Ad

வெள்ளி, 29 ஜனவரி, 2021

`500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா?’ - டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன்

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.

Delhi Farmers Protest

Also Read: விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?

விவசாயிகளின் ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்க, அரசுக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டே அதில் ஊடுருவி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் போராட்ட குழுவினர் குற்றம்சாட்டினார்கள். இது ஒருபுறமிருக்க, டெல்லி போராட்டத்திலிருந்து சில விவசாய சங்கங்கள் வெளியேறி விட்டதாகவும், போராடும் விவசாய சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது உண்மையல்ல. ஒற்றுமையாகப் போராட்டம் தொடர்வதாகச் சொல்கிறார், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இவர், ``மிகுந்த அர்ப்பணிப்போடு லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ஒற்றுமையோடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு இப்போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பா.ஜ.க-வின் சதி வலையாலும் அவர்களது தூண்டுதலாலும் இரண்டு சங்கங்கள் மட்டுமே வெளியேறி இருக்கிறது.

இளங்கீரன்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகித்த வி.எம்.சிங், போராட்டக்களத்தில் இருந்தபோது, அரசுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் என்பதால் கடந்த டிசம்பர் 12-ம் தேதி நீக்கப்பட்டார். பிறகு, மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், மீண்டும் சேர்க்கப்பட்டார். ஊடகங்களைச் சந்திக்க கூடாது, தனிப்பட்ட முறையில் அறிக்கைகள் கொடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளோடுதான் சேர்த்துக் கொள்ளப் பட்டார். டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் காரணம் காட்டி தற்போது அவரது சங்கமும், பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு விவசாய சங்கமும் இப்போராட்டத்திலிருந்து வெளியேறியுள்ளன. அவருடைய முந்தையகால நடவடிக்கைகளை வைத்தே, அவர்கள் தற்போது வெளியேறியிருப்பதற்கான நோக்கத்தை எளிதாக அனைவருமே உணர முடியும்.

இப்படிப்பட்டவர்கள் வெளியேறியதை வைத்தே, டெல்லி போராட்டமே பிளவுபட்டதாகப் பொய்யான தகவல் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. ஆனால், அங்கு களத்தில் இருப்பவர்களிடமிருந்து வரும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் 500 விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சங்கங்கள் மட்டுமே தற்போது வெளியேறியுள்ளன. இதை எப்படி பிளவாக கருத முடியும்? அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள விவசாய சங்கங்கள் மிகுந்த மன உறுதியோடும் அர்ப்பணிப்போடும் ஒற்றுமையோடு டெல்லி போராட்டத்தைத் தொடருவோம்’’ என்று சொல்கிறார் இளங்கீரன்.

இந்நிலையில், டெல்லி போராட்டத்திலிருப்பவர்களை அப்புறப்படுத்தும் முனைப்பில் அரசாங்கமும்... மேலும் மேலும் போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் முனைப்பில் விவசாய சங்கங்களும் தொடர்ந்து முழுமூச்சுடன் இறங்கியுள்ளன. இது தலைநகரை, தொடர்ந்து பரபரப்பிலேயே ஆழ்த்தி வைத்துள்ளது.



source https://www.vikatan.com/news/agriculture/farmer-activist-ilangeeran-speaks-about-delhi-farmer-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக