அடிதடி பிரச்னை கான்ஃபரன்ஸ் அறையில் எல்லோரையும் கூடவைத்தது. கான்ஃபரன்ஸ் அறையில் சித்தார்த் மேனனும் தாட்சாவும் அமர்ந்திருக்க, அவர்கள் அருகே பிரசாத் நின்று கொண்டிருந்தான். அவர்களுக்கு எதிரே ஒரு பக்கம் மார்க்ஸும் அவனது டீமும் உட்கார்ந்திருக்க, மறுபக்கம் திவ்யாவும் அவளது டீமும் உட்கார்ந்திருந்தனர். போதுமான இருக்கைகள் இல்லாமல் இரண்டு பக்கமும் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள்.
பிரசாத் முகத்தை சீரியசாக வைத்திருந்தாலும், உள்ளுக்குள் உற்சாகமாக இருந்தான். பொதுவாகவே ஹெச்.ஆர் மேனேஜர்கள் பிரச்னைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இப்படியான பிரச்னைகளைத் திறமையாகக் கையாளும்போதுதான் ஹெச்.ஆர்-க்கு பெயரும் புரமோஷனும் கிடைக்கும். அதைவிட முக்கியமாக மார்க்ஸின் தளபதியான பாண்டியனைப் போட்டுத்தள்ள பிரசாத்துக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. பாண்டியனைத் தட்டிவிட்டால் மார்க்ஸின் திமிர் அடங்கும் என்பது பிரசாத்தின் கணிப்பு.
மூக்கில் பெரிய பிளாஸ்டருடன் தனபாலும் முழங்கையில் கட்டுடன் பாண்டியனும் நின்றுகொண்டிருந்தார்கள். அடித்த பாண்டியன் கையில் இருக்கும் கட்டே இப்படி இருந்தால் அடிவாங்கிய தனபாலின் மூக்கு என்னவாகியிருக்கும் என்கிற யோசனை அனைவருக்குமே இருந்தது. முதுகில் குத்துவதுதான் கார்ப்பரேட் கலாசாரம். முகத்தில் குத்தி இதுவரை யாரும் பார்த்ததில்லை. அதனால் யாராலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
பொதுவாகவே இதுபோன்ற நிறுவனங்களில் யாரையும் வேலையை விட்டுத் தூக்க மாட்டார்கள். அதற்கு ஏராளமான பார்ஃமாலிட்டிகள் தேவைப்படும். வார்னிங் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், ஏன் எதற்கு என முறையான காரணங்களைத் தயார் செய்ய வேண்டும், அதற்கான ஆதாரங்கள் வேண்டும், மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் எனப் பல நடைமுறைச் சிக்கல்கள் இதில் இருக்கின்றன, இது எல்லாவற்றையும்விட வெளியே செல்பவர் நீதிமன்றத்துக்குப் போனால் அதற்கு நிறுவனம் பதில் சொல்லியாக வேண்டும்.
இதைத் தவிர்ப்பதற்காகவே பெரும்பாலும் வேலை செய்பவர்களே முன்வந்து ராஜினாமா செய்கிற மாதிரியான ஒரு சூழலை ஏற்படுத்திவிடுவார்கள். தகுதிக்குக் குறைவான வேலைகளைத் தருவது அல்லது வேலையே தராமல் டம்மியாக வைத்திருப்பது, சாதிக்க முடியாத டார்கெட்டுகளைத் தருவது என அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களே வேலையை விட்டுச் செல்கிற மாதிரியான சூழலை ஏற்படுத்துவதுதான் கார்ப்பரேட்டுகளின் ஸ்டைல். அவர்கள் கொலை செய்வதில்லை, தற்கொலை செய்யவைப்பார்கள்.
மேனன் திரும்பி பிரசாத்தைப் பார்த்தார். பிரசாத் சுதாரிப்பானான். நெஞ்சை நிமிர்த்தி அதிகார தொனியில் அவன் பேச ஆரம்பித்தான். “கம்பனியோட கோட் ஆஃப் காண்டக்ட்படி இந்த மாதிரி தப்புக்கு ஒரே தண்டனை டெர்மினேஷன் தான்.... அதனால..." சட்டென மேனன் குறுக்கிட்டு “ஒரு நிமிஷம் பிரசாத்...” எனச்சொல்ல, “யெஸ் ஸார்” என திரும்பி மேனனைப் பார்த்தான்.
“என்ன நடந்ததுன்னு எல்லாருக்கும் தெரியும். சம்பந்தபட்டவங்களுக்கு என்ன தண்டனைன்றதை நானோ பிரசாத்தோ சொல்லப்போறதில்லை... பாதிக்கப்பட்டவங்களே அதை முடிவு பண்ணட்டும்” என்றார் மேனன்.
“புரியல சார்” என நிஜமாகவே புரியாமல் கேட்டான் பிரசாத்.
“பாண்டியனுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு தனபாலும், தனபாலுக்கு என்ன தண்டனைன்றதை பாண்டியனும் முடிவு பண்ணட்டும்” என்றார் மேனன்.
தாட்சாவுக்கு மேனனின் திட்டம் புரிந்தது. இரண்டு பேர் கையிலும் ஆயுதங்களைக் கொடுத்தாகிவிட்டது. இவன் வலுவாகத் தாக்கினால் பதிலுக்கு அவனும் வலுவாகத் தாக்குவான். அடி வாங்காமல் இருக்க வேண்டும் என்றால் எதிரில் இருப்பவனை அடிக்காமல் இருப்பது ஒன்றுதான் வழி.
பாண்டியன் மார்க்ஸைப் பார்த்தான். அவன் இறுக்கமாக அமர்ந்திருந்தான். மார்க்ஸின் பார்வை கீழ்நோக்கி இருந்தது. தலைவனைத் தலைகுனிய வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு பாண்டியனை அறுத்தது. அனைவரும் பாண்டியனும், தனபாலும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதற்காகக் காத்திருந்தார்கள்.
“பத்து நாளைக்கு முன்னாடி வரைக்கும் நீங்க எப்படி இருந்தீங்கன்றதை ஒரு நிமிஷம் யோசிச்சுக்குங்க. அப்புறமா என்ன தண்டனை கொடுக்கலாம்னு சொல்லுங்க... நீங்க எடுக்குற முடிவுதான் ஃபைனல். அதை நான் மாத்தவோ, தண்டனையைக் குறைக்கவோ மாட்டேன்” என்றார் மேனன்.
பாண்டியனும் தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் சினிமா பார்ட்னர்ஸ். நல்ல சினிமா, சுமாரான சினிமா என இல்லாமல் வெளியாகிற அத்தனை படங்களையும் முதல்நாள் இருவரும் சேர்ந்து பார்த்து விடுவார்கள். டாப் டென் சினிமா நிகழ்ச்சிக்கு தனபால்தான் தயாரிப்பாளர். அதனால் திரைப்பட ப்ரிவியூக்களுக்கு அவருக்கு அழைப்பு வரும். அவர் பாண்டியனைத்தான் தன்னுடன் அழைத்து செல்வார். படத்தைப் பார்த்துவிட்டு இருவரும் ப்ரிவியூ தியேட்டர் வாசலில் நின்று நள்ளிரவு வரை அத்திரைப்படம் குறித்து விவாதிப்பார்கள். அதன்பிறகு பாண்டியன் தனபாலை அவரது வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுதான் அவனது வீட்டுக்குப் போவான். அப்படி இருந்த இருவர்தான் இன்றைக்கு மோதிக்கொள்வது போன்ற சூழல் அமைந்து விட்டது.
பழைய விஷயங்களை நினைத்துப் பார்த்ததும் பாண்டியனின் கண்கள் அவனையறியாமல் கலங்கியது. “என்ன பண்ணலாம் சொல்லுங்க” என முடிவு எடுக்கும் அதிகாரம் பறிபோன எரிச்சலில் கேட்டான் பிரசாத்.
“நான் தனபாலை அடிச்சது பெரிய தப்பு சார்” என்றான் பாண்டியன். தனபால் அவனைத் திரும்பிப் பார்த்தார். மேனன் வழக்கம்போல எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தார்.
“நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!”
தனபால் மட்டுமல்ல. அறையில் இருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.
“உன்ன மன்னிப்பு கேட்க சொல்லல... அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு சொல்லு” என மீண்டும் எரிச்சலானான் பிரசாத்.
“நான் பண்ணுன தப்புக்கு அவருக்கு ஏன் தண்டனை கொடுக்கணும்? அவர் என்ன சொன்னாலும் அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்” என்றான் பாண்டியன்.
மார்க்ஸ், பாண்டியனை நிமிர்ந்து பார்த்தான். மன்னிப்பது யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் மனமார மன்னிப்பு கேட்பதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். மார்க்ஸின் மனதில் பாண்டியன் மேல் மதிப்பு அதிகமானது.
“தனபால், நீங்க சொல்லுங்க பாண்டியனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” - மேனன் கேட்டார்.
“உங்க மூக்கை உடைச்சிருக்கான்... நல்லா யோசிச்சுச் சொல்லுங்க” என்றான் பிரசாத்.
அறையில் இருக்கும் அனைவரும் தனபாலின் வார்த்தைக்காகக் காத்திருந்தனர். அவர் தட்டுத்தடுமாறி குரல் உடைய, “நான் அப்படி பேசுனது தப்பு... நான் பேசலைன்னா பாண்டியன் அடிச்சிருக்க மாட்டான். இதை அப்படியே விட்டுடலாம் சார்” எனச் சொல்லிவிட்டு தனபால் தலைகுனிந்தார். திரும்பி அவரை முறைத்துப் பார்த்தாள் ஏஞ்சல்.
தனபால் இப்படிச் சொல்வார் என பாண்டியனும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அறையில் இருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் வாயடைத்துப்போனார்கள். தாட்சாவின் கண்களில் அவர்கள் ஒரே அணியாகத் தெரிந்தார்கள். உணர்வுகளால் உந்தப்பட்டு அழுதுவிடுவோமோ என அவளுக்கே பயமாக இருந்தது.
“அவ்வளவுதான். பிரச்னை முடிஞ்சுது... போய் வேலையைப் பார்க்கலாம்” என மேனன் எழுந்தார்.
“சார், அடிதடி நடந்திருக்கு சார். இதை இப்படியே விட்டா ஒரு தப்பான முன்னுதாரணமா இருக்கும் சார்” என அழுத்தமாகச் சொன்னான் பிரசாத்.
“கண்டிப்பா தண்டனை கொடுத்தே ஆகணும்னா மேனன் சாருக்குத்தான் குடுக்கணும்” என்றார் நெல்லையப்பன்.
“மாமா” என மார்க்ஸ் அவரை அதட்ட... மேனன் புன்னகையுடன் “மார்க்ஸ் அவர் பேசட்டும்... நீங்க சொல்லுங்க” என்றார்.
“என்ன சார் சொல்றது ஒண்ணா இருந்தவங்களைப் பிரிச்சது நீங்க... அதனாலதான் சண்டையே வந்துச்சு... பிரிச்சீங்க சரி, எல்லாரையும் கூப்புட்டு பேருக்குதான் இந்த டீம், அந்த டீம் எல்லாம். எல்லாருமே ஆரஞ்சு டிவியோட புரோகிராமிங் டீம்தான். அப்படின்னு சமாதானமா சொல்லியிருந்தா இம்புட்டு குழப்பம் வந்திருக்காதில்ல” எனப் படபடவென நெல்லையப்பன் பேச சித்தார்த் மேனன் 'ஆம்' என்பது போல தலையாட்டினார்.
“சரியா சொன்னீங்க... இது என் தப்புதான். இதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என மேனன் சொல்ல பிரசாத் போலியாகப் பதறியபடி... “என்ன சார் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க... நெல்லையப்பா என்ன திமிரா உனக்கு!”
“அவரே ஒத்துகிட்டாரு... உனக்கு எங்கப்பா வலிக்குது!” என்றார் நெல்லையப்பன். திரும்ப பதிலுக்கு பிரசாத் ஏதோ பேச வர மேனன் அவனை இடைமறித்தார்.
“பிரசாத் அவர் சொல்றது கரெக்ட். என்மேல தப்பு இருக்கு. ஐ'ம் ஸாரி நெல்லையப்பன்” எனப் புன்னகையுடன் சொன்னார் மேனன்.
“நெல்லையப்பன் சொன்ன மாதிரி இது ஆரஞ்ச் டிவியோட புரோகிராமிங் டீம்தான். அதை மனசுல வெச்சிக்கிட்டு வேலையைச் செஞ்சாலே போதும்!”
“சார் இந்த இஷ்யூவை நான் ரிப்போர்ட் பண்ணணும்” என விடாமல் பிரசாத் தம் கட்ட, சிரித்தபடி மேனன் சொன்னார். "பிரச்னையை மட்டும் ரிப்போர்ட் பண்ணாத பிரசாத்.... அதை எவ்வளவு அழகா பாண்டியனும், தனபாலும் டீல் பண்ணுனாங்கன்னும் சேர்த்து ரிப்போர்ட் பண்ணு” என்றார் மேனன்.
“சார்... இன்னொரு கம்ப்ளெய்ன்ட் இருக்கு சார்” என எழுந்து நின்றாள் ஏஞ்சல்.
“இன்னொரு கம்ப்ளெய்ன்ட்டா... சரி சொல்லுங்க!” என்றார் மேனன்.
“பாண்டியன் மார்க்ஸோட ஆளு சார். மார்க்ஸுக்கு திவ்யா மேல கோபம். நேத்து கேன்டீன்ல திவ்யா கிட்ட சண்டை போட்டாரு. நாங்க பாதிப் பேர் திவ்யா டீமுக்குப் போனதை அவரால தாங்கிக்க முடியல. அந்த கோபத்துலதான் பாண்டியனைத் தூண்டிவிட்டு இப்படி ஒரு பிரச்னையைப் பண்ண வெச்சிருக்கார். அதுதான் சார் நிஜம். நியாயமா பனிஷ்மென்ட்டுன்னா அதை மார்க்ஸுக்குத்தான் கொடுக்கணும்” என்றாள் ஏஞ்சல்.
சித்தார்த்மேனன் சின்னப் புன்னகையுடன் திரும்பி, “என்ன மார்க்ஸ்... நீங்க என்ன சொல்றீங்க?'' என்றார்.
“சார்... நேத்து வரைக்கும் பாண்டியன் மட்டும் இல்ல சார், ஏஞ்சலும் என்னோட ஆள் தான்” என்றான். அறையில் இருந்த அனைவருக்கும் மார்க்ஸின் கிண்டல் புரிந்தது. ஏஞ்சல் முகம் சுருங்கியது.
“திவ்யா மேல எனக்கு கோபம். அவங்களைப் பிடிக்கல. அவங்களுக்குக் குடைச்சல் கொடுக்குறதுக்காகத்தான் இதைப் பண்ணுனேன்னுலாம் மத்தவங்க சொல்லக்கூடாது சார். திவ்யா சொல்லட்டும்... நான்தான் தப்பு பண்ணுனேன்னு... நடந்ததுக்குப் பொறுப்பு எடுத்துகிட்டு, கிளம்புறேன் சார்” என மார்க்ஸ் திவ்யாவைப் பார்த்தபடி சொன்னான்.
மார்க்ஸ் இப்படிச் சொல்வான் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரது கவனமும் திவ்யா பக்கம் திரும்பியது. திவ்யா மெலிதான பதற்றத்துடன் மார்க்ஸைப் பார்த்தாள்.
மார்க்ஸ் புன்னகையுடன் அவளை பார்த்தபடியே இருந்தான்.
“திவ்யா” என்றார் மேனன்.
அவள் சற்று யோசித்தவள் மார்க்ஸின் பார்வையைத் தவிர்த்து மேனனைப் பார்த்தபடி, "இல்ல சார்... நான் அப்படி நினைக்கல. இந்தப் பிரச்னைக்கும் மார்க்ஸுக்கும் சம்பந்தம் இருக்குறதா எனக்குத் தோணல” என்றாள். மார்க்ஸ் அவளைப் புன்னகையுடன் பார்த்தான்.
“ஓகே... இன்னைக்கு நடந்த சம்பவம் இன்னொரு தடவை ரிப்பீட் ஆகக்கூடாது. நாளைக்கு அடுத்த 6 மாசத்துக்கான பிளான் என்னன்றதை ரெண்டு டீமும் பிரசன்ட் பண்ணணும். அதுக்கு ரெடியாகுங்க” எனச் சொல்லிவிட்டு மேனன் அங்கிருந்து நகர்ந்தார். திவ்யா திரும்பி மார்க்ஸைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள். ஏஞ்சல், மார்க்ஸை முறைத்தபடி அவள் பின்தொடர்ந்தாள். மற்றவர்களும் அங்கிருந்து கலைய தாட்சாவும் மார்க்ஸும் மட்டும் கான்ஃபரன்ஸ் அறையில் தனித்திருந்தார்கள்.
“என்னடா என்ன நடக்குது உங்களுக்குள்ள?” என்றாள் தாட்சா.
மார்க்ஸ் சிரித்தான்.
“நீ என்னமோ திவ்யா சொன்னா வேலைய விட்டுப் போறன்ற... அவ என்னடான்னா மார்க்ஸ் நல்லவரு வல்லவருன்றா.... ஒண்ணும் சரியில்லயே”
"சில விஷயங்கள ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்'' என்றான் மார்க்ஸ்.
“இந்த மேனன் வேற லெவல்டா... எவ்வளவு பெரிய பிரச்னை... எப்படி அசால்ட்டா டீல் பண்ணாரு இல்ல!”
"சான்சே இல்ல தாட்சா... அவரு மட்டும் இல்லைன்னா நாலு பேர போட்டுத் தள்ளிருப்பான் இந்த பிரசாத்!”
“ஆமாடா... பாஸ்னா இப்படித்தான் இருக்கணும்... ஒரு பிரச்னை வரும்போது அதைப்பத்தி யோசிக்கிறதைவிட இந்த மேனன் அத எப்படி டீல் பண்ணுவாருன்ற யோசனைதான் முதல்ல வருது!”
மார்க்ஸ் தாட்சாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“என்னடா சிரிக்கிற!”
“மேனன் சிங்கிள்தான்... டைவர்ஸி....”
தாட்சா முகம் மாற “இப்ப எதுக்கு திடீர்னு இதைச் சொல்ற?!”
“ஒரு சிங்கிள்கிட்ட இன்னொரு சிங்கிள் பத்திப் பேசுறது தப்பா என்ன?”
“என்னடா கலாய்க்கிறியா?”
“சீரியஸா சொல்றேன் உங்க ஜோடி பயங்கரமா வொர்க் அவுட் ஆகும்”
“மண்ணாங்கட்டி” என்றபடி தாட்சா விருட்டென எழுந்து சென்றாள்.
“முன்னாடி சிரிக்கிறது பின்னாடி தெரியுது” என மார்க்ஸ் சிரித்தான்.
“புரோகிராமிங் ஹெட்டுடா... நீ எப்ப இருந்து கல்யாண புரோக்கர் ஆன...'' எனச் சிரித்தபடி அவள் அறையை விட்டு வெளியேறினாள். மார்க்ஸுக்கு இப்போதே ஏஞ்சலைப் பார்த்துப் பேச வேண்டும் எனத் தோன்றியது.
ஏஞ்சல் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தாள். எரிச்சலும் கோபமும் அவள் முகத்தில் மண்டிக் கிடந்தது. தற்செயலாக அவள் திரும்ப... மார்க்ஸ் மொட்டை மாடிக்கு நுழையும் கிரில் கேட்டருகே கையைக் கட்டியபடியே நின்றுகொண்டிருந்தான்.
ஏஞ்சல் முகத்தை திருப்பிக்கொள்ள...
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என அருகில் வந்தான் மார்க்ஸ்.
“எதுக்கு இன்னும் இந்த வெறுப்பை சுமந்துகிட்டு இருக்கே. விட்டுரேன்... எனக்காகச் சொல்லல... நீ நிம்மதியா இருக்கலாம் இல்ல!”
“நீ பண்ணுன துரோகத்தை மறக்கச் சொல்றியா... எவ்வளவு ஈஸியா என்னத் தூக்கிப் போட்டுட்டல்ல நீ...”
“உனக்கே தெரியும் நம்ம பிரேக் அப்-க்கு காரணம் நான் இல்லன்னு!”
“இந்த யோக்கியன் வேஷம் எல்லாம் என்கிட்ட போடாத... உன்னை மத்தவங்க நம்பலாம்... நான் நம்ப மாட்டேன்!”
“ஏஞ்சல்” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வர... “இந்த ஆபீஸை விட்டு அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நீ வெளிய போவ... அது நடக்கும்... நான் நடத்திக் காட்டுறேன்'' என்றாள் ஏஞ்சல் கோபமாக!
“எனக்கு உன்னப் பிடிக்கும் ஏஞ்சல்... நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னுதான் எப்பவுமே நான் யோசிப்பேன்!”
ஏஞ்சல் அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். அவர்களின் பிரேக் அப்-புக்குப் பின்னால் இருந்த காரணம் மார்க்ஸின் மனதைக் கனக்கச் செய்தது!
- Stay Tuned...
source https://cinema.vikatan.com/literature/siddharth-menon-solves-the-issue-idiot-box-part-11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக