தஞ்சாவூர் பெரியகோயிலில், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட அன்னம், 500 கிலோ காய்கறி மற்றும் இனிப்பு வகை ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வானுயுர்ந்து நிற்கும் பிரமாண்ட கோபுரத்துடன் அழகுறக் காட்சி தந்து கொண்டிருக்கிறது. உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் பெரியகோயிலில் லிங்கம் 12 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவர் பெருவுடையார் திகழ்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் விமர்சையாக அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டும் அதே போல் பெருவுடையார் கோஷங்கள் முழங்க அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதற்கான ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.
1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு மற்றும் பூக்கள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் வழங்கினர். பக்தர்களால் தரப்பட்ட அரிசியை சாதமாக வடித்தனர். பின்னர் பெருவுடையார் திருமேனி முழுவதும் அன்னம் சாத்தப்பட்டது, இதைத் தொடர்ந்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. இரவு லிங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாகப் போடப்பட்டது. அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், ‘பெருவுடையாரே’ என கோஷமிட்டபடி மெய்சிலிர்க்க சாமி தரிசனம் செய்து வேண்டி சென்றனர்.
source https://www.vikatan.com/spiritual/news/aippasi-annabishekam-celebrations-in-tanjore-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக