“கால் நுாற்றாண்டு காலம் காத்திருந்த தங்களை ஏமாற்ற வேண்டாம்'' என்று ரஜினியின் ரசிகர்கள், அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதே நேரம் ஆன்மிக வழியாகவும் ரஜினியின் முடிவை மாற்றும் வேலைகள் நடக்க ஆரம்பித்துள்ளன.
டிசம்பர் 3-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, “அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி. அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதியன்று அறிவிப்பேன் என்று பதிவிட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் 29-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி துவங்க முடியாது. ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னை மன்னிக்க வேண்டும்” என்ற நீண்ட விளக்கத்தோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றன. அதே நேரம் அவரது இந்த முடிவினால், கடந்த 25 ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்றத்தை நடத்தி வந்த அவரது ரசிகர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார்கள்.
மற்றொருபுறம் ரஜினியினால் அவரது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்ட தமிழருவி மணியன், “இனி அரசியல் களத்தில் காலெடி எடுத்து வைக்கமாட்டேன்” என்று அறிக்கை விட்டு ஒதுங்கிக்கொண்டார். இந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்ட பிறகு அவரது குடும்பத்திலும் இதுகுறித்த நீண்ட விவாதங்கள் நடந்தன. உடல்நிலை முக்கியம் என்பதால் அரசியல் இயக்கம் தேவையில்லை என்று அவரது மகள்கள் முட்டுக்கட்டையாக இருந்தனர். இந்தநிலையில் அரசியல் முடிவிலிருந்து ரஜினி பின்வாங்கியது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக ரஜினியின் அரசியலைப் பின்புலமாக வைத்தே சில ஆடுபுலி ஆட்டத்தை தமிழகத்தில் நடத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. இதற்கு ரஜினியின் பின்வாங்கல் பெரும் அடியாக அமைந்துவிட்டது.
அதே நேரம் ரஜினியை மீண்டும் அரசியல் களத்துக்குள் கொண்டுவரமுடியுமா என்கிற ஆசை அவரது ரசிகர்களிடம் இப்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அந்த குரூப் மூலம் சில நாட்களாகவே ரஜினியை மீண்டும் அரசியல் களத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கலாம் என்று கருத்து பதிவிட்டனர். சில மாவட்டங்களில் ரஜினி மீண்டும் அரசியலுக்குள் வரவேண்டுமன அறவழியில் போராட்டமும் நடத்தினர். இதைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி அன்று மிகப் பெரிய அளவில் ரசிகர்களைத் திரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அறவழியில் போராட்டம் நடத்த முடிவெடுத்தாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, அரசியலிலிருந்து வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இந்த தகவல் வெளியானதும் சென்னை வடக்கு மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் சந்தானம் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. “ரஜினியின் முடிவுக்கு மாறாக எந்த போராட்டத்திலும் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் அறிவிப்பு வெளியானது. ஆனால், “மாநில அளவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சந்தானத்தின் இந்த அறிவிப்பை அவரது பகுதியைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என பிற மாவட்ட நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் நடந்துவரும் நிலையில் கடந்த 2-ம் தேதி அன்று ரஜினியை ரிஷிகேஷைச் சேர்ந்த நமோ சாமி என்பவர் சந்தித்தார். அவரும் “நீங்கள் அரசியல் முடிவிலிருந்து பின்வாங்குவது சரியாக இருக்காது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதற்காகவே நான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்” என்று சொல்லி, ஆன்மிக ரீதியாகவும் அவர் அரசியலுக்கு வரும் காலங்களில் ஏற்படும் பலன்களைப் பட்டியலிட்டுள்ளார். இதன்பிறகு மீண்டும் என்ன செய்யலாம்என்று ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்க ஆரம்பித்துள்ளார்.
அதே நேரம் ரஜினிக்கு நெருக்கமான ஜோதிடரை ரஜினி சார்பாக சிலர் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அவரும் “ராகு, கேது இரண்டு கிரகங்களின் தாக்கமே அவரது குழப்பத்துக்குக் காரணம். மே மாதம் கடந்தால் அனைத்தும் சரியாகிவிடும்” என்று சொல்லியிருக்கிறார். இதை லதா ரஜினியிடம் சொல்லியுள்ளனர்.
“அரசியலுக்கு வரமுடியாது என்கிற முடிவையே அவர் குழப்பத்துடனே எடுத்தார். ஆனால், தன்னை நம்பியவர்களை ஏமாற்றிவிட்டோமோ என்கிற உறுத்தல் அவருக்கு இப்போதும் உள்ளது” என்று லதா ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அவர்களிடம் பதில் சொல்லியுள்ளனர். லதா சொன்ன இந்த தகவல் இப்போது டெல்லி வரை சென்றுள்ளது. இதன் பிறகே துக்ளக் விழாவுக்காக அமித் ஷா சென்னை வரும்போது ரஜினியைச் சந்திக்க வைக்கமுடியுமா என்கிற கணக்கில் சிலர் இறங்கியுள்ளார்கள். ஏற்கனவே பா.ஜ.க வினர் செய்த அட்ராசிட்டியால் பா.ஜ.கவின் மற்றொரு அணியாகவே தமிழக அரசியல் களத்தில் ரஜினியை அடையாளப்படுத்தினார்கள். இப்போது அமித் ஷாவுடன் சந்திப்பை நடத்தி தேவையில்லாத சர்ச்சையில் சிக்கவேண்டாம் என்று ரஜினி தரப்பில் நினைக்கிறார்கள். அரசியல் கட்சி தொடங்காவிட்டாலும் அவரை எப்படியும் தங்களுக்கு வாய்ஸ் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்றும் சிலர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Also Read: `தமிழகத்தில் ரஜினி... மேற்கு வங்கத்தில் கங்குலி' - அரசியல் அழுத்தம் கொடுக்கிறதா பா.ஜ.க?
ஆனால், தனக்கு நெருக்கமானவர்களை கடந்த சில நாள்களாக ரஜினி சந்தித்து வருகிறார். அவர்களிடம் நான் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொன்னதை இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன். தமிழக மக்களுக்கு என்னால் ஏதாவது ஒரு நல்லகாரியம் நடக்கவேண்டும். அதைக் கண்டிப்பாக எந்த வழியிலாவது செய்துவிடுவேன்” என்று உறுதியாக சொல்லிவருகிறாராம். இந்த நிலையில் ரசிகர்கள் வேறு போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் தகவல் ரஜினிக்கு எட்டியுள்ளது. விரைவில் நிர்வாகிகளைச் சந்தித்து தனது மனதில் உள்ள சில விசயங்களை பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் ரஜினி இருக்கிறாராம்
ரசிகர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்தும் மூடில் உள்ள நிலையில் ரிஷிகேஷ் சாமியாரின் ஆலோசனையும், ரசிகர்களின் வேண்டுகோளையும் புறம் தள்ளமுடியாமல் புதிய யோசனையில் ரஜினியும் இருக்கிறார். “ரஜினியைப் புரிந்துக்கொள்வது யாராலும் முடியாது. ரஜினியின் மனதை அவர் மட்டுமே அறிவார். அதற்காக நாங்கள் அமைதியாகவும் இருக்கமுடியாது. இந்த அறவழிப்போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். அதன்பிறகு ரஜினி அரசியல் வருகையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். தொடர்ந்து எங்கள் முயற்சிகள் இருந்துக்கொண்டே இருக்கும்” என்கிறார் ரஜினிக்கு நெருக்கமான அவரது மன்ற நிர்வாகி ஒருவர்.
ரஜினியின் ராஜதந்திரம் இந்த முறையாவது சோபிக்குமா என்கிற எதிர்பார்ப்பு இப்போதும் அவரது ரசிகர்களிடம் இருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/in-spiritual-way-is-next-game-with-rajini
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக