Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

``ரஞ்சித்தின் `மெட்ராஸ்', வெற்றிமாறனின் `வடசென்னை', என் சென்னை!'' - நெகிழும் சமுத்திரக்கனி

''கொரோனாவை விட கொடுமையான காலத்துலயே சென்னை என்னை காப்பாத்தியிருக்கு. சென்னை எப்போதும் என்னை கைவிடாது. எனக்கு எல்லாத்தையுமே கொடுத்தது சென்னைதான். சென்னை பெரிய மேஜிக். நான் நடந்து திரிஞ்ச தெருவுல எல்லாம் கார்ல பயணம் செய்ய வெச்சிருக்கு. கொரோனா பரவுதுன்றதுக்காக இந்த ஊரை விட்டுட்டு எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கணுமா என்ன?! கடைசி வரைக்கும் நான் இங்கேயேதான் இருப்பேன். ஷூட்டிங் சீக்கிரம் ஆரம்பிப்போம். ஊருக்கு போனவங்க எல்லாரும் திரும்ப வருவாங்க. அவங்க எல்லாருக்கும் தேவைக்கு அதிகமா சென்னை கொடுக்கும்ன்ற நம்பிக்கை எனக்கிருக்கு'' - சென்னையின் மீதான பேரன்போடு பேசத்தொடங்குகிறார் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.

''இருபது வருஷத்துக்கு மேல சினிமால இருக்கீங்க... இந்தப் பயணத்தை எப்படிப் பார்க்குறீங்க?''

''வெற்றியெல்லாம் எதுவும் அடையல. வெற்றி அடைஞ்சிட்டேன்னு நான் நினைச்சிட்டா இந்த சினிமாக்குள்ளயே இருக்க மாட்டேன். இன்னும் தேடல்லதான் இருக்கேன். ஆசைப்பட்ட இடத்துக்கு கொஞ்ச கொஞ்சமா ட்ராவல் பண்ணிட்டு வரேன். தெரியாத விஷயங்கள் நிறைய இருக்குறதுனால ஒண்ணு ஒண்ணா தேடி கத்துக்குறேன். ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு.''

சமுத்திரக்கனி

''தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகள்லயும் நடிக்கிறீங்க... மேக்கிங்ல எதுவும் வித்தியாசங்களை உணர்றீங்களா?''

''தமிழ் சினிமால ஷங்கர் சாரைப் பார்த்த மாதிரியேதான் ராஜமெளலி சாரையும் பார்த்தேன். மேக்கிங்ல பெரிய வித்தியாசங்கள் எதுவும் தெரியல. மனிதர்கள்தான் மாறுவாங்களே தவிர ஒரே சிந்தனையுடையவங்கதான் எல்லா இடத்துலயும் இருக்காங்க. மலையாளத்துல மோகன்லால் சார்கூட வேலைப் பார்த்திருக்கேன். நாம என்ன நினைச்சு டிராவல் பண்றோமோ அப்படிப்பட்ட மனுஷங்க நம்ம டிராவல்ல வந்துடுறாங்க. நான் ரொம்ப அனுபவப்பூர்வமா உணர்ந்த விஷயம் இது.''

'' 'தலைவி' படத்துல ஆர்.எம்.வீரப்பன் கேரக்டர்ல நடிக்க எப்படியெல்லாம் தயாரானீங்க?''

'' 'ஆர்.எம்.வி - ஒரு தொண்டர்'ன்ற புத்தகத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் சார் அனுப்பி வெச்சார். ஆயிரம் பக்கம் வரைக்கும் இருந்தது. முழுபுத்தகமும் படிச்சிட்டு, 'இப்படியொரு நல்ல மனுஷனா ஆர்.எம்.வீரப்பன் சார்'னு ஆச்சர்யப்பட்டேன். பெரியளவுல உழைச்சிருக்கார். ஆனா, இந்த மனுஷன் வெளியே தெரியலையேன்னு வருத்தப்பட்டேன். இவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையேயான உறவு அப்படியிருந்திருக்கு. இந்த மனிதர் எம்.ஜி.ஆர் சாருக்காவே தன்னுடைய கடைசி காலம் வரைக்கும் டிராவல் பண்ணியிருக்கார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும்கூட அமைதியா போயிட்டாரே தவிர, எங்கேயும் எதையும் காட்டிக்கல. இவரோட மனசெல்லாம் பெருசு. சமீபத்துல இவரோட 94-வது பிறந்தநாள் கொண்டாடுனாங்க. பல நூறு வருஷம் கடந்து இவர் வாழணும்னு ஆசைப்படுறேன். இந்தக் கதையில உயிரோட இருக்கக்கூடிய ஒரு கேரக்டர்னா வீரப்பன் சார் மட்டும்தான். இந்த கேரக்டர்ல நடிக்குறப்போ வந்த உணர்வுகள் பயங்கரமா இருந்துச்சு.''

‘தலைவி’ படத்தில்

''எம்.ஜி.ஆர் கேரக்டருக்கு அரவிந்த் சாமி எந்தளவுக்கு பொருந்தினார்?''

''அரவிந்த்சாமி எந்தளவுக்கு அர்ப்பணிப்பான நடிகர்னு அவரோட பயணம் செஞ்சப்போதான் புரிஞ்சது. எம்.ஜி.ஆர் சாருடைய பல் வரிசையெல்லாம் நோட் பண்ணி அதேபோல பண்ணியிருந்தார். சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் குறிப்பெடுத்துக்குவார். இவரும் நானும் நடந்து வர்ற ஸ்டில் ஒண்ணு எடுத்திருந்தாங்க. இதை அடிக்கடி எடுத்துப் பார்த்துப்பேன். எம்.ஜி.ஆர் சாரின் ஆசிர்வாதம் இருக்குனு நினைச்சிக்கிட்டேன். இந்தப் படம் முடிஞ்சதுக்குப்பிறகு எம்.ஜி.ஆர் பயோபிக் பண்ணுங்கனு விஜய்கிட்ட சொன்னேன். ஏன்னா, மொத்தமா வேற மாதிரி எங்களைக் காட்டியிருக்கார். பார்ப்போம்.''

'' நீங்க இயக்கிட்டிருந்த 'தொண்டன்' படத்தை பாதியிலயே விட்டுட்டு போறளவுக்கு வெற்றிமாறன் மேல அவ்ளோ நம்பிக்கை எப்படி?''

வெற்றிமாறன்

''இந்த மனுஷன் எவ்வளவு பெரிய உழைப்பாளிங்குறது அவரோட பயணப்பட்டவங்களுக்குத்தான் தெரியும். 'ஆடுகளம்' படத்துல கிஷோர் கேரக்டருக்கு முதல்ல என்னைதான் கேட்டார். ஆனா, என்னால அப்போ பண்ண முடியல. இது மிஸ்ஸானதை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டேன். அதுக்குப்பிறகு 'தொண்டன்' படம் பண்ணிட்டிருந்தப்போ ஒரு இரவு நேரத்துல போன் பண்ணி என்னைப் பார்க்கணும்னு சொன்னார். போனேன். 'விசாரணை' படத்தோட விஷயங்களைச் சொன்னார். எப்பவும் முழுக் கதையெல்லாம் சார் சொல்லவே மாட்டார். கேரக்டர் இப்படினு மட்டும் சொல்லுவார். சொல்லி முடிச்சிட்டு, 'என்ன'னார். 'வாங்க, நாளைக்கே ஷூட்டிங் போவோம்'னு சொல்லிட்டேன். அவரோட கதைக்கு ரொம்ப உண்மையாயிருப்பார். ஆனா, கதைக்குள்ளயே இருப்பார். எதைப் பற்றி பேசுனாலும் கதைக்குள்ள வந்துருவார். இப்படியொரு டைரக்டரைப் பார்க்குறது அபூர்வம். 'விசாரணை' முடிஞ்சவுடனே 'வடசென்னை' போனார். அப்போ, 'நான் இருக்கேனா'னு கேட்டேன். 'இல்லை'னு சொல்லிட்டார். ஓகேன்னு நானும் என்னோட பட ஷூட்டிங் போயிட்டேன். திடீர்னு போன் பண்ணி 'தேவைப்படுதே'னார். 'இந்தா, வந்துட்டேன்'னு என்னோட ஷூட்டிங்கை நிறுத்திட்டு ஓடிட்டேன். 'வடசென்னை' பண்றப்போ எங்க நட்பு இன்னும் ஆழமாச்சு. அவர் எது சொன்னாலும் அதுக்குப்பின்னாடி ஒரு விஷயம் இருக்கும்னு நம்பிக்கை வந்துருச்சு. எங்களுக்குள்ள இருக்கிறது ரொம்ப ஆத்மார்த்தமான உறவு. வேறவேற படங்கள் எத்தனையோ தளத்துல பண்ணலாம். ஆனா, இந்த மாதிரியான படங்கள் பண்றது கடவுள் கொடுக்கிற பரிசு மாதிரி. எதையும் பிளான் பண்ண முடியாது. அதுவா நடக்கும். 'விசாரணை' மற்றும் 'வடசென்னை' எல்லாம் அதுவா நடந்த விஷயம். இன்னும் நிறைய விஷயங்களும் நடக்கும். வெற்றி சார்கூட ஒரு படம் பண்ணிட்டா, வெளியே போயிட்டு ஐம்பது படம் வரைக்கும் பண்ணிடலாம்.''

''பா.இரஞ்சித்தின் 'காலா'ல உங்க கேரக்டரே வேற மாதிரியிருக்கும். இந்த கேரக்டருக்குள்ள எப்படி வந்தீங்க?''

சமுத்திரக்கனி

''ரஞ்சித்துக்கும் எனக்கும் நல்ல நட்பு எப்பவும் உண்டு. காரணம், வெங்கட்பிரபு. 'சென்னை 28' படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் பண்ணிட்டு இருந்தப்போ, ரஞ்சித்தை அங்கே பார்ப்பேன். ரஞ்சித்தோட முதல் படம் பார்த்தேன். நல்லாயிருந்தது. ரெண்டாவது படம் 'மெட்ராஸ்' பாத்தப்போ ஆழமான சிந்தனை தெரிஞ்சது. இதுக்குப் பிறகு 'காலா' படத்துக்காக வள்ளியப்பன் கேரக்டர் பற்றி சொன்னார். 'எங்க அப்பா, தெருமுனையில வர்றப்போ கொடுக்குற சவுண்ட்ல தெருவே அலர்ட் ஆகும்ணே'னார். ரஞ்சித் அப்பாவுடைய மேனரிசங்களை எல்லாம் எடுத்துத்தான் வள்ளியப்பன் கேரக்டர்ல எனக்கு வெச்சார். பெரிய பொறுப்பு இது. தன்னுடைய தகப்பனாரோட நல்ல விஷயங்களை திரையில நம்ம மூலமா வெளிப்படுத்தணும்னு நினைக்குறப்போ நாம ரொம்ப சரியா பண்ணணும்னு செஞ்சேன். 'காலா'ல வள்ளியப்பன் கேரக்டருக்குள்ள உண்மையான நல்லவன் இருப்பான். விபத்து நடந்ததுக்குப்பிறகு அழற சீன் ஒண்ணு வரும். ரஞ்சித் இந்த சீனை சொல்லும்போதே என் கண்ல கண்ணீர் வர ஆரம்பிச்சிருச்சு. இதைப் பார்த்துட்டு ரஞ்சித், 'இதுக்கு மேல டிஸ்கஷன் பண்ண வேண்டாம்ணே. எடுத்துருவோம்'னார். ஒரே ஷாட், ஒரே டேக்ல ஓகே ஆகிருச்சு. வெறும் குடிகாரனா மட்டும் இந்த கேரக்டரை காட்டமா, அவனுக்குள்ள இருக்குற நல்ல மனசையும் ரஞ்சித் காட்டியிருப்பார். அதுதான் இயக்குநரோட பலம்.''

''உங்களோட உதவி இயக்குநர் ஹலிதா இயக்கும் 'ஏலே' படத்துல உங்களுக்கு ரொம்ப வித்தியாசமான கெட்அப்பாமே?!''

சில்லுக்கருப்பட்டி

''இதுக்கு ஹலீதாவுக்குதான் நன்றி சொல்லணும். 'நாடோடிகள்' படத்துல என்கிட்ட வேலைப் பார்த்தாங்க. எப்பவும் ஏதோ ஒண்ணு புதுசா தேடிக்கிட்டே இருப்பாங்க. 'இவ்வளவு தேட வேண்டாம். கொஞ்சம் வெயிட் பண்ணு'னு சொல்லுவேன். ஆனா, அவங்க தேடிட்டிருந்தது என்னன்னு 'சில்லுக்கருப்பட்டி' படத்தை திரையில பார்த்தப்ப புரிஞ்சது. ஷங்கர், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி சார் எல்லோரும் படத்தைப் பத்தி பேசுனதெல்லாம் பெரிய விஷயம். 'ஹலீதா, உன்னை கடவுள் நல்லா ஆசிர்வதிச்சிருக்கார். நிறைய உழைச்சிருக்க. உழைப்புக்கு ஏத்த பலன் கிடைச்சிருக்கு'னேன். ஏன்னா, அவங்களோட முதல் படம் 'பூவரசம் பீப்பி' சரியா கவனிக்கப்படல. இப்போ, 'சில்லுக்கருப்பட்டி' பற்றி எல்லாரும் பேசுனது சந்தோஷம். வெளியே சமுத்திரகனிக்குனு இருக்க இமேஜை உடைக்கணும்னு நினைச்சு ஹலிதா பண்ணாங்க.

இப்போ, 'ஏலே' படம். இதுல மொத்தமா வேற சமுத்திரகனியை காட்டியிருக்காங்க. நானே எனக்கு வில்லன். மூணு கெட்அப் இருக்கும். என் பையனா மணிகண்டன் நடிச்சிருக்கார். என் பையன் ஹரியை பார்க்குற மாதிரியே இருந்தது. முழுப் படமும் பார்த்துட்டேன். மணி ரொம்ப நல்லா நடிச்சிருந்தான். மணிக்கும் தமிழ் சினிமால அற்புதமான இடம் கிடைக்கும். ஹலிதா இந்தப் படம் மூலமா வேறொரு இடத்துக்குப் போவாங்க. பல விருதுகளை வாங்கிட்டு வருவாங்கன்ற நம்பிக்கையிருக்கு.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/samuthirakani-on-ranjiths-madras-vetrimaarans-vadachennai-and-his-own-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக