Ad

சனி, 30 ஜனவரி, 2021

சசிகலா : மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... காரில் அ.தி.மு.க கொடி! - அரசியல் ஆட்டம் ஆரம்பம்?

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சசிகலா

தொடர் சிகிச்சையில் சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக அவருக்கு கொரோனா அறிகுறி இல்லாமல், உடல் நிலை சீராக இருந்த காரணத்தால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, `சசிகலா 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார். சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவதை ஒட்டி மருத்துவமனைக்கு டிடிவி தினகரன் வந்தார். சசிகலாவை அழைத்து செல்ல தனியாக கார் தயார் செய்யப்பட்டிருந்தது.

இந்த காரின் முகப்பில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டிருந்தது. சுமார் 12 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் சென்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைக்குப் பின் அ.தி.மு.க வை மீட்டெடுப்பதே சசிகலாவின் முதல் பணியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து வரும் நிலையில் காரில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டுள்ளது, அதனை உறுதி படுத்தும் வகையில் இருக்கிறது.

இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், சசிகலாவுக்கு அ.தி.மு.க கொடியை பயன்படுத்த உரிமை இல்லை. அ.தி.மு.க கொடி சசிகலா காரில் இருப்பது சட்டப்படி தவறு என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sasikalaa-discharged-from-hospital-her-car-has-admk-flag

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக