Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை

`தந்தை ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்தது' என்று சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

நட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் தலையீட்டால் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ தற்போது விசாரித்து வருகிறது. இச்சம்பவம் நடைபெற்றவுடன் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போதே அந்த அறிக்கையில், ``இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினர் விடிய விடிய அடித்துள்ளதை அங்கு பணியில் இருந்த பெண் காவலர் வாக்குமூலம் அளித்துள்ளார். அங்கிருந்த டேபிள், லத்தியில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட காவல்துறையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

இந்த நிலையில் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், பிரான்சிஸ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

Also Read: `சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு கரும்புள்ளி!’ - நல்லுறவுக் கூட்டத்தில் எஸ்.பி

இவர்களின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் அவர்கள் மரணத்துக்கு உடலில் இருந்த கடுமையான காயங்களே காரணம். ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் இதுவரை விசாரித்துள்ளது. சிபிஐ-யின் விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

அதைத்தொடர்ந்து சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbi-opposes-bail-plea-of-sathankulam-police-brutality-case-accused

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக