கேரள மாநிலம், கள்ளிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த சிறுமியின் உடலை நேற்று சடலமாகச் சொந்த ஊருக்கு அழுகையும் கண்ணீருமாக உறவினர்கள் கொண்டுவந்தனர்.
நான்காம் வகுப்பு படித்துவந்த 10 வயதே ஆன இந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
சிறுமியின் தற்கொலை குறித்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் பேசினோம், ``கூடலூர் - ஓவேலி சாலை அரசுப்பள்ளி அருகில் வசித்துவருபவர் ராமசாமி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். 10 வயதான மகள் சுசித்ரா அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். இவர்கள் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டைவிட்டு வெளியே பறந்து சென்ற கிளி திரும்பி வரவில்லை. அந்தச் சோகத்தில் வீட்டில் விவசாயத்துக்குவைத்திருந்த மருந்தைக் குடித்து, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் சிறுமி.
இதை அறிந்த பெற்றோர், அவரை உடனடியாகக் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சிறுமையைக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்’’ என்றார்.
சிறுமியின் தற்கொலை குறித்து அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், ``பறந்து சென்ற கிளியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கிளி பறந்து சென்ற சோகத்திலிருந்த சுசித்ரா, மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்து, இன்றைக்குப் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்’’ என வேதனை தெரிவிக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/10-year-old-girl-commit-suicide-after-missing-her-pet-parrot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக