Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

தி.மலை: `அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறல்!’ - சாமியாரை புரட்டி எடுத்த பொதுமக்கள்

ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் மக்கள் மாதக்கணக்கில் தங்கி ஸ்ரீ அண்ணாமலையாரை தரிசித்துவிட்டுச் செல்வார்கள். தவிர பல்வேறு ஆசிரமங்களும் இருப்பதால் வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கி செல்வார்கள்.

அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

அதேபோல கிரிவலப் பாதையில் இருக்கும் ஆயிரக்கணக்கான சாமியார்களிடமும் ஆசியும், அருள் வாக்குகளையும் பெற்றுச் செல்வார்கள். அதன்படி அமெரிக்கா ஆர்கான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆசியாலி என்பவர், கடந்த 8 மாதங்களாக அத்தியந்தல் அருணாச்சலேஸ்வரர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்.

அதேபோல நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மணிகண்டன் என்பவர், கிரிவலப்பாதையில் சாமியார்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். கிரிவலப்பாதையில் அவர் சுற்றித் திரியும்போது அருணாச்சலேஸ்வரர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஆசியாலியை பார்த்திருக்கிறார். அதையடுத்து கடந்த 1 மாதமாக ஆசிலியாவை கண்காணித்திருக்கிறார் மணிகண்டன்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன்

இந்நிலையில்தான் இன்று அதிகாலை ஆசியாலி தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன், அவர் வீட்டுக்குச் சென்று பாலியல் வன்முறை செய்ய முயற்சித்திருக்கிறார். அப்போது நடந்த தற்காப்பு முயற்சியில் ஆசியாலி சாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் சாமியாருக்கு காயங்கள் ஏற்பட்டது. ஆனாலும் பதிலுக்குத் தாக்கி போராடியிருக்கிறார் சாமியார். ஆனால் ’ஹெல்ப்.. ஹெல்ப்...’ என்று ஆசியாலி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் சாமியாரை வளைத்துப் பிடித்தனர்.

தொடர்ந்து சாமியார் மணிகண்டனுக்கு ’தர்ம அடி’ கொடுத்து புடைத்து எடுத்ததுடன், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீஸார்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தலையில் காயமடைந்த ஆசிலியா சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாமியார் மணிகண்டனை கைது செய்திருக்கும் காவல்துறை அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Also Read: தி.மலை: `அழுகையைக் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்!’ - பெண் இன்ஸ்பெக்டரை நெகிழ வைத்த ஆட்சியர்

இது தொடர்பாக விளக்கம் கேட்க திருவண்ணாமலை கிராமியக் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சிவக்குமாரை தொடர்புகொண்டோம். வழக்கு குறித்த எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், “விசாரணை முடிந்தவுடன் உங்களை கூப்பிடுகிறேன்” என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.



source https://www.vikatan.com/news/crime/sexual-assault-on-an-american-woman-public-attacked-the-preacher

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக