Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 2 | கதவாயிருந்து காக்கும் தெய்வம்... அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பசாமி!

மதுரைக்கு ஒரு தனி குணம் உண்டு. அது யாரையும் பேதம் சொல்லிப் பிரிக்காத குணம். இந்த மண்ணின் தெய்வங்களில் கூடப் பிரிவினை இல்லை. மதுரை மண்ணின் தெய்வங்கள் எல்லாம் ஒன்றோடொன்று உறவுகளாகப் பிணைந்தவை. இங்கே சைவ வைணவச் சண்டை கிடையாது. சிறு தெய்வ - பெருந்தெய்வ பேதம் கிடையாது. மக்கள் அனைவருக்குமான கோயில்களாகவே பெரும்பாலான கோயில்கள் திகழும். அதற்கு ஒரு நல்ல உதாரணம் அழகர்கோயிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதி. சந்நிதி என்று ஓர் ஆலயத்தின் ஒரு கூறுபோலச் சொன்னாலும் ஒரு பேராலயத்தின் சரித்திரம் போன்ற தன்மையைத் தன்னகத்தே கொண்டது பதினெட்டாம்படி கருப்பசாமி சந்நிதி.

கருப்பசாமி சந்நிதி

மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்புரம் முதலியன பூசி மாலையும் மலர்களும் சாத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்தக் கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள். அருள்வந்து ஓர் ஆண் ஆடுகிறார். பக்திப்பரவத்தில் எல்லோரும் கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர். கதவின் முன்பாகவே வழிபாடுகள் நிறைவடைகின்றன.

மங்களகரமான அந்தக் கதவுதான் பதினெட்டாம்படிக் கருப்பசாமி. பல இடங்களிலும் உருவமாய் கோயில்கொண்டிருக்கும் கருப்பசாமி இங்கு அருவுருவமாய் அருள்பாலிக்கிறார்.

கருப்பசாமி எப்படியிருப்பார்?

தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை, கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி. தன் தங்கை ராக்காயிக்கும் பல பக்தர்களுக்கும் இதே கோலத்தில் காட்சியளித்து அருள்புரிந்திருக்கிறார் என்கின்றன நாட்டுப்புறப் பாடல்கள்.

கீழக்குயில்குடி, மதுரை சிம்மக்கல் காமட்சியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கிழக்குக் கோபுரத்தை அடுத்துள்ள கருப்பசாமிகோயில் ஆகிய தலங்களில் இரண்டு கைகளோடு நின்றகோலத்தில் நெற்றியில் திருமண் இட்டு தலையில் உருமால் கட்டி, வீச்சரிவாள் ஏந்தி, தொங்கவிடப்பட்ட கையில் கதாயுதம் தாங்கி கொசுவம் வைத்துக் கட்டிய கச்சை வேட்டி, மிகப்பெரிய தொந்தி, காலில் செருப்பு என்று காட்சி தருகிறார் இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பசாமி. ஆனால் இந்தக் கோலத்தில் எல்லாம் இல்லாமல் அழகர்மலையில் கோயிலின் கதவாக நின்று அருள்புரிகிறார் இவர்.

கருப்பசாமி கோயில்

பூட்டிய கதவு என்றால் பாதுகாவல் என்று பொருள் அல்லவா... ஆம், கருப்பசாமி அழகர்கோயிலின் பாதுகாவலர்தான். அழகர்கோயில் சொத்துகள் பெரும் களஞ்சியத்தைப் போன்றவை. 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற சொலவடை மதுரைப் பகுதிகளில் பிரசித்தம். இந்தப் பெரும் செல்வத்தைப் பாதுகாக்கப் பெரும் காவலன் தேவை அல்லவா... அவர்தான் கருப்பசாமி. தினமும் ஆலயம் மூடியதும் சாவியை அழகர்கோயில் சந்நிதியில் வைத்து வழிபடுவார்களாம். அதேபோன்று சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நிதிக்குதான் அழகர் வருகிறார். அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம் செய்ய நூபுர கங்கைத் தீர்த்தமே தினமும் கொண்டுவரப்படும். கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

கருப்பசாமி மிகவும் கண்டிப்பான தெய்வம். இவரிடம் ஏமாற்ற முடியாது. பொய் சாட்சி சொல்லவும் முடியாது. சுற்றியிருக்கும் கிராமங்களில் தீர்க்க முடியாத வழக்குகளை கருப்பன் முன்பாக சாட்சி சொல்லச் சொல்லித் தீர்த்து வைப்பதுண்டாம். யாராவது கருப்பசாமியின் சந்நிதியின் பொய் உரைத்தால் கடும் கோபம் கொண்டு தண்டித்துவிடுவாராம் கருப்பசாமி.

எப்போதும் மூடியிருக்கும் சந்நிதிக் கதவுகள் இரண்டு முறைதான் திறக்கப்படும். ஒன்று பிரம்மோற்சவத்தின்போது சக்கரத்தாழ்வார் எழுந்தருள்வதற்காக... மற்றொன்று யாராவது சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்கும்போது... மற்ற நேரங்களில் எல்லாம் சந்நிதியின் கதவுகள் மூடியே இருக்கும்.

தினமும் இரவு பெருமாளுக்கு சாத்திய மாலையும் சமர்ப்பிக்கப்பட்ட பிரசாதமும் கருப்பசாமிக்கும் சமர்ப்பிக்கப்படும். ஆடிமாத 8, 9-ம் நாள் திருவிழாக்களின் போதுமட்டும் இந்த சமர்ப்பணம் இருக்காதாம். காரணம் அந்த நாள்களில் பக்தர்கள் கருப்பசாமியின் சந்நிதியிலேயே பலியிட்டுப் படையல் போடுவார்களாம். ஆடி அமாவாசை அன்று கருப்பசாமிக்கு இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சேவிப்பார்கள்.

அழகர்கோயில்

கருப்பசாமி இங்கு குடியேறிய கதை சுவாரஸ்யமானது. கள்ளழகரின் அழகு உலகப் பிரசித்தம். அதனால் அவரின் அழகை (சக்தியை என்றும் சொல்லலாம்) களவாடிச் செல்ல மாந்திரீகர்கள் முடிவு செய்தனர். மந்திர மை ஒன்றை இட்டுக்கொண்டு இவர்கள் ஆலயத்துள் நுழைவார்களாம். அந்த மை இவர்களை மற்றவர்கள் காணாது மாயமாக்கும். இரவு ஆலய நடை சாத்தியபிறகு அழகரின் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடத்துக்குள் நிரப்பும் முயற்சியை செய்துவந்தார்கள் மாயாவிகள். இதைப் பெருமாள், அர்ச்சகர் ஒருவரின் கனவில் சென்று சொல்லிவிட்டார். மறுநாள் அர்ச்சகர், இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார். சூடான தளிகையை ஆவிபறக்கக் கொண்டுவந்து சுவாமி சந்நிதியில் வைத்தாராம். பின்பு உடனே வெளியே வந்து கதவை வெளிப்புறமாக அடைத்துவிட்டாராம். அந்த ஆவியின் சூட்டில் மறைந்திருந்த மாயாவிகள் கண்களிலிருந்த மை கரையத் தொடங்கியதாம். மை கரைந்ததும் அவர்கள் உருவங்கள் வெளிப்பட்டன. மக்கள் அவர்களைச் சூழ்ந்து பிடித்துக்கொண்டார்கள்.

Also Read: பிக்பாஸில் தொ.பரமசிவனின் `அழகர் கோயில்' பற்றி ஏன் பேசினார் கமல்?!

பதினெட்டுபேரையும் அங்கேயே படிக்கு ஒருவர் எனப் பலிகொடுத்தனர். அவர்கள் மாந்திரீகத்துக்காகத் தங்களோடு அழைத்துவந்த தேவதைதான் கருப்பசாமி. தன்னை ஏதும் செய்துவிட வேண்டாம் என்றும் தான் அழகரின் அழகிற்கு அடிமை என்றும் சொல்லியதாம் அந்த தேவதை. 'இனிக் காலம் முழுவதும் அழகருக்குப் பாதுகாவலனாக இருப்பேன்' என்று வாக்குக் கொடுத்தாராம் கருப்பசாமி. இன்றுவரைக்கும் அந்த வாக்கை மெய்ப்பிக்கிறார் கருப்பசாமி என்கிறார்கள் பக்தர்கள்.

அழகர்மலை

பதினெட்டாம்படி கருப்பசாமி வழிபாடு தொடங்கிய காலம் எது?

அழகர்மலையில் பதினெட்டாம்படிக் கருப்பு வழிபாடு குறித்து பழந்தமிழ் நூல்களில் காணப்படவில்லை. பெரும்பாலும் 17-ம் நூற்றாண்டில் இந்த வழிபாடு தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழர் மானுடவியல் ஆய்வாளரான தொ.பரமசிவன் தன் ஆய்வு நூலில், "கோபுரவாசலில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் பிந்தியது கி.பி. 1608 பொறிக்கப்பட்ட சதாசிவராயர் கல்வெட்டாகும். அக்காலம்வரை இவ்வாசல் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஏனெனில் மக்கள் நடமாடும் இடங்களில் அவர்கள் பார்வையில் படும்படிக் கல்வெட்டுகளைப் பொறிப்பதே வழக்கம். எனவே இந்நிகழ்ச்சி அந்தக் காலத்துக்குப் பின் நடந்ததாகவே இருக்க வேண்டும். கி.பி 1709-ல் தரப்பட்ட வெள்ளைத் தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலையில் 'பதினெட்டாம்படி வாசல்' என்ற தொடர் காணப்படுவதால் இந்த நிகழ்ச்சி இதற்கு முந்நிய காலத்தில் நடந்திருக்க வேண்டும்" என்கிறார்.

அதாவது 1608 -1709 க்குள் மாந்திரீகர்கள் அல்லது கள்வர்கள் வந்து அழகரின் சக்தி அல்லது செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்ல முயன்றனர் என்றும் ஊர் மக்கள் பிடித்து அவர்களை பலியிட்டனர் என்பதாகவும் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அழகர்மலை ஆன்மிக பூமி. அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில். சர்வ சமயங்களையும் பக்தி என்னும் நேர்கோட்டில் இணைக்கும் தலம். அதற்கு மகுடம் வைத்தாற்போல அடிவாரத்தில் தொடக்கப் புள்ளியாக நிற்பவர் பதினெட்டாம்படி கருப்பசாமி. இவரைப் பணிந்துகொண்டால் மனபயம் அகல்வதோடு சகல செல்வங்களும் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்.

கருப்பசாமி நம் மண்ணின் தெய்வம். மதுரை செல்லும்போது நம் மூதாதையர் வழிபட்ட இந்தக் கருப்பசாமியைக் கண்டு வணங்குவோம்.


source https://www.vikatan.com/spiritual/temples/madurai-the-history-and-the-glorious-significance-of-pathinettampadi-karuppu-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக