Ad

வியாழன், 28 ஜனவரி, 2021

`உள்ளே புகுந்த பா.ஜ.க அணி, திசைமாறிய விவசாயிகள் போராட்டம்!' - ரஜ்விந்தர் சிங் சொல்வது என்ன?

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு, டிக்ரி உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Farmers Protest

Also Read: `கூடுகிறது நாடாளுமன்றம்; விவசாய போராட்டத்தில் போலீஸார் குவிப்பு!’ - டெல்லி எல்லையில் பதற்றம்

இரு தரப்பினருக்கமான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். டெல்லி காவல்துறை எந்த இடம் வரை அனுமதிக்கிறதோ, அந்த இடத்தில் பேரணியை முடித்துக்கொள்வோம் என்றும், காவல்துறை அனுமதி தராமல் டெல்லி நகருக்குள் நுழைய மாட்டோம் என்றும் போராடும் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டனர். காவல்துறை வழிகாட்டுதலின்படி டிராக்டர் பேரணி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி காலை 11 மணிக்குப் பேரணியைத் தொடங்கலாமென விவசாயிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்று காலை 8.30 மணிக்கே சில விவசாயிகள் பேரணியாகக் கிளம்பத் தொடங்கினர். அவர்கள் அனுமதி கொடுத்த இடத்தோடு பேரணியை நிறுத்தாமல், காவல்துறை வைத்த தடுப்பரண்களை மீறி தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைத் தடுப்பதற்காகக் காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நவ்தீப் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார்.

Farmers Protest

Also Read: டெல்லி:`திசைமாறிவிட்டது; நாங்கள் இதற்கு வரவில்லை!’ - போராட்டத்தை முடித்துக்கொண்ட 2 விவசாய சங்கங்கள்

இதற்கிடையில் ஒரு பகுதி போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் உள்ள கம்பம் ஒன்றில் சீக்கிய மதத்தின் புனிதக்கொடி ஒன்றை ஏற்றினர். நிலைமை தீவிரமானதை உணர்ந்து குடியரசு தின டிராக்டர் பேரணியை முடித்துக்கொள்வதாகவும், இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் விவசாய அமைப்புகள் அறிவித்தன. ``அனைத்து பங்கேற்பாளர்களும் உடனடியாகத் தங்களது முந்தைய போராட்ட களத்துக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், விவசாயிகளின் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்" என்று அந்த அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லியில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேலதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் களத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங்கிடம் பேசினோம். ``பா.ஜ.க ஓர் அணியை உருவாக்கி அவர்களை காவல்துறை தயார் செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறை முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதே இதில் ஏதோ சதி இருப்பதாகவே உணர முடிகிறது. காவல்துறையாவது அனுமதி தரமாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், காவல்துறை அனுமதியைக் கொடுத்துவிட்டு வன்முறைக்கு வித்திட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கமான நடைமுறையைப் பின்பற்றத்தான் அனைத்து விவசாயிகளும் முடிவெடுத்தார்கள். ஆனால், பா.ஜ.க அமைத்த குழுவானது காலை 8.30 மணிக்கே புறப்பட்டிருக்கிறது. அவர்கள் எடுத்த எடுப்பிலேயே செங்கோட்டை நோக்கிப் பயணம் செய்திருக்கிறார்கள். விவசாயிகள் நகரின் ஒதுக்குப் புறமான சாலைகளில் போவதுதான் திட்டம். விவசாயிகள் கூட்டத்துக்குள் புகுந்த பா.ஜ.க குழு விவசாயிகளின் பாதையை மாற்றி அமைத்திருக்கிறது. விவசாயிகளும் செங்கோட்டையை நோக்கிப் பயணம் செய்துவிட்டனர். தவறான பாதையைக் காட்டிய குழு கோட்டையில் கொடியை ஏற்றியவுடன் ஒதுங்கிக் கொண்டது. அதன் பின்னர், அனைத்தும் செய்தது விவசாயிகள் என்ற பாணியில் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

ரஜ்விந்தர் சிங்

இடையில் கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு, போலீஸுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை நிகழ்ந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. அதில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர். 200 பேர்மீது பிணையில் வரமுடியாதபடி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இன்னும் 100 விவசாயிகள் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. நிலை விபரீதமாகப்போகிறது என்பதை உணர்ந்த விவசாயிகளும், தாங்கள் வேறொரு தவறான குழுவால் வழிநடத்தப்போகிறோம் என அறிந்த பஞ்சாப் விவசாயிகளும் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பியிருக்கின்றனர். தங்களை அறியாமல் தவறான குழு வழிகாட்டுதலின்படி போன விவசாயிகள் மட்டும்தான் பிரச்னையில் சிக்கியிருக்கிறார்கள். தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிய விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதிலிருந்து இரண்டு அமைப்புகள் மட்டும் வெளியேறி இருக்கின்றன. இன்னும் 35-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. பேரணி நன்றாக நடந்திருந்தால் உலக அரங்கில் விவசாயிகளுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால், அமித்ஷாவும் பிரதமர் மோடியும் சேர்ந்து அதைக் கெடுக்கும் விதத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்" என்றார்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து தங்கள் சங்கங்கள் விலகிக்கொள்வதாக இரண்டு வேளாண் அமைப்புகள் அறிவித்துள்ளன.

Also Read: டெல்லி: `தலைமறைவான தீப் சித்து?; காவலர்களைச் சந்தித்த அமித் ஷா’ - வன்முறையைத் தொடர்ந்து ரத்தான பேரணி



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/rajwinder-singh-speaks-about-what-happened-during-farmers-republic-day-tractor-rally

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக