Ad

சனி, 26 டிசம்பர், 2020

புதுச்சேரி: `ஜனநாயகத்தைப் பற்றிப்பேச பிரதமருக்குத் தகுதி கிடையாது!’ - கொதிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா 48 நாள்கள் நடக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். மற்றும் அனைவரது உடல் வெப்பநிலையும் சோதனையிடப்படும். கிருமிநாசினி கொடுக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு கொரோனா வழிமுறைகளில் கூறியிருக்கிறது.

பிரதமர் மோடி

அதன்படி நளத்தீர்த்த குளத்தில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோயில் எல்லைக்குள் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி பக்தர்களின் வருகை கண்காணிக்கப்படுகிறது. ஆகம விதிப்படி விழா நடக்கும். மாநில அரசின் முடிவுகளை எதிர்த்து சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக்கூடாது என ஆளுநர் நீதிமன்றம் சென்றது, இதுதான் முதல்முறையாகும். அதேபோல புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு எந்தத் தடையுமில்லை. தேசிய அளவிலும், தமிழகத்தையும் பார்க்கும் போது புதுச்சேரியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைவு. அதனால், சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

தமிழகத்தில் கடற்கரையில் விழா கொண்டாடக்கூடாது என்று சொன்னதற்காக, அதனை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. கேரளா, ஆந்திரா, கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை இல்லை. அரசை எதிர்த்து புகார் அனுப்புவதற்காகவே கிரண்பேடி சிலரைத் தயாராக வைத்திருக்கிறார். மேட்ச் பிக்சிங் போல செயல்படும் கிரண்பேடி, முதல்வர் மற்றும் அமைச்சர்களை எதிர்த்து மீம்ஸ் போடுவதற்காகவே தனியாக ஆள்களை வைத்திருக்கிறார்” என்றார்.

இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீரில் `ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ”ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு-காஷ்மீர் வென்றுள்ளது. புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான், புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கிரண் பேடி - நாராயணசாமி

பிரதாமர் பேசிய அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி,``பிரதமர் கூறியதுபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த பத்தாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்துவிட்டன. மேலும், போதிய சுகாதாரம் இல்லை, மோசமான நீர் மேலாண்மை, வறட்சி, பள்ளிக் கல்வி மற்றும் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பிரதமரின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, ``உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கெனவே மாநிலத் தேர்தல் ஆணையரை நாங்கள் நியமித்தோம். அந்த நியமனத்தைத் தடுத்த ஆளுநர் கிரண்பேடி, அவரே ஒருவரை நியமித்தார். அதையடுத்து புதுச்சேரி அரசு சார்பாக புதிய தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் என்பவரை நியமனம் செய்தனர். ஆனால் அந்த நியமன உத்தரவை ரத்து செய்தார் கிரண் பேடி. அதையடுத்து கொரோனா தொற்று தீவிரமான இருந்தச் சூழலில் வேறு ஒருவரை தேர்தல் ஆணையராக நியமிக்க முயற்சித்தார் கிரண் பேடி.

இதற்கிடையில் ஆளுநர்-அமைச்சரவை இருதரப்பில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம். இந்நிலையில் இரண்டாவதாக கிரண் பேடி நியமித்த தேர்தல் ஆணையரின் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அதனால், பிரதமர் மாநில அரசை குற்றம் கூறுவது அர்த்தமே இல்லாத ஒன்று. மாநில அரசின் அதிகாரங்களை முழுமையாக பறித்துக்கொண்டதுடன், ஆளுநர் கிரண்பேடி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்பதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாநில உரிமையை பறிப்பதுதான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையைப் பறிப்பது ஜனநாயகம் இல்லை என்பது தெரியாமல்தான் பிரதமர் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்.

Also Read: புதுச்சேரி: `இரண்டு வேட்டி, சட்டை போதும்!’ - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் நாராயணசாமி

பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக முறைப்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாகக் கூறுகிறார். ஆனால், வேட்பாளர்களை வீட்டை விட்டு வெளியே விடாமல் செய்வதுதான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியாத அளவுக்கு அவர்களைச் சிறைப்பிடித்து வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அதனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுதான் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா? அப்படியிருந்தும் காஷ்மீர் வாழ் மக்கள் பா.ஜ.க-வுக்கு எதிராகத்தான் இந்தத் தேர்தலில் வாக்களித்து உள்ளனர். ராணுவத்தை வைத்து கொண்டு முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. அதனால், ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. மத்திய அரசே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-narayanasamy-slams-pm-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக