Ad

வெள்ளி, 29 ஜனவரி, 2021

தூங்காநகர நினைவுகள் - 2 | ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் - மதுரை மலைகளில் மூதாதையர்களின் ரேகைகள்!

பள்ளிப் பருவத்திலேயே என் மனதைப் புவியியல் பாடம் கவர்ந்துவிட்டது. ஜூன் மாதம் பள்ளியில் புதிய புத்தகங்கள் வந்தவுடன் நான் முதலில் புவியியல் பாடப்புத்தகத்தை முழுவதுமாக ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடுவேன். நாம் வாழும் இந்தப் பூமி, அதன் தோற்றம், நிலப்பரப்பு, மனிதனுக்கும் இந்த நிலத்திற்குமான தொடர்பு, மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பு என இவற்றை அறிந்துகொள்வதில் இருந்த எனது ஆர்வம் அடங்கமறுத்தது. இது மொத்தமும் நான் என்னைப் பற்றி அறிந்துகொள்வதுதானே என்கிற உணர்வோடு மேலதிகமாக வாசிக்க முற்பட்டேன். வாசிக்க வாசிக்க என் ஆவல் அதிகரித்துக்கொண்டே சென்றது.

மெல்ல மெல்ல என் கைகளுக்குக் கிடைத்த புத்தகங்களின் வழியே உலகம் முழுவதும் பயணித்தேன். சீனப் பெருஞ்சுவர், நைல் நதி, அமேசான் காடுகள், ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், மச்சுபிச்சு கோட்டை, எகிப்தின் பிரமிடுகள், இஃபில் டவர் என் ஒவ்வொரு நாளும் நித்திரையில் இருந்து வெவ்வேறு இடங்களில் கண்விழித்தேன். பாஸ்போர்ட் இல்லை விசா இல்லை ஆனால் மனதில் எனக்கு இருந்த வாசிப்பும் ஆசையும் செலவில்லாமல் பயணிக்கக் கற்றுக்கொடுத்தது.

சார்லஸ் டார்வின்

உலகின் வரலாறுகளை, மனிதர்களின் வரலாற்றை மிகுந்த ஆர்வத்துடன் அறிந்துகொள்ள துடித்த காலம் அது, நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாசித்து முடித்தேன். சார்லஸ் டார்வின் 22 வயதில் எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்ற கப்பலில் பயணம் கிளம்பிய செய்தி எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவரைப் பின் தொடர்ந்து மனிதனின் பரிணாம வளர்ச்சியை வாசிக்கத் தொடங்கினேன். என் தேடலின் எல்லைகளை வாசிப்பு விரிவுபடுத்தியபடியே இருந்தது.

இந்த பெரும் பிரபஞ்ச வெளியின் சூரியக் குடும்பத்தின் இந்த பூமியில் மட்டும்தான் உயிர்கள் சாத்தியமானது. உயிர்களின் பரிணாமத்தில் மனிதன் சாத்தியமானான். ஒரு முழுமையான மனிதன் தோன்ற எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனது? மனித மூதாதைகள் எப்படி வேட்டையாடினார்கள்? ஆதி மனிதர்கள் என்ன கருவிகள் பயன்படுத்தினார்கள்? மொழி உருவாவதற்கு முன் அவன் வேட்டையின் நுட்பங்களை தன் சகபாடிகளுடன் எப்படிப் பகிர்ந்து கொண்டான்? ஆதி மனிதன் எப்படி வேட்டையை ஓவியங்களாக குகைகளில் தீட்டியிருக்கிறான்? கேள்விகள் அடுக்கடுக்காய் மனதில் எழுந்து கொண்டேயிருந்தன.

என் பதின் பருவத்திலேயே இந்த ஓவியங்களை வாழ்வில் ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் மேலோங்கியது. இந்தக் குகை ஓவியங்கள் எங்கெல்லாம் உள்ளது என்பதை ஒரு நோட்டு புத்தகத்தில் பட்டியலிட்டேன். ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, அர்ஜென்டினா, பல்கேரியா, பிரான்ஸ் என அந்த பட்டியல் நீண்டு சென்றது.

மனித மூதாதையர்கள் பயன்படுத்திய கருவிகளை எல்லாம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது, உலகின் முக்கிய அருங்காட்சியங்களில் இவை எல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு வாழ்வில் வேலைக்கு சென்று சம்பாதித்ததுமே இதை எல்லாம் பார்க்க கிளம்ப வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.

****

தொல் மனிதனின் வெளிப்பாடுகளான பாறை ஓவியங்கள் மதுரையின் கிடாரிப்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு மற்றும் அணைப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 6000 - 8000 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்டவை.

கிடாரிப்பட்டி அழகர்மலையில் பெருங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. மனித உருவம் கொண்ட கோட்டோவியம், நீண்ட கொம்புடைய மான், கையில் கருவியுடன் மனித உருவம் மற்றும் அதன் அருகில் ஒரு நாய், எளிய கோடுகளாலான மான், ஏணி போன்ற ஒரு வடிவம் அதை தவிர்த்து இனம் காண முடியாத விலங்குகளும் உருவங்களும் அழகர்மலை பாறைகளின் மீது வரையப்பட்டுள்ளது.

அழகர் கோயில் எளிய கோடுகளில் மான்
அழகர் கோயில் கோட்டோவியம்: மனித வடிவம்
அழகர் கோயில் மனித உருவம், விலங்கு

கருங்காலக்குடியின் மேற்குப் பகுதியில் இருக்கும் மலைக் குன்றில் இயற்கையாய் அமைந்துள்ள மலைக் குன்று ஒன்றின் விதானப் பகுதியில் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கால கட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன. திமிலுடன் இரண்டு மாடுகள், கோட்டோவியத்தில் மாட்டின் உருவம் மற்றும் அடையாளம் காண இயலாத உருவங்கள் சிலவும் உள்ளன.

கருங்காலக்குடி திமிலுள்ள மாடுகள்
அணைப்பட்டி குதிரைப் பயணம்

அணைப்பட்டியில் பெருங்கற்காலம் மற்றும் பிந்தைய காலங்களில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இரண்டு மனித உருவங்கள் எதிரெதிரே நிற்றல், இரண்டு மனித உருவங்கள் கைபிடித்து நடந்து வருதல், குதிரை மீது ஏறி வருபவன், குதிரையின் மீது மனித உருவம் பயணிப்பது, குதிரையில் வரும் ஒருவரை தரையில் இருந்து ஆயுதத்துடன் தாக்க முற்படுவதும் அருகே விழுந்த நிலையில் குதிரையும் வீரனும், கையில் வாள் மற்றும் கேடயத்துடன் மனித உருவம், தலை அலங்காரத்துடன் மனித உருவம், நடனமாடும் ஆண்களும் பெண்களும், பூ அலங்கார ஓவியம், விலங்கின் மீது ஆயுதங்களுடன் மனித உருவம் என இந்தக் குகையில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

மதுரை கீழவளவில் பிற்கால கற்செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. யானையின் ஓவியமும் பிற்கால கோட்டோவியத்தில் மான்களும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

அணைப்பட்டி நடனக்காட்சி

மதுரை தவிர்த்து குறும்பவரை, மகராஜகடை, குமுதிபதி, கீழவளவு, திருமலை, ஒதியத்தூர், கோவனூர், மல்லப்பாடி, வெள்ளரிக்கோம்பை, கீழ்வாலை, கல்லம்பாளையம், ஏர்பெட்டு-செம்மநாரை, உசிலம்பட்டி குறிஞ்சிநகர், ஆழியார், ஆலம்பாடி கரிக்கையூர் என தமிழகம் முழுவதுமே பாறை ஓவியங்கள் விரவிக்கிடக்கிறது.

*****

என் பதின்பருவத்தில் நான் பாறை ஓவியங்களைப் பார்க்க உலகமெங்கும் பயணிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த போது எனக்கு மதுரையிலேயே நான்கு மலைகளில் பாறை ஓவியங்கள் இருக்கின்றன என்கிற தகவல் ஒரு சேர மகிழ்ச்சியையும் பெரும் சோர்வையுமே ஏற்படுத்தியது.

கிடாரிப்பட்டி அழகர்மலை

உலகம் முழுவதும் இருக்கும் பாறை ஓவியங்கள் உள்ள மலைகள், குகைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முழுமையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளாகங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களின் பாடப்புத்தகங்களில் அவர்களின் நிலத்தின் பெருமிதங்களாக இந்தப் பாறை ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் இந்தப் பாறை ஓவியங்களை முதன்மைப்படுத்தி வண்ண வண்ணத் துண்டறிக்கைகள் முதல் இணையதளங்கள் வரை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், மதுரையில் இருக்கும் இந்தப் பாறை ஓவியங்களை சுமந்து நிற்கும் மலைகளுக்கு செல்ல முறையான பாதை கிடையாது. நீங்கள் முள்மண்டிய சீமக்கருவேலங்காடுகளின் வழியேதான் செல்ல வேண்டும். பல இடங்களில் இந்த ஓவியங்கள் மீதும் அதன் அருகிலும் பலர் புதிய வண்ணங்கள் கொண்டு எழுத்துகள் எழுதியிருப்பார்கள், அல்லது இதை ஒத்த கோடுகள் வரைந்திருப்பார்கள்.

கருங்காலக்குடி ஓவியப்பாறை

உலகம் முழுவதும் இப்படியான சான்றுகளில் இருந்துதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்த பெரும் தொடர்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில் நம் மூதாதையர்களின் விரல் ரேகைகளின் சாட்சியங்களாக திகழும் இந்த ஆகப்பெரிய பொக்கிஷங்கள் ஏன் மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்று கிடக்கின்றன? இந்தச் சமூகத்தின் பெரும் பாரம்பர்யம் மிக்க இந்த சொத்துக்களைப் பாதுகாக்க ஏன் இங்கே ஆட்கள் இல்லை? இந்த மலைகளை சுற்றி வாழும் கிராம மக்களுக்கு ஏன் இவை முக்கியம், இவை பாதுகாப்பட வேண்டியவை என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை?

கேரளாவில் உள்ள பாறை ஓவியங்களை நீங்கள் பார்க்கச் சென்றால் அங்கே அதற்கு முழுமையான கட்டமைப்புகள் உள்ளன. நாம் கட்டணம் செலுத்தியதும் நம்மை அந்த மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்கிறார்கள். மறையூரில் பழங்குடிகள் பயிற்சியளிக்கப்பட்டு இந்த வருவாயில் பாதி அவர்களுக்கு சம்பளமாக செல்கிறது. இந்த ஏற்பாடுகள் உள்ளதால் அங்கே பாறை ஓவியங்கள் கூடுதல் பாதுகாப்பு பெறுகின்றன.

கர்நாடகத்தின் ஹிரேகுடா, ஒதிசாவின் குடாஹண்டி மற்றும் யோகிமாத்தாவில் முக்கிய பாறை ஓவியங்கள் உள்ளன. இந்தியாவிலேயே மத்திய பிரதேசத்தின் பிம்பெட்காவில் உள்ள பாறை ஓவியங்கள் யுனெஸ்கோவில் உலக பாரம்பர்ய இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பிம்பெட்காவில் மட்டும் பத்து கிலோமிட்டர் சுற்றளவில் உள்ள ஏழு மலைகளில் 750 குகைகள் உள்ளன. இந்தக் குகைகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன.

மதுரையின் பாறை ஓவியங்கள் ஏன் இங்குப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை? இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் ஏன் இந்த இடங்கள் இடம் பெறவில்லை?

ஆஸ்திரேலியாவின் உலுரு கட்டஜுட்டா தேசிய பூங்காவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தேன். அங்கே இருக்கும் உலுரு மலையில் உள்ள குகைகளின் பாறை ஓவியங்களைப் பார்க்க விடிகாலையிலேயே மாலா நடை (Mala walk) ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த மாலா நடையையில் ஒரு அபாரிஜின் வழிகாட்டி அங்குள்ள குகைகள், பாறை ஓவியங்களைப் பற்றியும் அங்கே வசித்த மூதாதையர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் விவரித்தார். அந்தப் பாறை ஓவியங்கள் 30,000 வருடங்களுக்கு முற்பட்டவை என்பதை அவர் கூறும் மொத்த கூட்டமும் பெருமூச்சு விட்டது. இந்த மாலா நடையை முடித்துவிட்டு பெரும் ஏக்கத்துடன் அறைக்குத் திரும்பினேன்.

மாலா நடை வழிகாட்டியுடன் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
உலுருவின் மாலா நடை

'தமிழர் தகவலாற்றுப்படை' என்கிற அரசின் தமிழிணையத்தில் தமிழக பாறை ஓவியங்களை முழுமையாக ஆவணப்படுத்தும் பணி சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அற்புத பொக்கிஷங்களை கொண்டு மதுரையில் ஒரு நிரந்தர பாறை ஓவிய கண்காட்சி/அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும், மதுரையின் பாறை ஓவியங்களை பற்றிய ஒரு முழுமையான கையேடு உருவாக்கப்பட வேண்டும், மதுரையின் பாறை ஓவியங்களைப் பற்றிய ஓர் அற்புதமான துண்டறிக்கை விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சுற்றுலா தகவல் மையங்களிலும் கிடைக்கும் காலம் விரைவில் வர வேண்டும். இந்தக் கனவுகளுடனும் கேள்விகளுடனும்தான் மதுரை நகருக்குள் உலாவிக் கொண்டிருக்கிறேன்.

படங்கள்: நன்றி - க.த.காந்திராஜன் Rock Art Expert, தமிழர் தகவலாற்றுப்படை


source https://www.vikatan.com/government-and-politics/archaeology/secret-cave-paintings-found-in-madurai-and-their-historical-significance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக