நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றி மற்றும் காட்டுமாடுகளை வெடிவைத்து வேட்டாயாடுவது தொடர்கதையாக இருப்பதாக உள்ளூர் செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 6 காட்டுமாடுகள் வெடிவைத்து கொல்லப்பட்டுள்ளன. இந்த 6 காட்டுமாடுகளுக்கும் வாய் சிதைக்கப்பட்டு, நாக்கு வெளியில் தொங்கியபடி ஒரே மாதிரியான காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளது. மேலும் உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ள முடியாமல் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன.
Also Read: நீலகிரி: யானையைத் தொடர்ந்து காட்டுமாடு... மூன்றே ஆண்டுகளில் 6 மாடுகளின் வாய் சிதைக்கப்பட்ட கொடூரம்!
ராணுவ முகாம் அருகில் உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் வாய் சிதைக்கப்பட்ட நிலையில், படுகாயத்துடன் காட்டுமாடு ஒன்று கடந்த வாரம் உலவி வந்தது. இதனை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும் அந்த காட்டுமாடு இருக்கும் இடத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில், இதே பகுதியில் உள்ள ஓடை அருகில் அந்த காட்டுமாடு பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டுமாட்டின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கூறாய்வு செய்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், "இது ஒரு ஆண் காட்டுமாடு. சுமார் 7 வயது இருக்கலாம். இதன் நாக்கு, கீழ்தாடை சிதைந்து கடந்த 5 நாள்களுக்கும் மேலாக, உணவு உட்கொள்ள முடியாமல் இறந்தது தெரியவந்தது. உடற்கூறாய்வு முடிவுகள் வந்தப்பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்" என்றனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் பேசுகையில், "காட்டுப்பன்றிகளை வெடி வைத்து வேட்டையாடி வருகின்றனர். இதில் அவ்வப்போது காட்டுமாடுகள் சிக்கிக்கொள்கின்றன. இந்த 3 ஆண்டுகளில் வெளியில் தெரிந்தது மட்டுமே 6 காட்டுமாடுகள். உண்மையில் எத்தனை இறந்துள்ளன என்பது வனத்துறைக்கே வெளிச்சம்" என புலம்புகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/environment/gaur-found-dead-near-coonoor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக