Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

துரைமுருகனிடம் பாய்ந்த ஸ்டாலின் முதல் `யாரிந்த சுந்தரி?’ வரை... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்!

முதல்வர் ஆய்வுக் கூட்டம்... துரைமுருகனிடம் பாய்ந்த ஸ்டாலின்!

கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் ஆகஸ்ட் 20-ம் தேதி, வேலூர் மற்றும் தருமபுரியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தன்னை அனுமதிக்காததைக் கண்டித்து தருமபுரி தி.மு.க எம்.பி-யான செந்தில்குமார் பெரிய போராட்டமே நடத்தினார். கேயாஸ் தியரியாக இந்த விவகாரம் துரைமுருகன் பக்கம் திரும்பியதுதான் ஹைலைட். ``இதுபோல வேலூரில் ஏன் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லை... முதல்வர் வந்து செல்லும் வரை என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?’’ என்று துரைமுருகனிடம் அம்பைப் பாய்ச்சினாராம் ஸ்டாலின்.

ஸ்டாலின் - துரைமுருகன்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல வெகுண்டெழுந்த துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து, ``முதல்வர் நடத்தியது ஆய்வுக் கூட்டமா அல்லது அ.தி.மு.க செயற்குழுக் கூட்டமா?’’ என்று பொரிந்து தள்ளினார். ஆனாலும் அந்தப் பேட்டியும் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால், ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறார் துரைமுருகன்!

நான் தருமபுரியில தட்டினா வேலூர்ல எகிறும்ப்பா!

``ஒரே கே...ரா இருக்கு!’’... புலம்பிய கட்சித் தலைவர்!

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் அவர். சில நாள்களுக்கு முன்னர் அவரிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து, ``கட்சியில நீங்க ஒரு ஸ்டாண்ட் எடுக்குறீங்க... மாப்பிளை சார் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாரு... தம்பி சார் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாரு... கடைசியில மேடம் மொத்த ஸ்டாண்டையும் மாத்திட்டு, புதுசா ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க... எதை ஃபாலோ பண்றதுனு தெரியலைங்க தலைவரே... ஒரே குழப்பமா இருக்குது’’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள். அதற்கு அந்தத் தலைவர், ``யோவ் எனக்கே குழப்பமாதான் இருக்குது. என் பேச்சை வீட்டுல யாரும் கேட்குறது இல்லை. அழுத்திக் கேட்டா ரெண்டு மாத்திரையை எக்ஸ்ட்ராவா கொடுத்துடுறாங்க. ஒண்ணும் புரியலை... கே...ரா இருக்குது’’ என்று அவர்களைவிட அதிகம் புலம்பியிருக்கிறார். அந்த இல்லத்தில் நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் சிலரோ, ``என்னன்னு சொல்றது... முன்னே தலைவருக்கு நடந்தது. இப்போ இவருக்கு நடக்குது’’ என்கிறார்கள் உண்மையான வருத்ததுடன்.

ஸ்டாண்டிங் ஆர்டர்னு சொல்லுங்க!

நான்கு அடி சமூக இடைவெளி... புதிய சட்டசபை ரெடி!

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட வேண்டும் என்பது விதி. அதன்படி செப்டம்பர் 25-ம் தேதிக்குள் சட்டசபை கூட வேண்டும். கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாகச் சட்டமன்றத்தை திருவல்லிக்கேணியிலுள்ள கலைவாணர் அரங்கில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதையொட்டி ஆகஸ்டு 25-ம் தேதி காலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்தார்.

மூன்றாவது மாடியில் சட்டமன்றத்தை நடத்தும் வகையில் சீட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. நான்கு அடி சமூக இடைவெளிவிட்டு அமரக்கூடிய வகையில் சீட் வரிசை அமைக்கப்படுகிறது.

சட்டை கிழியாம இருக்கிறதுக்கு இந்தச் சமூக இடைவெளி நல்லதுதான்!

திண்டுக்கல் மெர்சி...! `ஐஸ்’வைக்கும் உடன்பிறப்புகள்

மெர்சி

தி.மு.க முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமியின் மருமகள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரின் மனைவி என்கிற அடையாளங்களுடன் வலம்வரும் மெர்சியைக் கண்டால் உடன்பிறப்புகள் கதிகலங்குகிறார்களாம். `இவருக்கு ‘ஐஸ்’வைத்து ஆதாயம் அடைய ஒரு கூட்டம் பின்னாலேயே சுற்றுகிறது’ என்கிறார்கள். காரணம், `கட்சித் தலைமையின் கிச்சன் கேபினெட்’ என்கிறார்கள்.

மெர்சல் மெர்ஸி!

`யாரிந்த சுந்தரி?’ - கே.எஸ்.ஆர் புதுகுண்டு!

விஜய் நம்பியார்

`யாரிந்த சுந்தரி?’ என்கிற தலைப்பில் தி.மு.க-வின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், `2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய நபர் வீட்டில் பணிப்பெண்ணாக சுந்தரி என்பவர் சேர்ந்திருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த பல்வேறு தகவல்களை இந்திய உளவுத்துறையான ‘ரா’ அமைப்புக்கும், அன்றைய ஐ.நா சபையின் நிர்வாகியான விஜய் நம்பியாருக்கும் அவர் தகவல் அளித்துள்ளார்’ என்கிறது அந்தப் பதிவு. இது தொடர்பாக விரையில் ஆதாரங்களை வெளியிடவிருக்கிறாராம் கே.எஸ்.ஆர்.

சந்திக்கு வருமா சுந்தரி விவகாரம்?

`நமக்கேன் வம்பு!’... மணியன் புது பாலிஸி

சசிகலா

`சசிகலாவுக்கு ஆதரவாகக் கருத்து சொன்னால் ஆட்சி மேலிடம் கடுகடுக்கிறது. எதிர்ப்பாகப் பேசினால் சசிகலா வகையறாக்கள் காதில் புகைவிடுகிறார்கள். இதனால், காமெடி நடிகர் வடிவேல் பாணியில், `நாம யாரு வம்புதும்புக்கும் போறதில்லை... நமக்கேன் வம்பு...’ என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அதனால், ``எடக்கு மடக்கா கேட்கக் கூடாது’’ என்கிற நிபந்தனையுடன்தான் பிரஸ் மீட்டுக்கே சம்மதிக்கிறாராம் மணியன்.

செய்தியாளர்கள் `குறுகுறு’னு பார்ப்பாங்களோ!

`கொரோனா வேண்டுதல்’...  கோயிலைச் சுற்றும் கரூர் கரைவேட்டிகள்!

கரூர் மாவட்டத்தில் இரண்டு வி.ஐ.பி-களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மற்றொருவர், தி.மு.க-வின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி. இதையடுத்து இருவரின் ஆதரவாளர்களும் கோயில் கோயிலாக ஏறி, இறங்கி வருகிறார்கள். அ.தி.மு.க-வின் கரூர் மேற்கு ஒன்றியச் செயலாளரான கமலக்கண்ணன், அமைச்சர் குணமாக வேண்டி கோயில்களில் அன்னதானம் செய்துவருகிறார்.

செந்தில் பாலாஜி

`செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டும்’ என்று அவரின் உதவியாளரான சுப்பிரமணி உள்ளிட்ட ஆதரவாளர்கள் கரூர் மினி பேருந்து நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு யாகத்தை நடத்தியுள்ளார்கள்.

சீக்கிரமா குணமாகி வாங்கப்பா!

தினகரன் வீட்டுத் திருமணம் - சசி ஆசிக்கு வெயிட்டிங்!

டிடிவி தினகரன்

டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், பூண்டி காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. கிருஷ்ணசாமி வாண்டையார் தரப்புக்குச் சொந்தமான 40 ஏக்கர் இடத்தில் பிரமாண்டமான பந்தல் அமைத்து திருமணத்தை தடபுடலாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதேசமயம் சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகே தனது திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் ஜெயஹரிணி.

ஜெயஹரிணிக்கு ஜெயம் உண்டாகட்டும்!

காலில் விழுந்த தோப்பு... ஆறுதலாய் சிரித்த எடப்பாடி

பெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார். திடீரென `யூ டர்ன்’ அடித்து, அவரது தொகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு `எடப்பாடியார் நகர்’ எனப் பெயரிட்டு கட்சிக்காரர்களையே கலவரமடையச் செய்தார். இதன் பின்னணியில் நடந்தது இதுதான்... ஆகஸ்ட் 28-ம் தேதி தோப்பு வெங்கடாசலத்தின் மகனுக்கு ஈரோட்டில் திருமணம் நடைபெறுகிறது. அன்றைய தினம் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாது என்பதால், ஆகஸ்ட் 21-ம் தேதியே தோப்பு வெங்கடாசலம் வீட்டுக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தோப்பு வெங்கடாசலம்

அப்போது மணமக்களைத் தொடர்ந்து தோப்பு வெங்கடாசலமும் எடப்பாடியின் காலில் விழுந்து வணங்கினார். இதை வழக்கமான ஒன்றாக எடப்பாடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மீண்டும் முதல்வரை வழியனுப்ப வந்தபோது வாசலில் வைத்தும் எடப்பாடி காலில் மடேரென விழுந்திருக்கிறார் தோப்பு. இதை முதல்வரே எதிர்பார்க்கவில்லையாம். பதறிப்போனவர், `என்னப்பா சும்மா சும்மா கால்ல விழுறே... பார்த்துக்கலாம்’ என்று ஆறுதலாகப் புன்னகைத்தாராம். சற்றுத் தெம்பாக இருக்கிறார் தோப்பு!

விட்டா 'தோப்பு' கரணமே போட்டிருப்பார்போல!

முத்துப்பேட்டை விழா... பாராட்டிய எடப்பாடி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சம பலத்துடன் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இங்கு விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து முடிப்பதற்குள் திண்டாடிப்போவார்கள் காக்கிகள். இந்த முறை ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளுக்கும் ஊர்வலங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. `தடையை மீறுவோம்’ என்று இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன. இதனால், முத்துப்பேட்டையில் நிலைமை சூடாகவே இருந்தது. இந்த நிலையில்தான், அங்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி ஜெயராம், தஞ்சை சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் எஸ்.பி ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறு ‘கரைச்சல்’கூட இல்லாமல் அமைதியாக ஆற்றில் கரைக்கப்பட்டன பிள்ளையார் சிலைகள். முதல்வர், பாராட்டித் தள்ளிவிட்டாராம்!

வினை தீர்த்த காக்கிகள்!

அமைச்சரிடம் சிபாரிசு... அழைப்புவிடுக்கும் காக்கி!

தேனிக்காரர் ஒருவர், வடக்கு காவல் மண்டலத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக ஆணி அடித்ததுபோல அமர்ந்திருக்கும் அவரை அசைக்க முடியவில்லையாம். போதாக்குறைக்கு அவர், ``அமைச்சர்கள், ஆளுங்கட்சி வி.ஐ.பி-களிடம் ஏதாவது சிபாரிசு வேண்டுமென்றால், முதலில் என்னிடம் வாருங்கள்” என்று காக்கிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். ‘ஆட்சி முடிகிற நேரத்தில், இதெல்லாம் சகஜமப்பா’ என்று கமென்ட் அடிக்கிறார்கள் காக்கிகள்.

தேனி அடித்த ஆணி!

``அம்மாபோல வருமா...’’ பூங்குன்றன் காட்டம்

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

பிராமணர் சமுதாயத்தினரும், பட்டியலின சமுதாயத்தினரும் அ.தி.மு.க-வில் ஓரங்கட்டப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது. இந்தப் பிரச்னையை ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். `திராவிடக் கொள்கையான சமூகநீதிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் அம்மா பிரதிநிதித்துவம் அளித்தார். ஆனால், பிராமணர் மற்றும் பட்டியலின சமூகத்தினரை அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை ஓரங்கட்டுகிறது. மைத்ரேயன், கும்பகோணம் ராமநாதன், தஞ்சாவூர் கோபால் போன்ற முக்கிய நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்’ என்று பூங்குன்றன் அந்தப் பதிவில் கூறியுள்ளார். `வரும் தேர்தலில் இதன் தாக்கம் தென்படும்’ என்கிறது அரசியல் வட்டாரம்.

பூ ஒன்று புயலாகிறதோ!

சீட் கேட்கும் பத்திரிகையாளர்... சீறும் கட்சி நிர்வாகிகள்!

Also Read: எல்.முருகனை ஆட்டிவிக்கும் இருவர்; பன்னீருக்கு எதிராக எடப்பாடி வியூகம்..! கழுகார் அப்டேட்ஸ்

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அல்லது அதே மாவட்டத்தின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி இரண்டில் ஒரு தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று காய்நகர்த்துகிறாராம் `நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ். இதனால், கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி அவர் முகம் தென்படுகிறது. ஆனால், இவரின் எதிர் கோஷ்டியினரோ, ``ஏசியில உட்கார்ந்து வேலை பார்க்குற பத்திரிகைக்காரங்களுக்கு சீட் கொடுத்தா களத்துல உழைக்குற எங்களுக்கு என்ன மரியாதை?” என்று எதிர்க்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

அழகுக்கு அழகு சேர்க்க விட மாட்டார்களே!



source https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-updates-on-stalin-durai-murugan-issue-and-recent-political-happenings-and-controversies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக