ஐபிஎல் ஆரம்பம்!
2021 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் 11 முதல் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் மார்ச் 28-ம் தேதியோடு முடிகிறது. இந்தத்தொடர் முடிந்ததும் இரண்டு வார இடைவெளிக்குப்பிறகு ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போலவே, 2021 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கலாம் எனப்பேசப்பட்டு வந்தநிலையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடத்த திட்டமிட்டிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸில் 'ஜகமே தந்திரம்'!
தனுஷ் நடித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு லண்டனில் நடந்துமுடிந்து கடந்த ஆண்டே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. கொரோனா சூழலால் பட வெளியிட்டை தள்ளிப்போட்டார் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த். ''ஓடிடி ரிலீஸ் இல்லை, தியேட்டர் ரிலீஸ்தான்'' என்று தொடர்ந்து சொல்லிவந்தார் தயாரிப்பாளர். லண்டனில் ஷூட் செய்திருப்பதால் படத்துக்கு இங்கிலாந்து அரசிடம் இருந்து மானியம் கிடைக்கும், அது தியேட்டரில் ரிலீஸ் ஆனால்தான் கிடைக்கும் என்றும் பேசப்பட்டது. ஆனால், தற்போது 'ஜகமே தந்திரம்' படத்தை நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் செய்யும் முடிவை தயாரிப்பாளர் எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது. இதுகுறித்து படக்குழுவில் விசாரித்தோம். ''தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இருவருமே தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறார்கள். தயாரிப்பாளருமே அந்த முடிவில்தான் இருக்கிறார். ஆனால், கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஓடிடி ரிலீஸுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப்பிறகுதான் 'ஜகமே தந்திரம்' படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறோம்'' என்றார்கள்.
'எந்திரன்' கதை விவகாரம்!
இயக்குநர் ஷங்கருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது எழும்பூர் நீதிமன்றம். 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடைய 'திக்திக் தீபிகா' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக ஆருர் தமிழ்நாடன் எனும் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிடிக்கப்பட்டிருக்கிறது. 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட படம் 'எந்திரன்'. கதை திருட்டு நடந்திருப்பதாக ஆருர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர, கடந்த ஆண்டு விசாரணைக்குத் தடைகேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றார் இயக்குநர் ஷங்கர். ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுக்க, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், இயக்குநர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞரோ யாரும் பதில் தராததால் கைது செய்ய பிடிவாரன்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதை திருட்டு விவகாரம் தொடர்பாக ஷங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கும் வரவில்லை.
100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி!
தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்தியா முழுக்க தியேட்டர்கள் மூடப்பட்டன. அக்டோபர் மாதவாக்கில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப்பிறகு மீண்டும் தியேட்டர்கள் பழையபடி செயல்பட இருக்கிறது.
சல்மான்கானுக்கு வில்லன் விஷால்!
சினிமா உலகில் தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கையும், அதற்கான வருமானமும் கூடிக்கொண்டேபோவதால் தமிழ் மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்துகிறது பாலிவுட். ஏற்கெனவே ஷாருக்கான் 'சென்னை எக்ஸ்பிரஸ்' எனும் படத்தில் நடித்ததோடு, தற்போது இயக்குநர் அட்லிக்கு கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார். அட்லி படம் இந்த ஆண்டு மே-மாதத்துக்குப்பிறகு ஷூட்டிங் தொடங்கயிருக்கிறது. ஷாருக்கான் வழியை இப்போது சல்மானும் கானும் பின்பற்றுகிறார். விஷால் - அர்ஜுன் நடித்து தமிழில் வெளியான 'இரும்புத்திரை' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் விஷால் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். அர்ஜுன் கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது!
source https://cinema.vikatan.com/tamil-cinema/jagamey-thandhiram-on-netflix-ipl-2021-to-start-from-april-11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக