Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

ரூ.750 மற்றும் அறியாமை... ஏழைகளிடம் `கோவாக்சின்' டிரையல் ... போபாலில் நடந்தது என்ன? #LongRead

கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்துக்கான சோதனையில் ஈடுபடுத்தப்பட்டோர், தங்களுக்குத் தடுப்பு மருந்து குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் போபாலைச் சேர்ந்தவர்கள். கோவாக்சின் சோதனைக்காக இவர்கள் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டவர்கள். அனைவருமே ஏழைகள். அவர்களுக்கு தலா ரூ. 750 கட்டணம் தரப்படும் என்று கூறி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, தாங்கள் எதற்காக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம் என்றுகூட சரியாகத் தெரிவிக்கப்படவில்லை. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Corona Vaccine

போபாலில் இப்படி தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான சிங் பரிஹாருக்கு வயது 74. இவருக்கு சில நாள்களாகவே காய்ச்சல் இருந்துள்ளது. உடல் நடுக்கமும் இருந்துள்ளது. அதையும் தாண்டி இவர் டிசம்பர் கடைசியில் நடந்த பரிசோதனைக்கு சென்றுள்ளார். தனக்குத் தடுப்பு மருந்துதான் கொடுக்கப்படுவதாக இவர் நினைத்துள்ளார். தடுப்பூசி பரிசோதனை என்று அவருக்குத் தெரிவிக்கப்படவில்லையாம். அவருக்குப் பக்க விளைவுகள் அதிகமாகி பாதிக்கப்பட்டுள்ளார்.

``ஊசி போடும்வரை எனக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை. ஆரோக்கியமாகவே இருந்தேன்" என்று சிங் பரிஹார் `இந்தியா ஸ்பெண்டு'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டு வந்த பிறகு உடல்நல பாதிப்பு ஏற்படவே, மருத்துவமனைக்குத் தகவல் தருமாறு பரிஹார் தன் மகனிடம் கூறியுள்ளார். மகனுக்குக் கடந்த 5 மாதமாக வேலை இல்லையாம். இதனால் செல்போனில் பேலன்ஸ் இல்லாமல் போன் செய்ய முடியாத நிலை. இதனால் மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க முடியாமல் போயுள்ளது. இன்னொரு பக்கம், இவரை தடுப்பூசி பரிசோதனைக்கு அழைத்துப்போன மருத்துவமனையினர் இவரை தொடர்ந்து கண்காணிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பரிஹார் கூறுகையில், ``டிசம்பர் மாதம் ஒரு டிரக் வந்தது. லௌடு ஸ்பீக்கர் மூலம், `யாராவது தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் வரலாம். ஆளுக்கு ரூ.750 பணம் தரப்படும்' என்று அறிவித்தனர். அருகில் உள்ள பீப்பிள்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஊசி போடுவார்கள் என்றும் கூறினர். இதையடுத்து நாங்கள் போனோம். எனக்குப் பணம் தேவைப்பட்டதால் நான் போனேன்" என்றிருக்கிறார்.

வடக்கு போபாலில் உள்ள ஒரியா பாஸ்தி, கரீப் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேரிடம் `இந்தியா ஸ்பெண்ட்' பேட்டி எடுத்தது. அனைவரும் என்ன நடந்தது என்று விளக்கினர்.

பரிஹாருக்கு போடப்பட்டது கோவாக்சின் டிரையல் தடுப்பு மருந்து. அவசரகாலத்தில் மட்டுமே பயன்படுத்த இந்த மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பரிசோதனைகள் இன்னும்கூட முழுமையாக முடியவில்லை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்தை, தனியார் நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது.

COVID-19 vaccine

கோவாக்சின் மருந்துக்கான டிரையலில் பல முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, `இந்தியா ஸ்பெண்ட்' அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டது. டிரையலுக்குப் போன மக்கள் வசிப்பது, ஏழ்மையான பகுதி. பலருக்கு, தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டோம் என்றுகூடத் தெரியவில்லை. உண்மையான தடுப்பூசியே தங்களுக்குப் போடப்படுவதாக அவர்கள் நினைத்துள்ளனர். பணம் தருகிறார்களே என்று இவர்கள் போய் ஏமாந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். கொடுத்த விண்ணப்பத்தை படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மருந்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள், பாதிப்புகள் குறித்து தங்களுக்கு விளக்கப்படவில்லை என்று இம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்னொரு பக்கம் இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் தருகையில், பாதிக்கப் பட்டோரின் பிரச்னைகள் குறித்து தாங்கள் அறிந்து வைத்துள்ளதாகவும், அதே நேரம் பலரிடமும் செல்போன் இல்லாத காரணத்தால் டிரையலுக்குப் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அறிய முடியவில்லை என்றும் விளக்கியுள்ளது. மேலும், பாதிப்பு ஏற்பட்டதும் பலர் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 7-ம் தேதி, டிரையலுக்காக 26 இடங்களைச் சேர்ந்த 25,800 தன்னார்வலர்களைத் தேர்வு செய்துள்ளதாக, பாரத் பயோடெக் அறிவித்தது. இவர்களிடம் 3-வது கட்ட டிரையல் நடக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. முதல் இரு கட்ட டிரையலில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போபாலில் நடந்த டிரையலை `பீப்பிள்ஸ் பல்கலைக்கழகம்' நடத்தியது. இந்த டிரையலில் பங்கேற்ற பலரும் போபால் விஷ வாயு சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள். பலருக்கு வேலை இல்லை. வறுமையில் வாடுபவர்கள் இவர்கள். வருமானவே இல்லாமல் வாழ்ந்து வருவதால்தான் பணம் தருவதாகக் கூறியதும் டிரையலுக்கு போயுள்ளனர். 1984-ம் ஆண்டு காஸ் கசிவுக்குப் பிறகு, இங்கு தண்ணீர் கெட்டுப் போய்விட்டது. குடிக்கக்கூட இங்கு தண்ணீருக்குப் பஞ்சம் உள்ளது.

போபாலின் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர் வைஜெயந்தி. இவரின் கணவர் தீபக் மராவி, டிரையலுக்குப் போய்விட்டு வந்த பின்னர் உடல் நலம் பாதித்து மரணமடைந்துவிட்டார். ஒற்றை ரூம் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார் வைஜெயந்தி. தன் கணவரின் மரணம் குறித்து அவர் கூறுகையில், ``விஷம் தாக்கி என் கணவர் இறந்துவிட்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. தடுப்பூசி அவருக்கு விஷமாகிவிட்டது. இந்த மரணம் தொடர்பாகத் தடுப்பூசி போட்ட குழுவைச் சேர்ந்த யாருமே விசாரிக்க வரவில்லை" என்று தெரிவித்தார்.

மராவிக்கு பரிசோதனை நடந்தது உண்மைதான் என்று பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த மரணத்துக்கும், தடுப்பு மருந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அது கூறியுள்ளது. அதே நேரம், அவரது மரணத்துக்கும், டிரையலுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது பாரத் பயோடெக்.

மராவியும் பரிஹாரும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கொடுத்த ஒப்புதல் சான்றிதழில் தங்களது குடும்பத்துக்கு இதுகுறித்துத் தெரிவித்ததாகக் கூறவில்லை. உடல் நிலை பாதித்த பின்னர்தான் தங்களது குடும்பத்தினரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளனர்.

பரிஹார் கூறுகையில், ``தடுப்பூசி போட்டபோது நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். எல்லோருமே என்னை மாதிரி ஏழைகள்தாம். வசதி படைத்த யாருமே அங்கு இல்லை" என்றார். இவர் தற்போது இந்த மாதம் போட வேண்டிய 2-வது ஊசிக்கு, தான் போகப்போவதில்லை என்று சொல்கிறார்.

`இந்தியா ஸ்பெண்டு'க்கு பேட்டி அளித்த பலரும் கூறுகையில் தங்களுக்கு (பரிசோதனை வெற்றியடைந்த) நிஜமான தடுப்பூசி போடப்படுவதாகவே தாங்கள் கருதியதாகக் கூறியுள்ளனர். ``எங்களுக்குப் படிக்கத் தெரியாது. எனவே, எங்களிடம் காட்டப்பட்ட பேப்பரில் என்ன இருந்தது என்று தெரியாது. ஆனாலும், அவர்கள் கேட்டபடி கையெழுத்துப் போட்டோம்" என்று கூறுகிறார் ராம் சிங் அஹிர்வால் என்பவர்.

Also Read: COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்; ஆனால் காரணம் அனபிலாக்ஸிஸ் அல்ல... மருத்துவ விளக்கம்!

ஆனால், டிரையலுக்கு வருவோரிடம் அது தொடர்பாக உரிய முறையில் விளக்கப்பட வேண்டும்; ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் அதுதொடர்பாக எப்படி விளக்க வேண்டும் என்றும் சட்டத்தில் வழிகாட்டப்பட்டுள்ளது. அதுபோன்ற நேரத்தில் படிப்பறிவு கொண்ட ஒருவரை ஊசி செலுத்திக்கொள்பவர் அருகில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதல் பெறப்படுவோரின் ஆடியோ, வீடியோ பதிவும் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும். ஆனால், இவை எதுவுமே பின்பற்றப்படவில்லை.

இருந்தாலும், ஊசி செலுத்தப்பட்ட அறையில் ஒரு வீடியோகிராபர் இருந்ததாகவும், உரிய முறையில் ஒப்புதல்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பீப்பளிஸ் பல்கலைக்கழகத்தின் டீன் ஏ.கே.தீட்சித் தெரிவிக்கிறார். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று `இந்தியா ஸ்பெண்டி'டம் பேசிய பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டிரையலுக்கு வந்து சென்றவர்களின் உடல்நல பாதிப்பு, மரணம் உள்ளிட்டவை குறித்து உரிய முறையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகிறது. சட்டப்படி அனைத்தும் கடைப் பிடிக்கப்பட்டதாகவும், அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் உரிய முறையில் டெஸ்ட் நடத்தப்பட்ட பின்னரே டிரையலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அது கூறுகிறது.

பயனாளர்களுக்கு தலா ரூ. 750 கொடுக்கப்பட்டது குறித்து பயோடெக் கூறுகையில், ``இது மத்திய மருந்து பயன்பாட்டு வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்டதே. அதைத்தான் நாங்கள் பின்பற்றினோம். மேலும், இந்தப் பணம் தொடர்பாக எத்திக்ஸ் கமிட்டிதான் வரையறுத்தது" என்றும் தெரிவிக்கிறது.

பலருக்கும் இந்த 750 ரூபாய் பணமானது 2 நாள் கூலித்தொகை. இதனால்தான் பரிஹார் போன்றோருக்கு இந்தப் பணம் பெரிதாகத் தோன்றியுள்ளது. இதனால்தான் ஊசி போட்டுக் கொள்ள முன்வந்துள்ளனர்.

COVID-19 vaccine delivery system in New Delhi

தகவல் தொடர்பு சரியில்லை

பரிஹார்போலவே பலரும், டிரையலுக்குப் பின்னர் மருத்துவமனையைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளனர். பலருக்கு வலி ஏற்பட்டுள்ளது, உடல் பலவீனம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதை அவர்கள் மருத்துவமனைக்குச் சொல்லவில்லை. காரணம், போன் இல்லை என்பது உள்ளிட்ட ஏழ்மை, அறியாமை காரணங்கள்தான். பரிஹாரின் நண்பரான அஹிர்வாலுக்கு மட்டும் சோதனைக்குப் பின்னர் ஃபாலோ அப் போன் வந்துள்ளது. அப்போது, தான் நலமாக இருந்ததால் நன்றாக இருப்பதாக அஹிர்வால் கூறியுள்ளார். அதேபோலத்தான் ஜெய் ராம் என்பவரும் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பின்னர் ஜெய்ராமுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

இதுகுறித்து அஹிர்வால் கூறுகையில், ``இது எனக்கு டிரையல் என்றே தெரியாது. அங்கிருந்த டாக்டர்களும் அதுகுறித்து விளக்கவில்லை. ஆனால், இதை முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துவிட்டு இப்போது மனிதர்களிடம் பரிசோதிப்பதாக 2 பேர் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்" என்றார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு `இந்தியா ஸ்பெண்ட்' விரிவான விளக்கம் கேட்டு அனுப்பியது. அதுகுறித்த பதில் இன்னும் வரவில்லை.

Also Read: #COVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்... விடையளிக்கிறார் மருத்துவர்! #FAQ

ஒரே சோதனை... வேறு நகரத்தில் வேறு மாதிரி!

மும்பையில், 22 வயதான ரோனக் என்பவர் பாரத் பயோடெக்கின் 3-வது கட்ட சோதனைக்காக டிசம்பர் மாதம் சியான் மருத்துவமனையில் ஊசிபோட்டுக் கொண்டார். ஆனால், போபாலில் உள்ளதுபோல இவருக்கு நடக்கவில்லை. அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. ரோனக் ஒரு கல்லூரி மாணவர். அதேபோல போபாலைச் சேர்ந்தவர்கள்போல் அல்லாமல் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரும்கூட.

போபாலில் உள்ளது போல இல்லாமல், ரோனக்கிடம் டாக்டர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடம் இந்த டிரையல் குறித்து விளக்கம் தெரிவித்துள்ளனர். கேள்விகளுக்கு பதிலும் விளக்கமும் அளித்துள்ளனர். அதே நேரம், போபாலில் உள்ளது போலவே இவரும் சரியாகப் படித்துப் பார்க்காமல் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்.

இவருக்கு ரூ.1,500 பணம் தரப்பட்டுள்ளது. ஆனால், கையெழுத்திடுவதற்கு முன்பு வரை பணம் தரப்படுவது குறித்து இவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. இவராகவே சோதனைக்கு முன்வந்து போயுள்ளார். 2-வது டோஸ் கொடுக்கப்பட்ட பின்னர்தான் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், போபாலில் அப்படியே தலைகீழாக நடந்துள்ளது. பணத்தைக் கொடுத்த பிறகுதான் டிரையலுக்கு கூட்டிப் போயுள்ளனர் அங்கு.

இதுகுறித்து போபால் விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்து வரும் ரச்னா திங்க்ரா கூறுகையில், ``பாரத் பயோடெக்கோ வேறு யாருமோ, போபாலில் செய்ததுபோல பிற நகரங்களில் படித்தவர்கள் மத்தியில் இப்படி லௌடு ஸ்பீக்கர் கட்டி, 750 ரூபாய் தருவதாகக் கூறி ஆள் சேர்ப்பார்களா? ஆனால், போபாலில் அவர்கள் தேர்வு செய்த அனைவருமே ஏழைகள். விஷ வாயுக் கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஏற்கெனவே அந்தச் சம்பவத்தால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தடுப்பூசியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

``இவர்களின் ஒப்புதல் சரிவர பெறப்படாமலேயே கோவாக்சின் சோதனைக்கு இவர்களை உட்படுத்தியுள்ளனர். பலரிடம் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவர்களின் உடல்நலனும் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லை" என்று திங்க்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

COVID-19 vaccine

கிளினிக்கல் சோதனை

இந்தியாவில் கிளினிக்கல் சோதனைகளை மருந்துப் பொருள் சட்டம் 1940-ன் கீழும், புதிய மருந்துகள் மற்றும் கிளினிக்கல் பரிசோதனைகளை சட்டம் 2019-ன் கீழும் செய்து வருகின்றனர். ஜனவரி 3-ம் தேதி 2 கொரோனா தடுப்பு மருந்துகளை கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் கோவாக்சின் மீதான பரிசோதனைகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, இதை `கிளினிக்கல் டிரையல் மோடு' என்ற அடிப்படையில் பயன்படுத்த அனுமதி தரப்பட்டது. ஆனால், இந்திய சட்டத்தின்படி கிளினிக்கல் டிரையல் மோடு வேக்சின்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து 2 நாள்கள் கழித்து இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு விளக்கம் கொடுத்தது. அதன்படி, யாரேனும் தாங்களாக முன்வந்து ஒப்புதல் அளித்து இந்த மருந்தை செலுத்திக்கொள்ள முன்வந்தால் அவர்களுக்கு இதைக் கொடுக்கலாம் என்று விளக்கப்பட்டது. அதே நேரம், இந்த மருந்தை போட்டுக் கொண்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு தரப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இருப்பினும் பங்கேற்பாளர்களின் வயது, அவர்களுக்கு ஏற்கெனவே ஏதாவது நோய் உள்ளதா, பிறப்பிலேயே உடல் உபாதைகள் உள்ளனவா, பிறவிக்கோளாறு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலித்த பிறகே இழப்பீடு பற்றி முடிவு செய்யப்படும். மரணம் சம்பவித்தால் ரூ. 8 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

பல வெளிநாடுகளில் சோதனையின்போது மரணம் உள்ளிட்டவை ஏற்பட்டால் அந்த டிரையல் நிறுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டுகூட ஆஸ்ட்ராஜெனிக்கா சோதனையின்போது ஒருவருக்கு மோசமான பக்கவிளைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சோதனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தனது சோதனையை நிறுத்தி வைத்தது. ஜனவரி மாதம் ஃபைஸர் வேக்ஸின் சோதனையை நார்வே அரசும் நிறுத்தி வைத்து விசாரணைக்கும் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில், இங்கிலாந்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா சோதனையின்போது ஒருவருக்கு மோசமான பக்க விளைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சீரம் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனையை நிறுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் உத்தரவிட்டிருந்தது.

பாரத் பயோடோக் நிறுவனத்தைப்போல இல்லாமல், மற்ற அனைத்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களும் தங்களது சோதனை முடிவுகளையும், ஒப்புதல் விண்ணப்பங்களையும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

COVID-19 vaccine

உண்மையான புள்ளி விவரம் பாதுகாப்பானது

போபாலைச் சேர்ந்த பயோ எத்திக்ஸ் ஆய்வாளர் ஆனந்த் பான் கூறுகையில், ``மராவியின் மரணம், தடுப்பு மருந்துடன் தொடர்பு இல்லாதது என்று பாரத் பயோடெக் கூறுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு அவர்கள் வர என்ன மாதிரியான ஆய்வை மேற்கொண்டவர், உண்மை என்ன என்ற விவரத்தை அவர்கள் வெளியிட வேண்டியது முக்கியம். அப்போதுதான் சர்ச்சை நீங்கும்.

ஒரு மரணம் நடந்துள்ளது. அதையும் மீறி இந்த மருந்துக்கு எப்படி ஒப்புதல் தரப்பட்டது? கோவாக்சின் மருந்துக்கு ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது நிபுணர் குழு. ஆனால், மராவி மரணமடைந்தது டிசம்பரில். எனவே, இதுகுறித்து இந்த மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் விளக்கம் தர வேண்டியது அவசியமாகும்" என்றார்.

கோவாக்சின் சோதனையில் நடந்த முறைகேடுகள் குறித்த தகவல் 3-வது கட்டத்தில்தான் தெரிய வந்தன. இதுகுறித்து இங்கிலாந்தில் பணியாற்றி வரும் டாக்டர் ஜம்மி நாகராஜ் கூறுகையில், ``3-வது கட்ட பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அதுதான் நோயாளிகளிடம் விபரீத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ``3-வது கட்ட சோதனையின்போது அதிக அளவிலான நபர்களிடம் நாம் பரிசோதனை செய்வதால் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும். மேலும் 3-வது கட்ட சோதனையின்போதுதான் விஞ்ஞானிகளுக்கு பாதிப்புகள் தொடர்பான பல்வேறு விவரங்கள் தெளிவாகத் தெரிய வரும். இந்த டேட்டாக்களை சரியாக சேகரித்து அதை மேலும் ஆய்வு செய்வது அவசியம். உண்மையான தகவல்களை சேகரிப்பது நல்ல, தரமான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவும்" என்றார்.

IndiaSpend

source:

- Anoo Bhuyan / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)

- தமிழில்: ஆனந்தி ஜெயராமன்


source https://www.vikatan.com/health/healthy/bhopal-covid-19-covaxin-vaccine-trial-participants-says-they-were-misled

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக