Ad

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

`டிராக்டர் பேரணியில் வன்முறை... திட்டமிட்ட நாடகம்!’ - குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி; மறுக்கும் பா.ஜ.க

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூறி, பல்வேறு விவசாயச் சங்கங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுப் போராடிவருகின்றன. இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு - விவசாயிகள் இடையில் நடத்தப்பட்ட பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சௌரப் பரத்வாஜ்

இந்நிலையில் தான் குடியரசு தினத்தன்று நிகழ்ந்த டிராக்டர் பேரணி, எதிர்பாராத விதமாக சில வன்முறை சம்பவங்களால் கலவரமானது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த விவசாய சங்கத் தலைவர்களின் மீது வழக்குகள் பதிவானது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு விவசாய சங்கத்தினர், `போராட்டம் திசை மாறிவிட்டதாக’ போராட்டத்திலிருந்து வெளியேறினர். பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றம் நோக்கிய பேரணியானது ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்போது குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் பா.ஜ.க. செயல்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரான சௌரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு பா.ஜ.க-வினரே முக்கிய காரணம். அவர்களே தேச விரோதிகள் போன்று செயல்பட்டு போலீஸாருடன் கைகோர்த்து இதுபோன்றதொரு செயலை அரங்கேற்றி, விவசாயிகளின் அறப்போராட்டத்தில் கேடு விளைவிக்க முயல்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மிகவும் அமைதியான முறையிலேயே தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து பா.ஜ.க.வின் ஆதரவாளர். போராட்டத்தின் போது போலீஸாரின் உதவியுடனே செங்கோட்டையை நோக்கிச் சென்றுள்ளார். அங்கே அவரது தூண்டுதலாலேயே தேசிய கொடி அவமதிக்கப்பட்டு சீக்கியர்களின் கொடி நாட்டப்பட்டது. இவை அனைத்தும் பா.ஜ.க-வினரும், போலீஸாரும் இணைந்து திட்டமிட்டு நடத்திய நாடகம்” என்று கட்டமாக விமர்சித்தார்.

விவசாயிகள்

மேலும், ``நேற்றைய தினம் பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் டெல்லியின் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் இடத்திற்கே சென்று, அவர்களிடம் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நிகழும் இடங்களில் போலீஸார் தடுப்புகள் அமைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி உள்ளே நுழைந்தனர்?!”, என்று கேள்விஎழுப்பியுள்ளார்.

Also Read: விவசாயிகள் போராட்டம்: குடிநீர், மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு... டெல்லி எல்லைகளில் நடப்பது என்ன?

இதேபோல், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய நிர்வாகியான சஞ்சய் சிங், “குடியரசு தினத்தன்று டெல்லியின் பெரும்பாலான இடங்களில் போராட்டாம் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது. போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாகவே பா.ஜ.க.-வினர் வன்முறையை தூண்டிவிட்டுள்னர். விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஆம் ஆத்மி கட்சியினரும் சரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி, எங்களது இறுதி மூச்சு இருக்கும் வரை விவசாயிகளுக்கு துணை நிற்போம்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள டெல்லி பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, வன்முறைக்கு பா.ஜ.கவினர் காரணம் என்கிற குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். ``கடந்த இரண்டு மாதங்களாக எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின் போது ஆம் ஆத்மியினரே பெருமளவில் தென்பட்டனர். அதனால் வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் அவர்களே. சமீபகாலமாகவே ஆம் ஆத்மி கட்சி, அராஜக கட்சியாக செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Also Read: `500 சங்கங்களில் 2 சங்கங்கள் வெளியேறினால் அது பிளவா?’ - டெல்லி போராட்டம்... கொதிக்கும் இளங்கீரன்



source https://www.vikatan.com/government-and-politics/politics/aap-says-republic-day-violence-was-planned-by-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக