வெறும் தேர்தல் அல்ல... ஒரு போர் நடந்து முடிந்ததைப் போல இருக்கிறது அமெரிக்கா. கடைசியாக டொனால்டு ட்ரம்ப்பை வழியனுப்பி வைத்துவிட்டார்கள். ஆனால், ட்ரம்ப் அரசு செயல்படுத்திய திட்டங்களின் பிரச்னைகள் தீராமல் இருக்கின்றன. அதற்கு, ஒருவிதத்தில் தனது பதவியேற்பின் முதல்நாளே பதிலளித்தார் புதிய அதிபர் ஜோ பைடன்.
கொரோனாத் தொற்று, காலநிலை மாற்றம், குடியேறிகள் அணுகுமுறை போன்றவற்றில் ட்ரம்ப்பின் திட்டங்களை ரத்து செய்தார். குறிப்பாக, அமெரிக்காவின் மோசமான கொரோனா பாதிப்பிற்கு ட்ரம்ப் அரசின் அலட்சியமே காரணமாகக் கூறப்பட்டது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடியை அமெரிக்கர்கள் கண்டார்கள். மீண்டும் எப்போது இயல்புநிலைக்குத் திரும்புவோம் என்ற மக்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில்தான் பைடன் பதவியேற்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு, பதவிநீக்கத் தீர்மானம், தேர்தல் குற்றச்சாட்டு, கேபிடால் தாக்குதல் என இறுதி ஆண்டு முழுவதும் மோசமாக நடந்துகொண்டார் ட்ரம்ப். அடுத்த அதிபர் ட்ரம்ப்பிலிருந்து அனைத்து விதங்களிலும் மாற்றாக இருக்க வேண்டும் என அமெரிக்கர்கள் எதிர்பார்த்தனர். ட்ரம்ப்பிற்கு இணையான பணக்காரரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான பைடனின் வெற்றி, ட்ரம்ப்பின் தோல்வி என்பதற்காகவே பெருமளவு கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில் ட்ரம்ப்பிலிருந்து எந்த அளவிற்கு பைடன் வேறுபடுவார்?!
பைடன் அரசின் முதல் சவாலாக கொரோனாப் பெருந்தொற்று இருக்கும். 'அந்தப் பேயைக் கட்டுப்படுத்தியே தீரவேண்டும்' எனும் பைடன் போர்க்கால சூழலில் தீவிரம் காட்டச்சொல்லியிருக்கிறார். நோய்த்தொற்றோடு பொருளாதார நெருக்கடியும் இன்று முக்கிய சிக்கலாகியுள்ளது. முதன்முறையாக 9 லட்சம் பேர் வேலையிழந்தவர்களுக்கான உதவித் தொகைக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைச் சமாளிக்க 1.9 ட்ரில்லியன் டாலர் மதிப்பீட்டில் அவசரச் செயல்திட்டத்தை வகுத்துள்ளார் பைடன். அதிக பட்ஜெட் எனக் குடியரசு கட்சியினர் இதைக் குறை கூறினாலும், பிற விமர்சனங்களும் எழுகின்றன.
கொரோனாவால் அதிக உயிர்களை அமெரிக்கா பறிகொடுக்க மோசமான சுகாதாரக் கட்டமைப்புதான் காரணம். பொது மருத்துவம் இல்லாத அங்கு, சாமானியர்களுக்கான மருத்துவம் போதுமானதாக இல்லை. காப்பீட்டு நிறுவனங்களின் வழியே சுகாதாரத்தைப் பெறும் அமெரிக்கர்களுக்குக் காப்பீட்டுத் தொகையே சுமையாக இருக்கிறது. பலருக்கும் காப்பீடுகூட இல்லை. கொரோனா வேளையிலும் பொதுச் சுகாதாரத்தை மறுத்த ட்ரம்ப் அரசின் பிடிவாதம், கொரோனாவைப் பரவலாக்கியது. அதனாலேயே, 'அனைவருக்குமான மருத்துவம்' (Medicare for All) என்ற பிரசாரம் இந்தத் தேர்தலில் பேசுபொருளாக இருந்தது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் போன்றவர்கள் இத்திட்டத்தில் உறுதியாக இருந்தனர். ஆனால், பொது மருத்துவத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் ஜோ பைடன்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பொது மருத்துவம் நடைமுறை சாத்தியமில்லாதது என்பதுதான் பைடனின் வாதம். பத்து ஆண்டுக்கான பொதுச் சுகாதாரத்திற்கு ஆகும் செலவு 35 ட்ரில்லியன் டாலர். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என்று கேட்கும் பைடன், நடுத்தர மக்களின் வரிகளை அதிகப்படுத்தி மருத்துவத்தைக் கொடுக்கலாமா எனக் கேள்வியெழுப்பியிருந்தார். ``நிலையான பாதுகாப்பிற்கும் போதுமான மருத்துவத்திற்கும் தடையாக உள்ள எதுவாயினும் வீட்டோ கொண்டு தடுப்பேன்'' என்பது அவரது வாதம்.
அனைவருக்குமான மருத்துவத்திற்கு பத்தாண்டிற்கு ஆகும் செலவு 30-லிருந்து 40 ட்ரில்லியன் டாலர். ஆனால், இது அமல்படுத்தப்பட்டால் எளிய மக்களின் மருத்துவச் செலவினங்கள் முற்றிலுமாக நீங்கும். அதன்மூலம், ஆண்டுக்கு 450 பில்லியன் டாலரிலிருந்து 650 பில்லியன் டாலர் வரையிலான பொருளாதாரம் சேமிப்படையும் என்பதைப் பல ஆய்வுகள் கூறுகின்றன. பொது மருத்துவத்தின் ஆதரவாளர்களின் வாதமும் அதுதான். குறிப்பாக, ``இந்தியா போன்ற நாடுகளாலேயே பொது மருத்துவம் சாத்தியமாகும் நிலையில் உலகிலேயே பணக்கார நாடு அமெரிக்காவால் முடியாதா?!'' என்று அடிக்கடி கேட்பார் பெர்னி சாண்டர்ஸ்.
இன்று கொரோனா அவசரத் திட்ட நிதியில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளார் பைடன். அரசின் பங்களிப்பு அல்லது பொதுச் சுகாதாரக் காப்பீட்டைத் தவிர்த்த இத்திட்டம் தனியார் நிறுவனங்களை மகிழ்விப்பதற்கானது என்று விமர்சிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் அதிக அளவில் லாபம் ஈட்டிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதற்கு உதவித்தொகை, அதனால் பயன் மக்களுக்கா அல்லது நிறுவனங்களுக்கா என்று கேள்வியெழுகின்றன. குறைந்த வருமானமுடையவர்களின் பிரீமியம் தொகை 9.86% லிருந்து 8.5% சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரீமியத்தைக் குறைப்பதன் மூலம் காப்பீடு அல்லாதவர்களின் நிலையைக் குறைக்கிறோம் என்கின்றன நிறுவனங்கள். இன்றைய நிலையில் சாமானியர்களுக்கு அதுவும் பாரமாகத்தான் இருக்கும். மேலும், மக்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டை வேலையுடன் தொடர்புப்படுத்துவது, பலரும் வேலையிழந்துள்ள இன்றைய சூழலில் எந்த அளவுக்குப் பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது.
ஒருவிதத்தில் முந்தைய அரசு செய்த தவற்றைத்தான் பைடனும் செய்கிறார். இதில் மற்றொரு கோணமாக, உதவித்தொகை பெறும் முக்கியக் காப்பீட்டு நிறுவனங்களான ஆன்தம் (Anthem) மற்றும் சென்டின் (Centene) இரண்டும் பைடனின் தேர்தல் பிரசாரத்திற்கு நன்கொடைகள் கொடுத்தவை. இத்திட்டத்தில் இவர்களின் பரிந்துரையும் குறிப்பிடத்தக்கது.
பைடனின் அடையாளம் என்ன?!
பைடன் தன்னை ஒரு பொதுவான நபர் என்றும், மையவாத (Centrist) நிலைப்பாடு கொண்டவர் என்றும் காட்டிக்கொள்பவர். ஜனநாயகக் கட்சியிலேயே இடதுசாரி அரசியல் பேசும் பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்களை 'சிறப்பு ஆர்வலர்கள்' என்று தாக்கியுள்ளார். அதனாலேயே, குடியரசுக் கட்சியினருடன் அதிகம் உடன்படுபவராக இருந்தார். பலமுறை குடியரசுக் கட்சியினரின் தீர்மானங்களுக்கு ஆதரித்து வாக்களித்துள்ளார் பைடன். மற்ற அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது பைடனின் சொத்து மதிப்பு அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் உள்ளது. ஹிலாரி கிளின்டனைப் போன்று குடும்ப அரசியல் முத்திரையும் பெற்றவர்.
பல கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் நன்கொடைகள் பெற்றவர் பைடன். அதனால், அவர் அரசியலிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. 1989லிருந்து 2000-ம் ஆண்டுவரை 'எம்பிஎன்ஏ' என்ற கடன் அட்டை நிறுவனம் பைடனின் முதன்மை நன்கொடையாளராக இருந்துள்ளது. இந்த நேரத்தில்தான், குறைந்த அளவு கடனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களை எச்சரிக்க கடன் அட்டை நிறுவனங்களுக்குச் சில நிபந்தனைகள் விதிக்கும் சட்டத் தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தார் பைடன். அதேவேளையில், கடன் தொகை செலுத்த முடியாதவர்களுக்கான பாதுகாப்பை மறுக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவான தீர்மானத்திற்கு நான்குமுறை வாக்களித்தார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே ஆண்டில் பைடனின் மகன் ஹன்ட்டர் (Hunter) சட்டப்பள்ளியிலிருந்து நேரடியாக எம்பிஎன்ஏ-வின் செயல் ஆலோசகராக நியமனமானார். 1996-ல் எம்பிஎன்ஏ-வில் இணைந்த இரண்டே ஆண்டுகளில் தலைமைத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
பிறகு, பைடனின் முன்னாள் பிரசார ஆலோசகர் வில்லியம் ஒல்டேகருடன் (William Oldaker) இணைந்து தேர்தல் செயல்திட்ட நிறுவனத்தைத் தொடங்கினார் ஹன்ட்டர். சிறிது காலத்திற்குப் பிறகு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் முறைகேட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 2008-ம் ஆண்டு பைடனின் துணை அதிபர் தேர்வுக்கு எந்தத் தலைவலியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஹன்ட்டர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஒபாமா நிர்வாகத்தில் உக்ரைனுக்கான செயல்திட்ட பொறுப்பாளராக பைடன் இருந்தபோதுதான், அவர் மகன் தனியார் கேஸ் நிறுவனம் ஒன்றில் போர்ட் உறுப்பினராகத் தேர்வானார். பைடன் உக்ரைன் பயணம் மேற்கொண்டு ஊழலுக்கு எதிராகப் பேசிய வேளையில் அந்த கேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஊழல் விசாரணையின் கீழ் இருந்தார். இந்தப் பிரச்னையைத்தான் 2020-ம் ஆண்டுத் தேர்தலில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் ட்ரம்ப்.
2012-ம் ஆண்டு ஈராக்கில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான 1.5 பில்லியன் டாலர் ஒப்பந்தம் 'ஹில் இன்டர்நேஷனல்' (Hill International) என்ற நடுத்தர கட்டுமான நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேறிய சில மாதங்களுக்கு முன்புதான் பைடனின் சகோதரர் ஜேம்ஸ் அந்நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் கட்டுமானத் துறையில் இணையும் அளவிற்கு எந்த முன் அனுபவமும் இல்லாதவர். அப்படியிருக்கையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தம் எந்த விதத்தில் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்தது என்ற கேள்வியெழுந்தது. டொனால்ட் ட்ரம்ப் தன் குடும்பம் முழுவதையும் அரசியலில் இணைத்தார். குறிப்பாக, தன் ஹோட்டல்களில் நடக்கும் தமது விழாக்களுக்கான செலவைக் கூட இரட்டிப்பாக அரசின் தலையில் கட்டினார். அதேபோல்தான் பைடனும் அரசுப் பதவியின் மூலம் குடும்பத்திற்காக ஆதாயங்களை அடைந்துள்ளார் என்கின்றன பல ஆவணங்கள்.
1979-ம் ஆண்டு செனட் உறுப்பினர்களின் வெளி விவகார சொத்தைக் கட்டுப்படுத்த ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது 25 பணக்கார செனட்டர்களில் ஒருவரான பைடன் உட்பட 23 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அமெரிக்காவின் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. பணக்காரர்களின் சொத்து வளம் பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. பணக்காரர்களின் வளங்களுக்கான வரியை அதிகப்படுத்தவேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் அரசு வளங்களுக்கான வரியை ரத்து செய்தது. ஒரு ஏழை கட்டும் அதே வரியை (அல்லது அதைவிடக் குறைவாக) பணக்காரர்களும் செலுத்தினர். நாட்டின் 99% வளங்களை வெறும் 1% பேர் வைத்திருக்கும் அசமத்துவ நிலை மாற வேண்டும் என்ற பிரசாரம் இன்று வலுப்பட்டுள்ளது. ஆனால், பைடன் இதனை ஏற்பதாக இல்லை.
``நாம் துன்பத்தில் இருப்பதற்கு 500 பில்லியனர்கள்தான் காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். உயரத்தில் இருப்பவர்கள் ஒன்றும் தவறானவர்கள் கிடையாது'' என்பது பைடனின் வாதம். 80களிலேயே நிர்வாகத்தில் அரசின் பங்களிப்பு பெரிதும் தேவையில்லை என்ற நவதாராளமய சிந்தனைக்கு வந்தவர் அவர்.
அரசியல் செயல்திட்ட நிறுவனங்களுடன் பைடனுக்கு நீண்டகால வரலாறு உள்ளது. பைடனின் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து செயல்திட்ட நிறுவனங்களுக்குச் சென்று வருவதையே முக்கிய வேலையாகச் செய்துகொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள். நன்கொடை விஷயத்திலும் 1989லிருந்து 2008 வரை பைடன் பெற்ற நன்கொடைகள் மதிப்பு மட்டும் 3,44,000 டாலர். அதில் கடன் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கியவை மட்டும் 3,00,000 டாலர். தனியார் நிறுவனங்கள், செயல்திட்ட நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு இடையே (ட்ரம்ப் வெற்றிகரமாக்கிய) இன்றுள்ள உறவை நெருக்கமாக்கியதில் பைடனின் பங்கு முக்கியமானது. அரசியல் வரலாற்றில் அதுதான் அவரது அடையாளமும்கூட.
எதிர்கட்சிக்கு விரோதமற்ற தலைவர்!
தன்னை Pro life என்று அடையாளப்படுத்திய ட்ரம்ப் பழைமைவாதங்களை வெளிப்படையாகக் கையாண்டார். கருக்கலைப்பிற்கு எதிரான நிலைப்பாடு, சுய பாலுறவுக்குத் தடை, தற்பாலின உறவை எதிர்த்தல் போன்றவற்றில் உறுதியாக இருந்தார். பொதுவாகவே பழைமைவாத குடியரசுக் கட்சியில் இவை அடிப்படைக் கோட்பாடுகள். ஆனால், லிபரல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடன் இந்த விஷயத்தில் குடியரசுக் கட்சியின் பக்கமே அதிகம் நின்றார். பைடனின் கருக்கலைப்பிற்கு எதிரான நிலைப்பாடு அவரின் தீவிர கத்தோலிக்க பின்புலத்திலிருந்து உருவானது. இதற்காக ஜனநாயகக் கட்சியின் செயல்திட்டங்களோடு முரண்பட்டு நின்றுள்ளார். ``தன் உடலில் என்ன நிகழ வேண்டும் என்று முடிவெடுப்பதற்குப் பெண்களுக்குத் தார்மிக உரிமையில்லை. இது எப்படிப்பட்டதென்றால், ஒருவர் ஒரு அரசாங்கத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுத்தால். உடனே அந்த அரசாங்கம் வெளியேறிவிட வேண்டும் என்பது போன்றது'' என்று 1974லிலேயே சொன்னவர் பைடன்.
2000-க்குப் பிறகு ஜனநாயகக் கட்சி ஒருவித தாராள மனநிலைக்கு வந்தடைந்தது. ஆனால், பைடன் மட்டும் அப்படியே இருந்தார். அனைத்திற்கும் மேலாக, `கருக்கலைப்பு செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்' என்று 2003-ம் ஆண்டு புஷ் அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்தார். மனித உரிமை மீறலாக விமர்சிக்கப்பட்ட சட்டத்திற்கு வாக்களித்ததற்கு இன்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றே கூறுகிறார் பைடன்.
புஷ் அரசுடன் அதிகம் உடன்பட்டார் பைடன். 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போர் நடந்த வேளையில், புஷ்ஷை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துப் பேசி ஆதரவைத் தெரிவித்தார். மற்றொரு வரலாற்று அடையாளமாக 2003-ம் ஆண்டு புஷ் அறிவித்த ஈராக் போரை ஆதரித்த வெகு சிலரில் பைடனும் ஒருவர். ஈராக் போரை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடந்த வேளையில், போருக்கு ஆதரவாக ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார் பைடன்.
ஒருவிதத்தில் பைடனின் இந்த நிலைப்பாடே, 2008-ம் ஆண்டு தேர்தலில் ஈராக் போரை எதிர்த்த, வயதிலும் அனுபவத்திலும் இளையவரான ஒபாமா வெல்லக் காரணமாகியது. ட்ரம்ப் தனது கடைசிக் காலத்தில் ஈரானுடன் தொடர்ந்து வம்பிழுத்து வந்ததோடு பைடனின் ஈராக் நிலைப்பாட்டை ஒப்பிடலாம். ஒபாமா ஆட்சியில் பல வெளிநாட்டுப் போர்களை ஊக்குவித்தார் பைடன்.
அதேசமயம் காலநிலை மாற்றப் பிரச்னையில் ட்ரம்ப் அரசின் மோசமான நிலைப்பாட்டை அறிந்துள்ளார் பைடன். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைந்தது, காலநிலைக்கு ஏற்ற பொருளாதாரத்தை உருவாக்குவது போன்ற முன்னெடுப்புகள் நம்பிக்கையளிக்கின்றன. இந்தமுறை பைடனின் வெற்றி என்பது இளம் தலைமுறையினர், கல்வியாளர்கள், முற்போக்காளர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் மற்றும் பெண்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கிடைத்த பங்களிப்பு. அவர்கள் ட்ரம்ப் அரசிலிருந்து பாதிக்கப்பட்டவர்களும்கூட. எனவே, பைடன் தன் மரபான பழைமைவாத நிலைப்பாட்டிலிருந்து மீண்டு பன்முக அதிபராக வேண்டும் என்பது அவர்களது எதிர்பாப்பு. எதிர்க்கட்சிகளுக்கு விரோதமற்ற தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பைடன். அது மக்களுக்கு என்ற அடிப்படையில் புதிய அரசு செயல்படட்டும்!
source https://www.vikatan.com/government-and-politics/international/will-joe-biden-bring-changes-in-american-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக