பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் 2030-ம் ஆண்டு முதல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை பிரிட்டன் (UK) அரசு நிர்ணயித்துள்ளது.
எரிசக்தி முறையில் இயங்கும் வாகனங்கள் அதிக அளவு புகையை வெளியேற்றுகின்றன. அதன் காரணமாகக் காற்று மாசுபடுகிறது. எனவே சுற்றுச் சூழலைக் காக்கவும், பசுமை உலகத்தை உருவாக்கும் முயற்சியாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பை அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டன் அரசு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது.
முன்பு பிரிட்டன் அரசு, எரிசக்தி துறை சார்ந்த வாகனங்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு 2040-ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்திருந்தது. அதை இன்னும் விரைவாக 10 ஆண்டுகளுக்கு முன்னதாக 2030-ம் ஆண்டுக்குள் முடிப்பதற்கு இப்போது போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மின்சார கார் பயன்பாட்டில் கார்களை சார்ஜ் செய்யும் வசதி அனைத்து இடங்களிலும் இல்லாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கு கார்களை சார்ஜ் செய்யும் பிரத்யேக மின் பாயின்டுகளை பெருமளவில் அமைக்க வேண்டும். இதைத் தனிநபர் வீடுகளிலும் அமைக்க முடியும். பெட்ரோல் பங்க் போல பொதுவான இடங்களிலும் அமைக்க முடியும்.
ரீசார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக மட்டும் 1.3 பில்லியன் பவுண்டை பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது. வீடுகளில் மக்கள் இதை அமைத்துக் கொள்வதற்கு அரசு மானியமாக இந்தத் தொகை அளிக்கப்படும். அந்த நாட்டில் 25 மைல் சுற்றளவுக்குள் கிராமப்புறங்களில்கூட நிச்சயம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பதை இதன் மூலம் அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கார் கம்பெனி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியின் விலையை குறைக்கும் நடவடிக்கைக்காகவும், அதிக மின்சார பேட்டரிகளை தயாரிக்கும் நடவடிக்கைக்காகவும் அந்த அரசு ஒதுக்கியுள்ளது. இத்துடன், நாட்டில் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவி பசுமை வழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் அந்த அரசு முயன்று வருகிறது.
இப்போது பல நிறுவனங்கள் விரைவாக சார்ஜ் செய்யும் பேட்டரி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சியின் ஒரு முக்கிய மைல் கல்லாக 5 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் செய்யும் பேட்டரியை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த storedot என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பெட்ரோல் நிரப்பும் நேரத்துக்குள் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும். இதன் மூலம் எளிதாக வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். அவ்வாறு 5 நிமிடங்களில் சார்ஜ் செய்த மின்சாரத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனம் 480 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வாறு சார்ஜ் செய்வதற்கு சிறப்பு சார்ஜர்களுக்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.
இந்தியாவிலும் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஓடும் இருசக்கர வாகனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. பஜாஜ், டி.வி.எஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் ஏற்கெனவே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளன
மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்களும் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
நமது இந்திய நாடு அதிக அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருகிறது. மின்சார வாகனங்களின் பெருக்கம் நமது நாட்டுக்கு சாதகமாகவே மாறும். அதிக அளவு மின்சாரத்தை நமது நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் வாகனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். இது பெட்ரோல், டீசலுக்கான இறக்குமதிக்கான செலவினங்களை குறைக்கும். இந்திய அரசும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
Also Read: புதிய வகை கொரோனா: `இந்தியர்களுக்கு பாதிப்பு குறைவுதான்!' - நிலைமையை விளக்கும் பிரிட்டன் வாழ் தமிழர்
இந்த மாற்றமானது பெட்ரோல் டீசல் வணிகத்தை அதிகம் சார்ந்திருக்கின்ற அரபு நாடுகளுக்கு பிரச்னைகளை உண்டு பண்ணலாம்.
இன்னும் 20 வருடமாவது குறைந்தபட்சம் பெட்ரோல், டீலுக்கான தேவை குறையாது என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி அரபு நாடுகள் மாற்று தொழில்களில் வருமானம் ஈட்ட முயற்சி எடுத்து வருவது பொருளாதார சிக்கல்களிலிருந்து அந்த நாடுகளைக் காக்கும். தொழில்நுட்பத்தில் மாற்றமானது ஒவ்வொரு துறையிலும் நடைபெறக் கூடியதுதான். எந்த மாற்றமும் சாதகங்களும், பாதகங்களும் நிறைந்ததாகவே இருக்கும்.
80-களில் கோலோச்சிய பல தொழில்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. மாற்றத்தைத் திறமையாகக் கையாண்ட நிறுவனங்கள் மற்றும் நாடுகள் அபார வளர்ச்சியைப் பெற்ற வரலாற்றைக் கடந்த ஆண்டுகளில் பார்த்துள்ளோம். அதன் ஒரு பகுதியாகத்தான் எரிசக்தி தேவையின் மாற்றம் உள்ளது.
இதை உலக நாடுகள் சிறப்பாக பொருளாதார ரீதியில் வெற்றி கொண்டு பசுமை உலகத்தைப் பேணிப் பாதுகாப்பது நமது அடுத்த சந்ததியினருக்குப் பயனுள்ளதாக நிச்சயம் மாறும்.
source https://www.vikatan.com/business/news/uk-to-ban-sales-of-petrol-and-diesel-cars-by-2030
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக