Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

ஆரணி: `வீடு தேடி வந்து அசிங்கப்படுத்தியதால்..!’ - அதிரவைத்த நெசவுத் தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (67), கணவரை இழந்தவர். இவரது ஒரே மகளான கோமதி பக்கத்து கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். தனியாக வசித்துவந்த மூதாட்டி ராஜேஸ்வரி வீடு வாடகைக்கு விட்டும், வட்டிக்கு பணம் கொடுத்தும் வசூலித்துவந்துள்ளார். இந்தநிலையில், பலமுறை போன்செய்தும் தாய் எடுக்காததால், மகள் கோமதி பதறியடித்துக்கொண்டு கடந்த 21-ம் தேதி தாய் வீட்டுக்கே வந்துள்ளார். அப்போது, ராஜேஸ்வரி தீயில் கருகிய நிலையில் வீட்டுக்குள் சடலமாக இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. தாய் ராஜேஸ்வரியை யாரோ கொலைசெய்து எரித்துள்ளதை உணர்ந்த கோமதி கண்ணமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

ஆரணி

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு தடயங்களையும் கைப்பற்றினர். கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் கழுத்து, காதில் இருந்த தங்க நகைகளும் மாயமாகியிருந்தன. இதனால், சந்தேகமடைந்த போலீஸார் ஆரணி ஒண்ணுபுரத்தில் உள்ள நகை அடகுக்கடை வியாபாரிகளிடம் சமீபத்தில் நகை அடகு வைத்தவர்களின் விவரங்களை சேகரித்தபோது துப்பு துலங்கியது. கொலை நடந்த தேவாங்குபுரத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான கணேசன் (36) என்பவர் ஓர் கடையில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்தது.

ராஜேஸ்வரியிடம் கடன் பெற்றவர்களின் விவரங்களையும் போலீஸார் சேகரித்துப் பார்த்தனர். அதிலும், கணேசனின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவரைத் தேடிச்சென்றபோது தலைமறைவான தகவலும் தெரியவந்தது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கணேசனைப் பிடிக்க தேடுதல் பணியும் முடுக்கிவிடப்பட்டது. சென்னையில் பதுங்கியிருந்த கணேசனை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். விசாரணையில் மூதாட்டியை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட கணேசன்

போலீஸாரிடம் கணேசன் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘மூதாட்டி ராஜேஸ்வரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்த கடனை முழுமையாகத் திருப்பி செலுத்த முடியவில்லை. ராஜேஸ்வரி கடனைக்கேட்டு தொந்தரவு செய்தார். கொரோனா ஊரடங்கில் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலில், கடனை எப்படி அடைக்க முடியும்? வீடு தேடி வந்து அசிங்கப்படுத்தியதால் கொலைத்திட்டத்தை அரங்கேற்றினேன். கடந்த 14-ம் தேதி இரும்பு ராடுடன் ராஜேஸ்வரியின் வீட்டுக்கேச் சென்றேன். தனியாக இருந்த அவரை இரும்பு ராடால் தாக்கினேன். சுருண்டு விழுந்த அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றேன். கொலையை திசைத் திருப்புவதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியை தூவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துச்சென்றேன்’’ என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இதையடுத்து, கணேசனை கைதுசெய்த போலீஸார், ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/one-arrested-in-arani-old-women-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக