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுக்காலம் சிறை மற்றும் 24 பிரம்படிகள் தண்டனையாக விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
நடுத்தர வயதுடைய அந்தப் பெண் மலேசியாவைச் சேர்ந்தவர். 12 வயது மகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2015-ம் ஆண்டு கணவரைப் பிரிந்தார். ஒரு வருடம் தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த அந்தப் பெண், 2016-ம் ஆண்டு வேறோர் ஆணைத் திருமணம் செய்துகொண்டார். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஆண் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில், அந்தப் பெண் மட்டும் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு, தான் இரண்டாவதாகத் திருணம் செய்த ஆண் மீது அந்தப் பெண் ஒரு பகீர் புகார் கொடுத்தார். "2018 ஜனவரி 5-ம் தேதி முதல் 2020 பிப்ரவரி 24-ம் தேதி வரை தன் 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்" என்று நீண்ட அந்தப் புகாரைப் பார்த்து மலேசிய காவல்துறையினர் உறைந்து போயினர். பயத்தின் காரணமாகத் தன் வளர்ப்பு தந்தை தனக்கு இழைக்கும் கொடுமையைத் தன் தாயிடம் கூறாமல் தவிர்த்து வந்த சிறுமி, ஒருமுறை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அத்தனை உண்மைகளையும் விவரித்திருக்கிறார். அதன்பிறகே உண்மை வெளியுலகுக்குத் தெரிந்து சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானது. ஒவ்வொரு குற்றத்துக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் 105 குற்றங்களுக்கு 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் வழங்க வேண்டும் என அதிரடியான தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி குணசுந்தரி, "சிறையில் இருக்கும்போது நீங்கள் மனம் திருந்துவீர்கள் என நம்புகிறேன். இந்தத் தண்டனை குறைந்தபட்சம்தான் என்றாலும், உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது போதுமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று குறிப்பிடுள்ளார். இந்தத் தீர்ப்பு மலேசியாவில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி குணசுந்தரி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/women/malaysia-man-jailed-for-1050-years-for-sexual-violence
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக