Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

பரமக்குடி:`முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திபோம்!' - அன்வர் ராஜா அதிரடி

`அடுத்த முதல்வர் யார் என்பதை முன்னிறுத்திதான் வரும் சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க எதிர்கொள்ளும்’ என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசியது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி ஆலோசனை கூட்டத்தில் அன்வர் ராஜா

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஒன்று கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என தெரிவித்தார். இதற்கு எதிராக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, `எப்போதும் முதல்வர் பழனிசாமிதான். அவரை முன்னிறுத்தியே சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்’ என பதிலடியில் இறங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டம் போடி மற்றும் பெரியகுளம் பகுதிகளில் 2021 முதல்வர் ஒ.பி.எஸ் என்ற ஹேஷ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது.

ஒ.பி.எஸ் ஆதரவு போஸ்டர்

இந்நிலையில் இப்பிரச்னை குறித்து மூத்த அமைச்சர்கள் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் வீடுகளுக்கு சென்று பல முறை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், ``கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துக்கள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சி தலைமை ஒப்புதல் இன்றி ஊடகங்கள், பத்திரிகைகளில் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரமக்குடியில் அ.தி.மு.க இளைஞர் - இளம்பெண் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.பி-யும், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜா , ''முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அ.தி.மு.க-வில் மட்டும் நிகழுவது போல் நினைக்க வேண்டாம். தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் கூட கடந்த காலங்களில் இந்த பிரச்னை நிலவியிருக்கிறது. இது இப்போதுதான் எழுந்த பிரச்னையாக கருதவேண்டாம். முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் வெற்றி பெற்று அம்மா முதல்வர் ஆனார்.

ஆலோசனை கூட்டத்தில் அன்வர் ராஜா

தற்போது அதே நிலை நீடிக்காது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திதான் அ.தி.மு.க தேர்தலை சந்திக்கும்'' என்றார். முதல்வர் வேட்பாளர் முன்னிலை குறித்து பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட கருத்தினை தெரிவிக்க கூடாது என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ள நிலையில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா இவ்வாறு பேசியிருப்பது அக்கட்சியினர் இடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: `6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?



source https://www.vikatan.com/news/politics/we-will-meet-the-election-with-chief-ministerial-candidate-anwar-raja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக