2021 -ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
நாடாளுமன்றத்துக்கு வந்த குடியரசுத் தலைவர், தனது உரையை வழங்கினார். ``கொரோனா தொற்று நோய் பரவலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தின் இந்த கூட்டுக் கூட்டம் மிக மிக அவசியமாகிறது. இது ஒரு புதிய ஆண்டு... ஒரு புதிய தசாப்தம். அது மட்டுமல்லாமல், நாம் சுதந்திரத்தின் 75 -வது வருடத்திலும் நுழைகிறோம். இன்று அனைத்து எம்.பி.க்களும் இங்கே நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நாமோ அல்லது இந்தியாவோ நிற்கபோவதில்லை.
தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில், நாம் பல குடிமக்களை இழந்தோம். இந்த கொரோனா காலத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.கொரோனா காரணமாக ஆறு எம்.பி.க்களை இழந்து விட்டோம். அவர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலி செலுத்துகிறேன்” என்றார்.
Also Read: `2020 -யின் 4, 5 மினி பட்ஜெட்கள்..!’ - கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி
தொடர்ந்து பேசியவர், ``நமது அரசு சரியான நேரத்தில் எடுத்த முடிவால் லட்சக்கணக்கான குடிமக்களின் உயிர் காப்பாற்றியது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். இன்று புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நடத்தி வருகிறது என்பது பெருமைக்குரிய விஷயம். இந்த திட்டத்தில், இரண்டு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நெருக்கடியில் இந்தியா மனிதகுலத்துஇக்கான தனது பொறுப்பை சுமப்பதுடன், பல நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கியது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு, 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தேவையான மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது. உலக அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியாவும் உறுதியாக உள்ளது” என்றார்.
பின்னர் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் வேளாண் சட்டம் குறித்தும் பேசிய குடியரசுத் தலைவர், ``கடந்த சில நாள்களில் தேசியக் கொடியும், குடியரசு தினம் போன்ற புனித நாளும் அவமதிக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கும் அதே அரசியலமைப்பு, சட்டமும் விதிகளும் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் நமக்குக் கற்பிக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நமது அரசுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அத்தகைய விவசாயிகளை ஆதரிப்பதற்காக, பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் கீழ் சுமார் 1,13,000 கோடி ரூபாய் நேரடியாக அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்கள் அமலாவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் எதுவும் இதில் குறைக்கப்படவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. உண்மையில் இந்த புதிய விவசாய சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.
முந்தைய அரசாங்கமும் புதிய நாடாளுமன்ற வளாகத்தை கட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்தன. தற்போது இந்த கட்டடம் நாடு சுதந்திரம் அடைந்து 75 -ம் ஆண்டை கடக்கும் போது கட்டப்படுவது கூடுதல் சிறப்பு. கொரோனா காலத்தில் ஒவ்வொரு இந்தியரின் உயிரையும் காப்பாற்றும் போது, பொருளாதாரம் சந்தித்த சேதத்திலிருந்து நாடு தற்போது மீண்டு வருகிறது. இந்த கடினமான நேரத்தில் கூட, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு கவர்ச்சிகரமான இடமாக உருவெடுத்துள்ளது.
ஜூன் 2020 -ல் கால்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த தியாகத்தை செய்தனர். இந்த தியாகிகளுக்கு ஒவ்வொரு குடிமகனும் நன்றியுள்ளவனாக இருக்கிறான். தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக எல்லையில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/president-ram-nath-kovind-speech-in-parliament
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக