பொங்கலுக்கு விஜய்யின் 'மாஸ்டர்' படமும் சிலம்பரசன் நடிக்கும் 'ஈஸ்வரன்' படமும் வெளியாகவிருக்கின்றன. இதுவரை திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு முழுவதையும் கொரோனாவிற்குப் பயந்து முழு முடக்கத்தில் இருந்த தேசம் இப்போதுதான் மெல்ல மீண்டுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தியேட்டர்கள் 100% இருக்கைகளோடு திறக்கப்படுவதில் இருக்கும் ஆபத்து குறித்து சர்ச்சை எழுந்திருக்கிறது.
அதுவும் இம்முறை எதிர்ப்பு அரசியல் கட்சிகளிடம் இருந்து வரவில்லை... மருத்துவர்களிடம் இருந்து வருகிறது. நோய்த்தொற்றிற்கு இன்னும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத நிலையில் இப்படி திரையரங்குகள் 100% திறக்கப்படுவது ஆபத்தானது எனப் பல மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
'யுவர்ஸ் டையர்ட்லி' எனத் தலைப்பிட்டு விஜய், சிம்பு மற்றும் தமிழக முதல்வருக்கு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதம் எழுதியிருக்கிறார் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் இளம் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பலரால் படிக்கப்பட்டு, அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
"நான் சோர்வாக இருக்கிறேன், நாங்கள் எல்லோரும் சோர்வாக இருக்கிறோம். என்னைப்போல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சோர்வாக இருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் சோர்வாக இருக்கிறார்கள். காவல் துறையினர் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக இருக்கிறார்கள்.
நாங்கள் களத்தில் இறங்கி, எதிர்பாராத நேரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைக் குறைப்பதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பணியை மிகைப்படுத்திக் கூறவில்லை. எனக்குத் தெரியும், பார்ப்பவர்களுக்கு இது அப்படி ஒன்றும் பெரிய விஷயமாகத் தெரியாது. எங்கள் முன் கேமராக்கள் இல்லை. எந்த அதிரடி காட்சிகளும் இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்கும் பேராசைக்கும் நாங்கள் பலியாக விரும்பவில்லை.
பெருந்தொற்று காலம் இன்னும் முடியவில்லை. இன்றுவரை மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் 100% இருக்கை பயன்பாட்டோடு திரையரங்குகள் திறக்கப்படுவது ஒரு தற்கொலை முயற்சி. இன்னும் சொல்வதானால் அது படுகொலை. ஏனெனில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களும், கதாநாயகர்கள் எனப் போற்றப்படுபவர்களும் மக்களோடு ஒருவராக நின்று கூட்டத்தில் படம் பார்க்கப் போவதில்லை. இது பணத்திற்காக மனித உயிர்களைப் பலிவாங்கும் அப்பட்டமான பேரம்.
நாம் தயவுகூர்ந்து மெதுவாக உயிர்களைக் காப்பாற்றுவது குறித்துச் சிந்தித்து, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை அமைதியாகக் கடந்த வர முற்பட வேண்டியிருக்கிறது. மெதுவாக அணைந்து கொண்டிருக்கும் நெருப்பை ஊதி பெருந்தீ ஆக்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பதிவை அறிவியல் பூர்வமாக விளக்கி நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என எழுதவே நினைத்திருந்தேன். பிறகுதான் என்னை நானே கேட்டுக்கொண்டேன், 'எழுதி என்ன பலன்?'
யுவர்ஸ் டையர்ட்லி,
ஏழை, சோர்வுற்ற ரெசிடெண்ட் மருத்துவர்"... இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் டாக்டர் அரவிந்த்.
இவர்மட்டுமல்ல, தனிநபர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் என அரசின் முடிவிற்கு எல்லா பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் தமிழர் ஒருவர், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக தொற்றுநோய்கள் துறைத் தலைவர் ஃபஹிம் யூனஸிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். "இந்தியாவில் நான் வசிக்கும் மாநிலத்தில் தியேட்டர்கள் முழுதாகத் திறக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்ற அந்த கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் யூனஸ், "திரையரங்குகள், குறைவான காற்றோட்டத்துடனும், நெரிசலுடனும் இருக்கும். வைரஸ் பரவலில் முழு கட்டுப்பாடுகளின்றி இதைச் செய்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்கவும்" எனப் பதிலளித்துள்ளார்.
India: Cinema theaters are poorly ventilated, indoor, crowded, prolonged exposure settings. I cringe at the thought of opening theaters without complete control over the viral spread.
— Faheem Younus, MD (@FaheemYounus) January 5, 2021
Avoid. Avoid. Avoid. https://t.co/MhPcziMWgo
குளிரூட்டப்பட்ட, அடைத்த அரங்கினுள் பலநூறு பேர் என்பதை நினைக்கவே அச்சமாகத்தான் இருக்கிறது!
source https://cinema.vikatan.com/tamil-cinema/a-doctors-facebook-post-regarding-full-occupancy-in-theatres-went-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக