சென்னை ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி முதல் அவென்யூவில் வசித்து வருபவர் அசோக்ராஜ். ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறார். இவர் சென்னை அடையாறு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது ``என்னுடைய வீட்டில் வேலைச் செய்ய பெண் தேவைப்பட்டது. அதனால், மேன்பவர் ஏஜென்ஸி மூலம் வீட்டு வேலைக்கு பெண் தேடினேன். அப்போது மேன்பவர் எஜென்ஸியை சேர்ந்த அமுல் என்பவர் என்னிடம் போனில் பேசினார்.
வீட்டு வேலை தொடர்பான தகவல்களைக் என்னிடம் கேட்டறிந்த அமுல், டெபாசிட் தொகையாக 4,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன் லைன் மூலம் பணத்தை அனுப்பி வைத்தேன். அமுல் கூறியது போல வீட்டு வேலைக்கு வருவதாகக் கூறிய பெண் வரவில்லை. அதுகுறித்து அமுலிடம் போனில் பேசினேன். அப்போது அவர் உங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதனால் சோதனை முடிந்தபிறகு அவர் கண்டிப்பாக வேலைக்கு வந்துவிடுவார் என்று கூறினார்.ஆனால் அவர் வரவில்லை.
அதனால் மீண்டும் அமுலுக்கு போனில் பேசி, வீட்டு வேலைக்கு ஆள் வரவில்லை என தகவல் தெரிவித்தேன். அப்போது அவர் தன்னுடைய மகளை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அதனால் பிறகு பேசுகிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு நான் 10 தடவைக்கு மேல் அமுலுக்கு போன் செய்தும் அவர் என்னுடைய செல்போன் நம்பரை எடுப்பதில்லை. மேலும் என் செல்போன் நம்பரை அவர் பிளாக் செய்துவிட்டார்.
அதன்பிறகு அமுல் என்பவரின் செல்போன் நம்பரை எனக்கு தெரிவித்த இணையதளத்துக்கு புகாரளித்தேன். ஆனால் அவர்கள் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மேன்பவர் ஏஜென்ஸி நடத்துவதாகக் கூறும் அமுல் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் 29-ம் தேதி புகாரளித்தேன். ஆனால் எந்தவித நடவகைகையும் எடுக்கப்படவில்லை. எனவே என்னை ஏமாற்றிய அமுல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி துணை கமிஷனர் விக்ரமன் நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அசோக் ராஜ் கூறுகையில், ``வீட்டு வேலைக்காக மேன்பவர் ஏஜென்ஸியின் உதவியை நாடினேன். அப்போது ரோஜா மேன்பவரிலிருந்து அமுல் என்பவர் வீட்டுக்கு வந்து பேசினார். அப்போது அவர், என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் போன்ற விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ரோஜா மேன் பவர் என்ற பெயரில் 4,500 ரூபாய்க்கான ரசீதை என்னிடம் கொடுத்தார். அதற்குரிய பணத்தை ஆன் லைன் மூலம் அனுப்பி வைத்தேன்.
Also Read: `வண்டியை எப்ப கொடுப்ப; பணம் வரும்போது’ - 16 வாடகைக் கார்களை அடகு வைத்து நூதன மோசடி
பணத்தை வாங்கி விட்டுச் சென்ற அமுல், என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை மட்டுமல்ல பலரை ஏமாற்றியுள்ளதாக இணையதளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 4,500 ரூபாய் என்பதால் யாரும் அமுல் மீது புகாரளிக்கவில்லை. நீலாங்கரை காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாருக்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் என்னைப் போல மற்றவர்களை அமுல் ஏமாற்றக்கூடாது என்றுதான் அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகாரளித்தேன். நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். அமுலிடம் போலீஸார் விசாரித்தால் அவர் எத்தனை பேரை ஏமாற்றிய விவரம் தெரியவரும். மேலும் இதுபோன்ற ஏமாற்றும் ஏஜென்ஸிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளம் தங்களின் பதிவிலிருந்து நீக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அசோக்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்துவருகிறது. அதே நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆள்களைத் தேடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும். அவர்கள் குறித்த முழு விவரங்கள் தெரிந்தபிறகே வேலைக்கு சேர்க்க வேண்டும்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-it-employee-complaint-against-man-power-lady-amul
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக