Ad

வெள்ளி, 29 ஜனவரி, 2021

புதுச்சேரி: 3-வது முறையாக தீவிரம் எடுத்த ஹெல்மெட் விவகாரம்! -மீண்டும் அமலுக்கு வந்தது வாகனச் சட்டம்

2017-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்த மத்திய அரசு, இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ’மே மாதம் முதல் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிக்கப்படும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. ஆனால் முதல்வரின் அறிவிப்பு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்றும் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோட்டார் வாகன சட்டம்

அதையடுத்து ‘ஹெல்மெட் இல்லாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முதல் முறை ரூ.100-ம், இரண்டாவது முறை ரூ.300-ம், மூன்றாம் முறை ரூ.500 என அபராதத் தொகை ஏற்றி வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது போக்குவரத்துத்துறை. அதன்பிறகு ஒரே வாரத்தில் லட்சக்கணக்கான ஹெல்மெட்கள் விற்றுத் தீர்ந்தன. 300 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை ஹெல்மெட்கள் விற்கப்பட்டன. அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டுவிட்டு ஹெல்மெட் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். அதன்பிறகு பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ‘ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம். அறிவுறுத்தினாலே போதும்’ என்றார் முதல்வர் நாராயணசாமி. இந்த விவகாரத்தில் கவர்னர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் மோதிக்கொண்டது தனிக்கதை.

அதையடுத்து 2019-ம் ஆண்டு கவர்னர் கிரண் பேடி கொடுத்த அழுத்தத்தால் அப்போது டி.ஜி.பியாக இருந்த சுந்தரிநந்தா, ‘ஹெல்மெட் கட்டாயம், இல்லையென்றால் அபராதம்’ என்று கண்டிப்புடன் கூறினார். ஆனால் ‘அபராதம் வசூலிக்கக் கூடாது. அறிவுறை மட்டுமே வழங்க வேண்டும்’ முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டதால் ஹெல்மெட் பிரச்னை மீண்டும் முடிவுக்கு வந்தது. தற்போது மூன்றாவது முறையாக ஹெல்மெட் விவகாரம் தீவிரமெடுத்திருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை செயலர் அசோக்குமார், ``மத்திய அரசின் திருத்திய மோட்டார் வாகனச் சட்டம் குறித்த புதுவை அரசின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

நாராயணசாமி - கிரண் பேடி

அதன்படி, ஆட்டோவில் அதிகக் கட்டணம் வசூலிப்பது, பேருந்தின் படிகளில் பயணம் செய்வது, நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளில் கருப்பு திரை ஒட்டுதல், விதிகளை மீறிய வாகன எண்களின் பலகை, முதலுதவி பெட்டியில்லாத வாகனம், வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் தீயணைப்பான் இல்லாத பள்ளி வாகனம் உள்ளிட்ட குற்றங்களுக்கு ரூ. 200 லிருந்து ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினாலும், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தாலும் ரூ.1,000 அபராதத்துடன் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமையும் தடை செய்யப்படும். காரில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 1,000 ரூபாயும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாயும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயும், வேக வரம்பை மீறினால் 1,000 முதல் 4,000 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.

மேலும், அதிக சுமைக்கு 2,000 ரூபாயும் ( ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய்), இசைவாணையின்றி ஓட்டினால் 10,000 ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லையென்றால் 2,000 முதல் 4,000 ரூபாய் என 73 குற்றங்களுக்கு ’ஸ்பாட் ஃபைன்’ வசூலிக்கப்படும். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் ஒரு வழிப்பாதையில் தவறான பயணம், வேக வரம்பை மீறுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதலுக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அல்லது ஒராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் 25,000 ரூபாய் அபராதத்துடன் வாகனப் பதிவு நீக்கம் அல்லது பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் தொடர்புடைய நபருக்கு 25 வயது வரை வாகனம் ஓட்டத் தடை உள்ளிட்ட 77 குற்றங்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் மேற்கண்ட அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படும். நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்புறம் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

Also Read: புதுச்சேரியில் அமலுக்கு வந்தது பேனர் தடைச் சட்டம்!

அப்படி இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபராதம் வசூலிப்பதற்காக 16 இ-சலான் இயந்திரங்கள் அரசிடம் இருப்பில் உள்ளன. விரைவில் ஏ.டி.எம் அல்லது இணையச் செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகன சோதனைகளின்போது டிஜி லாக்கர் அல்லது அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் ஆவணங்களை காண்பிக்கலாம்” என்றார். அதேசமயம், “புதுச்சேரியின் சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக புழுதி பறக்கும் அளவுக்கு பஞ்சராகிக் கிடக்கிறது. முதலில் அதனை சரி செய்யுங்கள். அதன்பிறகு அபராதத்தை விதியுங்கள்’ என்று போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் பொதுமக்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-if-you-do-not-have-a-helmet-you-will-be-fined-rs-1000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக