தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100-வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதற்காகப் பேரணியாகச் சென்றனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து (28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், ஆலையை சீல் வைத்து மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வு செய்ய நியமித்தது தீர்ப்பாயம். அக்குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி, `சில விதிமுறைகளுடன் மீண்டும் ஆலையைத் திறக்கலாம்’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்ததுடன், `இவ்வழக்கை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த அனுமதியும் இல்லை’ எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலைத் தரப்பிற்கு அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆலைத்தரப்பு தொடர்ந்த வழக்கில், `ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவே தொடரும்’ எனச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தீர்ப்பினை வரவேற்று போராளிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், கட்சியினர் ஆகியோர் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கருத்துகளைக் கேட்டோம். சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம்.
``மே 22-ம் தேதி போராட்டத்துக்குக் கிளம்பினப்போ, எனக்கு பிரஷர் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்துட்டு, ``ஊரே திரண்டு கலெக்டர் ஆபிஸுக்கு பேரணியாப் போகப் போறோம்மா. மக்களின் எதிர்ப்பை புரிஞ்சுக்கிட்டு அந்த ஆலையை, அரசே நிச்சயம் மூடிடுவாங்க. நீங்க வீட்ல இருந்து போராட்டத்தை டி.வியில பார்த்துட்டு இருங்க’னு சொல்லிட்டுப் போனா என் செல்ல மகள் ஸ்னோலின். ஆனா, வாயில சுடப்பட்டு அவளை தூக்கிட்டு வர்ற கொடூரக் காட்சியைத்தான் டி.வியில பார்த்தேன். அவள் சொன்னது போலவே ஆலையை மூடிட்டாங்க.
உயர்நீதிமன்றத்தில் ஆலைத்தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் 42 நாள்கள் வாதம் நடந்து, 6 மாத காத்திருப்புக்குப் பின்பு வரும் தீர்ப்பு என்பதால மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். காக்கா, குருவியைச் சுடுறதுபோல சுட்டுக் கொல்லப்பட்ட எங்க புள்ளைங்களோட உயிர்களுக்குக் கிடைச்ச நீதியா இந்தத் தீர்ப்பு வந்திருக்கு. தீர்ப்பு வந்ததும் உடனே என் மகளின் கல்லறைக்குச் சென்று மாலை போட்டு, மெழுகுவர்த்தி ஏத்தி கண்ணீரோட ஜெபம் செஞ்சேன்.
இந்தத் தீர்ப்பு ஆறுதலைக் கொடுக்குது. இருந்தாலும் இன்னொரு பக்கம், சட்டமன்றத் தேர்தல் வரப்போகுது என்பதால, இந்த நேரத்துல மீண்டும் ஆலையைத் திறக்க உத்தரவிட்டா, திரும்பவும் பெரிய பிரச்னையா வெடிக்கும், மக்கள் ஓட்டுப்போட மாட்டாங்கனு நினைச்சுதான் ஆலையைத் திறக்க உத்தரவிடாம அரசு உறுதியா இருந்ததாவும் மக்கள் மத்தியில ஒரு பேச்சு இருக்கு. ஆலையைத் திறக்க, ஆலைத்தரப்பு நிச்சயம் மேல்முறையீடு செய்வாங்க. இருந்தாலும், அரசு இதே முடிவுல மாறாம உறுதியா இருக்கணும்” என்றார்.
மீன்பிடித் தொழிலாளரான கிளாஸ்டனின் மனைவி ஜேசுராணி, ``13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைச்ச நீதியா இந்தத் தீர்ப்பை நினைக்கிறேன். இந்த நீதி தற்காலிகமானதுதான். நிரந்தர நீதி கிடைக்கணும். அப்போதான் மக்கள் முழு நிம்மதி அடைவாங்க. இச்சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் தாண்டிய நிலையிலும், இப்போவரை இந்தச் சம்பவம் தொடர்பான வழக்குகளின் நிலை, துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் மீதான நடவடிக்கைனு எதுவும் தெரியலை. ஆனா, சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் அரசும், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ போலீஸாரும் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைச்சாங்க.
ரெண்டு உயிர்களுக்கு ஒரு நீதி, 13 உயிர்களுக்கு ஒரு நீதியா? இந்த வழக்கிலும் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினாங்க. அதன் நிலை என்ன? இதற்கெல்லாம் அரசு பதில் சொல்லணும்” என்றார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமனின் மனைவி பாலம்மாள், ``மண்ணையும் சுற்றுப்புறத்தையும் நச்சாக்கிய இந்த ஆலை மூடப்பட்டது என்பதைவிட, இந்த மண்ணைவிட்டே அகற்றப்படணும் என்பதே எங்களின் கோரிக்கையா இருக்கு. ஆலை அகற்றப்பட்டால் மட்டுமே உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் நிம்மதி அடையும்” என்றார்.
இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகரின் தம்பி ஜெயகுமார், ``இந்தத் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலை. அடிபட்ட புண்ணுக்குப் போடப்பட்ட முதலுதவி மருந்துதான் இந்தத் தீர்ப்பு. புண் நிரந்தரமா ஆற போடப்படும் மருந்தாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான் பார்க்கிறோம். கடந்த 1993, 1998, 2008-ம் ஆண்டு என இதற்கு முன்பாக ஆலை மூன்று முறை உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டு, உச்சநீதிமன்ற அனுமதியால் மீண்டும் திறக்கப்பட்டிருக்கு. இந்த உத்தரவு 4-வது முறையாக அளிக்கப்பட்ட உத்தரவு. 185 பக்க தீர்ப்பில், ஆலை மூடப்பட்டதற்கு மண் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதுனு குறிப்பிடப்பட்டிருக்கே தவிர, மக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் ஆலை தீங்கு ஏற்படுத்துதுனு ஒரு இடத்தில்கூட உறுதிபடச் சொல்லலை.
ஆலை மூடப்பட்டு ரெண்டு வருஷத்துக்கு மேலாகியும் ஏன் இப்போவரை சட்டமன்றத்தில் இந்த அரசால் கொள்கை முடிவு எடுத்து தனிச்சட்டமா இயற்ற முடியலை? இதனால, அரசின் மீதே எங்களுக்கு சந்தேகம் ஏற்படுது. உயர்நீதிமன்றம் தடையை நீட்டித்தாலும், உச்சநீதிமன்றத்தில் தடையை நீக்க ஆலைத்தரப்பு கடுமையா முயலும். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்” என்றார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, ``தூத்துக்குடி மக்களின் பல ஆண்டுக்காலப் போராட்டத்திற்கும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் சிந்திய ரத்தத்திற்கும் கிடைத்த வெற்றி என்றாலும், இதை முழு வெற்றியாக எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. ஆலைத்தரப்பு நிச்சயம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். அப்படி மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் நாங்கள், அங்கும் எங்கள் சட்டப்போராட்டத்தை தொடர்வோம்.
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதுடன், தமிழகத்தில் இனி எந்த தாமிர உருக்காலைகளுக்கும் அனுமதி அளிப்பதில்லை எனக் கொள்கை முடிவு எடுக்கவேண்டும். துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மக்கள் மீதும், போராளிகள் மீதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.
Update: இந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/news/sterlite-protest-activists-talks-about-recent-high-court-verdict
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக