Ad

புதன், 11 நவம்பர், 2020

நம்பினோர் கைவிடப்படார்... சூர்யக்குமார் யாதவ் ஏன் இந்தியாவுக்கு ஆட வேண்டும்?! #SuryakumarYadav

480, 424, 512... கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சூர்யக்குமார் யாதவ் அடித்திருக்கும் ரன்கள் இவை. தொடர்ந்து இந்த ஆண்டும் மும்பை தத்தளித்தபோதெல்லாம் தனியாளாக நின்று ரன்வேட்டைகளை நடத்தியவர் சூர்யக்குமார் யாதவ். ஆனால், இந்த ஆண்டும் இந்திய அணிக்கானப் பெயர்பட்டியலில் சூர்யகுமாரின் பெயர் இல்லை. திடீர் சூர்யக்குமார் ரசிகர்கள் முளைத்து புலம்பல் ட்வீட்களோடு, கோலியையும் காலி செய்ய ஆரம்பித்தனர். உண்மையில் சூர்யக்குமார் யாதவ் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கவேண்டியவர்தானா?!

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்தபோது, ஒரு புள்ளி வைத்து ட்வீட் போட்டார் சூர்யக்குமார். ''நான் ஏன் அணியில் தேர்வாகவில்லை'' என்பது போல் கேள்வி எழுப்பி, பின்பு அதை டெலீட்டும் செய்துவிட்டார்.

#MI

நீல ஜெர்ஸியில் இந்திய அணிக்காக ஆடவேண்டும் எனப் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருபவர், சூர்யக்குமார் யாதவ். ஆனால் ஒவ்வொரு முறையும் புதுத் தொடருக்கு அணித்தேர்வாகும் போது, அவரைத் தேர்வாளர்கள் தொடர்ந்து புறக்கணித்துக் கொண்டே வருகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. மும்பை அணிக்காக சிறப்பாக ஆடி வரும் சூர்யக்குமார் நிச்சயம் இந்தமுறை ஆஸ்திரலியாவுக்கு எதிரானத் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என நினைத்துக் கொண்டிருக்க அவரின் பெயர் வழக்கம் போல் இடம்பெறவில்லை.

யார் இந்த சூர்யக்குமார்?!

சூர்யக்குமார் யாதவ் மும்பை மைந்தன்தான். 1990-ல் பிறந்த சூர்யக்குமார் யாதவ் மும்பையின் செம்பூர் பகுதியில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். திலீப் வெங்சர்க்கார் அகாடமியில் சேர்ந்த பிறகு சூர்யக்குமாரின் கிராஃப் உயர ஆரம்பித்தது.

மும்பைக்காக தனது முதல் ரஞ்சி போட்டியை 2010-ம் ஆண்டு டெல்லிக்கு எதிராக ஆடினார். அந்தப் போட்டியில், 89 பந்துகளில் 73 ரன்களை அவர் குவிக்க, பயமில்லாமல், பந்துகளை எதிர்கொள்ளும் அவருடைய அணுகுமுறை தேர்வாளர்களைக் கவர, அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. 2011/12 ரஞ்சித் தொடரில், ஒன்பது போட்டிகளில் 754 ரன்கள் அடித்து 68.54 என்கிற சராசரியோடு மும்பையின் டாப் ஸ்கோரரானார் சூர்யக்குமார்.

#Suryakumaryadav

ரஞ்சித் தொடரில சிறப்பாக ஆடி வந்த சூர்யக்குமாருக்கு, மும்பையின் கேப்டன் பதவியும் தேடி வந்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில், ரெட்டைச்சுமையைச் சுமக்க முடியாததால், கேப்டன் பதவியை விட்டு விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனத்தைச் செலுத்தினார். தொடர்ந்து வந்த தியோதர் தொடர், டி20 என அனைத்திலும் நம்பிக்கையான வீரராகத் தொடர, சூர்யகுமாரின் பெயர் ஊடகங்களில் அடிபட ஆரம்பித்தது.

ஐபிஎல் எண்ட்ரி!

2011 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சூர்யக்குமார். அடுத்த மூன்று வருடங்கள் அணியில் இருந்தாலும், ஒரேயொரு போட்டியில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 40 லட்சம் கொடுத்து இவரை வாங்கியது கொல்கத்தா. அடுத்த நான்கு வருடங்கள் கொல்கத்தாவுடன் பயணித்த சூர்யக்குமார், ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து சூர்யக்குமாருக்கு வாய்ப்புகளை வழங்கி அவரைத் துணைக் கேப்டனாகவும் உயர்த்தி அழகு பார்த்தது.

2015-ம் ஆண்டு, ஈடன் கார்டனில், மும்பைக்கு எதிரான போட்டியில, 20 பந்துகளில் 46 ரன்களைக் குவித்து, தன் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் சூர்யக்குமார். அவர் சந்தித்துச் சிதற விட்ட பந்துகளில் மலிங்கா, பும்ராவின் பந்துகளும் அடக்கம். இந்தப் போட்டிதான் அவரை ஒரு நட்சத்திர வீரராக அடையாளம் காட்டியது. இதனால் 2018-ம் ஆண்டு சூர்யக்குமாரை மீண்டும் மும்பை 3.2 கோடிக்கு ஏலத்தில் திருப்பி எடுத்தது.

#Suryakumaryadav

கொல்கத்தாவில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடிக் கொண்டிருந்தவருக்கு, ஓப்பனிங் ஆடும் வாய்ப்பை மும்பை அணி வழங்கியது. புதுப்பந்தை எதிர்கொள்ளும் வித்தையை லாவகமாகச் செய்து காட்டி, 14 போட்டிகளில் 512 ரன்களைக் குவித்து அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கினார். நான்கு அரைசதங்களைக் கடந்திருந்த அவரது ஸ்ட்ரைக்கிங் ரேட் 133.33. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஒரு போட்டியில், மூன்று சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகள் விளாசி, 47 பந்துகளில் 72 ரன்களைக் குவித்து அமர்க்களப்படுத்தினார் சூர்யக்குமார். இந்தப் போட்டியில் எதிர்பாராத விதமாய், மும்பை தோல்வியடைந்திருந்தாலும், அவருடைய ஆட்டம், மும்பைக்கு ஒரு நல்ல பேட்ஸ்மேன் கிடைத்ததை உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டும் இவருடைய நிலையான ஆட்டம் தொடர்ந்தது. ஒன் டவுனில் இறங்கி, 424 ரன்களைக் குவித்திருந்த சூர்யக்குமார், அதில் இரண்டு அரைச்சதங்களையும் கடந்து சிறப்பாக ஆடி, அணியின் தொடர் வெற்றிகளுக்குத் துணையாய் நின்றார். குறிப்பாக, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் குவாலிஃபையர் போட்டியில், சென்னையைச் சந்தித்தது மும்பை. இந்தப் போட்டியில் பத்து பவுண்டரிகளுடன் 54 பந்துகளில் 71 ரன்களைக் குவித்த சூர்யக்குமார், தன்னுடைய ஐந்தாவது இறுதிப் போட்டிக்கு மும்பை முன்னேற காரணமாய் இருந்தார்.

Also Read: ஒன்ஸ் UPON A டைம், THERE லிவ்ட் A கோஸ்ட்... மும்பையின் ஸ்பெஷல் கறி விருந்து எப்படி?! #MIvDC

இந்த ஆண்டும் சூர்யக்குமாரின் வெற்றி நடை தொடர்ந்தது, கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில், 28 பந்துகளில் அவர் சேர்த்த 47 ரன்கள் முக்கியமானது. அதேபோல் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 2 சிக்ஸர்களையும் 11 பவுண்டரிகளையும் விளாசி 47 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார் சூர்யக்குமார்.

எல்லோரும் டெல்லி கேப்பிடல்ஸுடன் சேசிங்கில் தோற்றுக்கொண்டிருந்தபோது மும்பை வெற்றிபெற்றது. அதற்கு காரணம் சூர்யக்குமார். ராஜஸ்தானுடனான போட்டியில் ஆர்ச்சர் பந்தில் ஸ்கூப் ஷாட் அடித்தார். ரபாடாவின் பந்துகளை அசால்ட்டாக டீல் செய்தார் என ஆச்சர்யப்படுத்தினார் சூர்யக்குமார்.

#Suryakumaryadav

ஆர்சிபி-க்கு எதிரான இன்னிங்ஸ்தான் இந்த ஆண்டின் ஹைலைட். ஆர்சிபி பெளலர்கள் அனைவரையும் அடித்து துவம்சம் செய்து விட்டார். ஆட்டத்தில் ஒருகட்டத்தில் கூட நிதானம் இழக்காமல் ரன்ரேட்டை உயர்த்திக் கொண்டே சென்று, எளிதான வெற்றியை மும்பை அணிக்கு பெற்றுத்தந்தார் சூர்யக்குமார். 43 பந்துகளை சந்தித்தவர் 10 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 79 ரன்களைக் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

பலநாள் கனவாய் இருக்கும் இந்தியக் அணியின் கதவுகள் இனிமேலாவது சூர்யக்குமார் யாதவுக்குத் திறக்கப்படவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக, 1 டவுன் பேட்ஸ்மேனாக, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக என எந்த இடத்தில் இறக்கிவிட்டாலும் இந்த சூர்யா பொழச்சுப்பான் சார்!


source https://sports.vikatan.com/ipl/why-suryakumar-yadav-should-play-for-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக