புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க ஆரம்பித்திருப்பதால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அணிமாறும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகயில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்டவர்கள் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஏ.எஃ.டி திடலில் இன்று,`மலரட்டும் தாமரை.. ஒளிரட்டும் புதுவை' முழகத்துடன் பா.ஜ.க-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான நிர்மல் குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜே.பி.நட்டா, ``பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார். புதுச்சேரியில் 100% மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியை ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காரைக்காலில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஜிப்மர் மருத்துவமனை உருவாக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி ஜிப்ரில் இரண்டாவது பிரிவைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
நாட்டின் 130 கோடி மக்களையும் காப்பாற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். முதல்வர் நாராயணசாமி அவர்களால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி 70% வீழ்ச்சியடைந்திருக்கிறது அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது ஜார்கண்ட் மாநிலத்துக்கு 5,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரி மாநிலத்துக்கு இருந்த கடனை தள்ளுபடி செய்யாமல் துரோகம் இழைத்துவிட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 23-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும். அப்போது புதுச்சேரியில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதேபோல புதுச்சேரியில் இதுவரை நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல், பா.ஜ.க-வின் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும்.
Also Read: பா.ஜ.க-வின் புதிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா?
குறிப்பாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதை புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்வார்கள். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, அரசு மற்றும் கூட்டுறவு ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்துடன், நிலுவையில் உள்ள சம்பளமும் வழங்கப்படும். மூடிக்கிடக்கும் அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்படும்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-will-win-more-than-23-seats-in-puducherry-says-its-chief-jp-nadda
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக