அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவரான, 74 வயதாகும் ஜேனட் எலன் அந்நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராகிறார். இதற்கான ஒப்புதலை அமெரிக்க செனட் அளித்தது.
அமெரிக்க நிதி அமைச்சராக ஜேனட் எலனை நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. சபையின் தலைவரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடந்த இந்த வாக்கெடுப்பில், ஜேனட் எலன் நியமனத்துக்கு ஆதரவாக 84 உறுப்பினர்களும் எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அதைத் தொடர்ந்து ஜேனட் எலனை அமெரிக்க நிதி அமைச்சராக நியமித்து செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே நிதி மந்திரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை ஜேனட் எலன் பெறுகிறார். அவர் விரைவில் முறைப்படி பதவி ஏற்பார்.
உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் எலன், பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பாடம் நடத்தியுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, திறமையால் தன்னை நிரூபித்தவர். அமெரிக்காவில் வேலையின்மை மற்றும் பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவர் வகுத்த நிதிக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.
இதையடுத்து, அமெரிக்க செனட் சபையில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் எலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும், அதை குடியரசு கட்சியினரும் வரவேற்றனர். மேலும், அமெரிக்க பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் எலனின் வழிகாட்டுதல்கள், நிதிக் கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997-ம் ஆண்டுவரை ஜேனட் எலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபராக க்ளின்டன் இருந்தபோது, அவருக்கு பொருளாதார ஆலோசகராக ஜேனட் எலன் பதவி வகித்துள்ளார்.
மேலும், 2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்துள்ளார். அடுத்து 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்த எலனுக்கு, ட்ரம்ப் ஆட்சியில் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இப்போது, செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட ஜோ பைடனின் 3வது மந்திரி சபை உறுப்பினர் ஆகியிருக்கிறார். அமெரிக்க பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் எலனின் வழிகாட்டுதல்கள், நிதிக் கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எலனுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அதிபர் ஜோ பைடன், 1.9 டிரில்லியன் அமெரிக்க மீட்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இதை மேற்கொள்ளும் மிகப் பெரிய வேலை எலனின் கையில். அவரால்தான் அதை திறம்படச் செய்யமுடியும் என்பதே பைடனின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால்தான் நிதியமைச்சர் பொறுப்பு அவரைத் தேடி வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பெரும் பொறுப்புகளை தங்கள் கைகளில் ஒப்படைக்கும் நம்பிக்கையை, தங்கள் உழைப்பாலும் அறிவாலும் ஏற்படுத்திவரும் முன்னோடி பெண்களுக்கு வணக்கங்கள்.
- ஆனந்தி ஜெயராமன்
source https://www.vikatan.com/news/international/janet-yellen-was-sworn-in-as-us-first-woman-treasury-secretary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக