எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருந்த `சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்...' என்ற கேள்விக்கு `எடப்பாடி பழனிசாமி' என்ற விடை கிடைத்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்த விவகாரத்தின் பின்னணியில் நடைபெற்ற அரசியல் உள்குத்துகள் அதிரவைக்கின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்த அ.தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து அ.தி.மு.க சார்பில், சட்டசபை 'எதிர்க்கட்சித் தலைவர் யார்' என்பதை முடிவுசெய்வதற்காக கடந்த 7-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூடினார்கள். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடிபழனிசாமி ஆகிய இருவருமே 'எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்புக்காக மல்யுத்தம் நடத்தியதையடுத்து, கூட்டத்தில் கூச்சல் குழப்பமே நீடித்தது. இதையடுத்து எந்தவொரு முடிவும் எட்டப்படாமலேயே கூட்டம் 10 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மே 11 அன்று புதிய சட்டமன்றம் கூட்டப்படவிருப்பதை முன்னிட்டு, மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்புக்கும் இடையே இன்று மே 10, காலை 9.30 மணிக்கு ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.முக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மறுபடியும் கூட்டப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்குப் பிறகு, 'எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பலத்த போட்டிக்கிடையில் வாய்ப்பைப் பறிகொடுத்துவிட்ட விரக்தியில் இருந்துவரும் ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள், ``அம்மாவினால் முதல்வராக அடையாளம் காணப்பட்டவர் அண்ணன் ஓ.பி.எஸ். அவர் மீது அம்மா வைத்திருந்த நம்பிக்கையினாலேயே 2 முறை முதல்வராகும் பொறுப்பை வழங்கினார். ஓ.பி.எஸ்-ஸும் அந்த நம்பிக்கையைக் கடைசிவரைக் காப்பாற்றினார். அதன் அடிப்படையில்தான் அம்மா மறைவுக்குப் பிறகும் அவரையே முதல்வராக கட்சி தேர்ந்தெடுத்தது. இதுமட்டுமல்ல... அம்மா உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே நிதி அமைச்சராக திறம்பட பணியாற்றி, பலமுறை பட்ஜெட் தாக்கல் செய்தவர், அவை முன்னவர் என அவருக்கான தகுதிகள் ஆயிரம்.
கடந்த வருடம், கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்தபோது, தனிப்பட்ட தன் நலனை முன்னிறுத்தி முடிவெடுக்காமல், கட்சியின் நலனை கருத்தில்கொண்டு முடிவெடுத்தவர் அண்ணன் ஓ.பி.எஸ். அதாவது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பதவியில் இருந்துவந்தாலும்கூட, 'எடப்பாடி பழனிசாமியே கட்சியின் முதல்வர் வேட்பாளர்' என்று பெருந்தன்மையோடு அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, 'எதிர்க்கட்சி வேட்பாளர்' என்ற அந்தஸ்தைக்கூட அண்ணனுக்காக விட்டுத்தர மறுத்துவிட்டார்.
முதல்வர் வேட்பாளர் என்ற கிடைத்ததற்கரிய வாய்ப்பை, தேர்தல் தோல்வியினால் தவறவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது கிடைத்திருக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து வாய்ப்பையும்கூட சரிவரப் பயன்படுத்தி, மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், நீண்டகால அனுபவமும், அரசியல் பக்குவமும் கொண்ட அண்ணன் ஓ.பி.எஸ்-ஸை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்திருந்தால், கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும். 'முதல்வர் வாய்ப்பை' கோட்டை விட்டவர்கள், இப்போது 'எதிர்க்கட்சித் தலைவர்' பொறுப்பையும் பிடிவாதமாக தட்டிப் பறித்திருப்பது எந்தவகையில் நியாயம்?'' என்கின்றனர் குமுறலாக.
இதையடுத்து இ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, ``அம்மாவின் மறைவுக்குப் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக கட்சியையும் ஆட்சியையும் திறம்பட நடத்திச் சென்றவர் அண்ணன் எடப்பாடியார். முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்கள்தான், கட்சி தோல்வியுற்றுவிட்டால் 'எதிர்க்கட்சித் தலைவராக' வர முடியும். இந்த மரபை ஏன் ஓ.பி.எஸ் தரப்பினர் மாற்ற நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில், கட்சிக்கும் ஆட்சிக்கும் சோதனை ஏற்பட்ட போதெல்லாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல், உறுதியுடன் திறம்பட வழிநடத்திச் சென்ற போர்க்குணம் மிக்கவர் அண்ணன் இ.பி.எஸ். ஏற்கெனவே, தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு புதிய கட்சிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வருகின்றன. புரட்சித் தலைவியும் இல்லாத இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான தி.மு.க-வின் அரசியலை துணிச்சலுடன் எதிர்கொள்ளவும், கட்சியை வலுவானதாக கட்டமைக்கவும் இ.பி.எஸ்-ஸின் தலைமை அவசியமாக இருக்கிறது.
தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க தனியொருவனாய் ஓய்வின்றி பிரசாரம் செய்தவர் இ.பி.எஸ். அவரது அந்த அயராத உழைப்புதான் கொங்கு மண்டலத்தில் இமாலய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்நாடு முழுக்க வெற்றிக்கொடி நாட்டிய தி.மு.க-வால் கொங்கு மண்டலத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க-வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கட்டிக்காத்த பெருமை இ.பி.எஸ் என்ற ஒரு தலைவருக்கு மட்டுமே உரித்தானது. இ.பி.எஸ்-ஸுக்கு ஈடாக கட்சிப்பணி ஆற்றிய தலைவர் என்று அ.தி.மு.க-வில் வேறு யாரை சொல்லமுடியும்?
எனவே, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள தி.மு.க-வினரை நேருக்குநேர் சமாளிக்கும் திறமையும், கட்சியை கட்டுக்குலையாமல் காப்பாற்றும் வலிமையும் அண்ணன் இ.பி.எஸ்-ஒருவருக்குத்தான் இருக்கிறது!'' என்று அடித்துச் சொல்கின்றனர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நடைபெற்றுவரும் காரசார மோதல்கள் குறித்துப் பேசுகிற கட்சியின் முக்கியப் புள்ளிகள், ``தோல்வியுற்ற சமயங்களில்தான் கட்சியில் அதிகப்படியான உறுதிப்பாடுகள் தேவை. ஆனால், இங்கே எல்லாமே தலைகீழாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆட்சி - அதிகாரம் கையிலிருந்தபோதுகூட, அவரவருக்கான பதவிகளைப் பங்கிட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்கள். இப்போது கட்சிக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், கட்சித் தொண்டர்களை உற்சாக மனநிலையில் துடிப்புடன் வைத்திருப்பதற்குத்தான் கட்சியின் தலைவர்கள் முயற்சி செய்யவேண்டும். அதற்கு முதலில், கட்சியின் தலைவர்களுக்குள்ளாகவே நல்லதொரு புரிந்துணர்வு இருக்க வேண்டும்.
Also Read: ``தெருநாய்களுக்கு உணவளிக்கச் செல்வோரை தடுக்கக் கூடாது!" - சென்னை மாநகராட்சி ஆணையர்
ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சி செயல்படும்போது, இதுபோன்ற சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என கட்சிக்கு இரட்டைத் தலைமைகள் தேவையாக இருந்தது. ஆனால், இதுவே தேவையற்ற பிரச்னைகளுக்கும் காரணமாகிவருகிறது. தேர்தலுக்கு முன்பு, 'அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்' யார் என்பதிலும் சிக்கல் எழுந்தது. பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே, 'முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி'தான் என்ற அறிவிப்பு வெளியானது. இப்போது 'எதிர்க்கட்சித் தலைவர் யார்' என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும், இதே சிக்கல்தான் நீடித்து வருகிறது.
ஏற்கெனவே, 'பா.ஜ.க-வின் கைப்பாவையாக அ.தி.மு.க மாறிவிட்டது' என்ற பேச்சு இருந்துவருகிறது. இந்த நிலையில், மற்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சியையே கரைத்துமுடித்து, பா.ஜ.க தன்னை நிலை நிறுத்திக்கொண்டதுபோல், தமிழ்நாட்டிலும் அ.தி.மு.க-வை உடைத்துவிடுமோ என்ற பயம்-பதட்டம் தொண்டர்களிடையே இருந்துவருகிறது. தலைவர்களும் இந்த எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தங்களது பிடிவாதத்திலிருந்து இறங்கிவந்து, கட்சியைக் காப்பாற்ற முன்னுரிமை தரவேண்டும். இல்லையென்றால், இன்றையத் தலைவர்களின் மீது தொண்டர்களுக்கே அவமரியாதைதான் ஏற்படும். அதன் விளைவாக, சசிகலாவையே மீண்டும் கட்சித் தலைமையாக ஏற்கும் மனநிலைக்கும் தொண்டர்கள் மாறலாம்'' என்கின்றனர்.
Also Read: சென்னை: கட்டுப்பாட்டை இழந்த கார்; பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் திரைமறைவில் நடைபெற்ற உள்குத்து அரசியல் பற்றிப் பேசுபவர்கள், ``எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற தீவிர முடிவில்தான் ஓ.பி.எஸ் இருந்தார். ஆனால், ஓ.பி.எஸ் ஆதரவாளரான இனிஷியல் பிரமுகர் ஒருவர்தான் இடையில் புகுந்து டபுள் கேம் ஆடிவிட்டார். வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின்போதும் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகவே பேசிவந்த அந்த நபர், 'எந்த சூழ்நிலையிலும் நாம் பின்வாங்கிவிடக் கூடாது' என்று ஓ.பி.எஸ்-ஸிடமும் பேசியிருந்தார்.
ஆனால், கூட்டம் மறுபடியும் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதும், இடைப்பட்ட நாளில், இ.பி.எஸ் தரப்பினரிடம் சென்ற இனிஷியல் நபர், 'எங்கள் தலைவரிடம் நான் பேசி சமரசம் செய்துவிட்டேன்' என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார். இதன் அடிப்படையிலேயே இன்று நடைபெற்றக் கூட்டத்திலும் 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி' என்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இனிஷியல் நபர் ஆடிய டபுள் கேம் விவரம் தெரியவந்து கோபமான ஓ.பி.எஸ்., 'என் கருத்தை என்னிடம் கேட்காமல் நீங்களே எப்படி முடிவெடுக்கலாம்... என் கருத்தைச் சொல்வதற்கு அந்த இனிஷியல் நபர் என்ன புரோக்கரா...' என்றெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டார். உடனே, ஓ.பி.எஸ்-ஸை சமாதானப்படுத்தும்விதமாகப் பேசிய அந்த இனிஷியல் நபர், 'அமைதியாகப் போகலாம் என்றுதான் நான் நேற்றே உங்களிடம் சொன்னேனே...' எனக் கூறினார். உடனே, 'அமைதியாகப் போகலாம் என்பது வேறு... சமரசமாகிவிட்டேன் என்பது வேறு. நான் எப்போது சமரசமானேன்.... நீங்களாகவே பேசி முடிவெடுத்துவிட்டீர்கள்... இனி நான் என்ன சொல்ல.... உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும்' என கோபத்துடன் பேசிவிட்டு அலுவலக அறைக்குச் சென்றுவிட்டார் ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டால், நாம் துணைத் தலைவர் ஆகிவிடலாம் என்ற கணக்கில்தான் இனிஷியல் நபர் இப்படியொரு காய் நகர்த்தல்களை கையாண்டிருக்கிறார்'' என்று ரகசியம் உடைக்கின்றனர் கட்சி விவகாரங்களறிந்த சிலர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/fight-between-ops-eps-for-leader-of-opposition-role
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக