Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

இளைஞரணி பதவி... நவம்பர் முதல் அரசியல் ஆட்டம்! - பா.ஜ.க-வில் முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை

2011 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். ஏறத்தாழ பத்து வருடம் கர்நாடகாவில் பணியாற்றிய நிலையில், ஜூன் 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கரூரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தவர், அவ்வப்போது அரசியல்ரீதியிலான கருத்துகளையும் வெளிப்படுத்தினார். மோடி, அமித்ஷாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அண்ணாமலை, விரைவிலேயே பா.ஜ.க-வில் இணையப் போவதாக செய்திகள் இறக்கைகட்டின. ஆகஸ்ட் 5-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அண்ணாமலை அளித்திருந்த பேட்டியில், “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலுக்கு வருவேன்” என்பதை தெளிவுப்படுத்தியிருந்தார். இந்த நிலையில்தான், அவர் இன்று பா.ஜ.க-வில் இணையவுள்ளார்.

அண்ணாமலை ஐ.பி.எஸ்

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர்களிடம் பேசினோம். “கர்நாடகாவில் அண்ணாமலை பணியாற்றியபோதே பா.ஜ.க தலைவர்களின் பார்வையில் விழுந்துவிட்டார். மோடி மீது நல்ல மதிப்பு கொண்டவர். ரஜினியுடனும் நல்ல தொடர்பில் இருந்தார். இன்று பா.ஜ.க-வில் இணையவுள்ள அண்ணாமலைக்கு தேசிய இளைஞரணியில் முக்கிய பொறுப்பு கொடுப்பதற்கு முடிவாகியுள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவருக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில், அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் சில காய்நகர்த்தல்களை டெல்லி செய்யப் போகிறது. வரும் நவம்பரில் இருந்து அரசியல் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும்” என்றனர்.

Also Read: "ஐபிஎஸ் பணியிலிருந்து சமூக சேவையோடு இயற்கை விவசாயம் பக்கம் வந்தது ஏன்?" -`கர்நாடக சிங்கம்' அண்ணாமலை

சில பேட்டிகளில் ரஜினிக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியதால், அவர் ரஜினியின் மன்றத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் பா.ஜ.க-வில் இணையவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கும் அண்ணாமலை, அவர் முன்னிலையில் கட்சியில் இணைகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன.



source https://www.vikatan.com/news/politics/annamalai-ips-will-join-bjp-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக