Ad

சனி, 30 ஜனவரி, 2021

`3 கட்சிகள் நிற்கும்போது நாம் ஏன் தனித்து நிற்கக்கூடாது!'- பொதுக்குழுவில் வேல்முருகன் ஆடியோ ரிலீஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்றிரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் கட்சித் தலைவர் வேல்முருகன் கட்சியினரிடையே தொலைபேசிவாயிலாகப் பேசினார். அப்போது அவர், ``தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் விளைவாகக் கடந்த 3 நாள்களாக எனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், என்னால் மாநிலச் செயற்குழுவில் கலந்துகொள்ள முடியவில்லை. மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் அளித்த பேட்டி காரணமாக அந்தக் குடும்பத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை இருக்கின்றது. அவர்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடமை ஆகும்.

இதன் காரணமாகவும் நான் கலந்துகொள்ள முடியவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டுக்காக யாரிடம் 
யாசகம் கேட்கும் நிலை நமக்கு இல்லை. வெறும் 2 சதவிகித வாக்கு உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு முதல்வர், துணை முதல்வர் செல்கின்றனர். எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் செல்கிறார். ஒரு பக்கம் மதத்தின் பெயரால் கட்சி நடத்தும் பா.ஜ.க-வும், மறுபக்கம் இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் துரோகம் இழைத்த காங்கிரஸ் நிற்கிறது. என்னிடமும் பலரும் கூட்டணி குறித்து தொடர்புகொண்டு கேட்டனர். ஏன் தமிழகத்தில் சீமான் தனித்து நிற்கிறார். சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் தனித்து நிற்கிறார். மக்கள் நீதி மய்யம் நடிகர் கமல்ஹாசன் தனித்து நிற்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி பதவிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. மற்றவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம் உள்ளது. நாமும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிப்போம்" என்று பேசினார்.

பின்னர் மாநில பொதுக் குழுவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து நின்றாலும் அல்லது கூட்டணி அமைத்தாலும் அதற்கான முடிவு எடுக்கும் முழு அதிகாரம் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகனுக்கு அளித்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



source https://www.vikatan.com/news/policies/151944-cuddalore-tvk-meeting-news-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக