Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

`எப்ப சார், தியேட்டர் திறக்கப் போறீங்க?'- கோடம்பாக்கத்தின் கோபக் கேள்வியும் அமைச்சரின் பதிலும்!

கொரோனா ஊரடங்கினால், முடங்கிக்கிடக்கும் இந்திய சினிமாவை 'க்ளாப்' அடித்து மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது மத்திய அரசு! ஆனால், 'தியேட்டர்கள் இன்னும் மூடிக்கிடக்கும் சூழலில், சினிமா ஷூட்டிங்கை மட்டும் தொடங்கி என்ன செய்வது...' என்ற பொறுமல் கோடம்பாக்கத்திலிருந்து எழ ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இருளடைந்து கிடக்கும் வெள்ளித்திரையுலகில், 'கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து ஷூட்டிங் தொடங்குங்கள்' என வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக்கொடுத்து நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சிருக்கிறது மத்திய அரசு.

டி.சிவா

இதுகுறித்துப் பேசுகிற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் டி.சிவா,``இது நம் எல்லோருடைய உயிர்ப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலை எல்லோருமே கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். மாநில அரசிடமும் இதுகுறித்து நாங்கள் ஆலோசித்துவருகிறோம். ஏனெனில், நிறைய படங்கள் அரைகுறையாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு, தவித்துக் கிடக்கின்றன. எனவே, தமிழ்நாட்டிலும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்கள். நாங்களும் ஷூட்டிங்கை ஆரம்பிப்போம்'' என்கிறார் நம்பிக்கையாக.

அதேசமயம், படப்பிடிப்புக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை வரவேற்றுப் பேசுகிற தமிழ்த் திரைப்படத் துறையின் தயாரிப்பாளர் கே.ராஜன், `திரையரங்குகளை எப்போது திறக்கப்போகிறீர்கள்....' என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இதுகுறித்துப் பேசுபவர், ``தியேட்டர்கள் அனைத்துமே மூடிக்கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், 200-க்கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெளியிடப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. வீடு, நகை உள்ளிட்ட சொத்துகளை விற்றுப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள், செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

எனவே, 'சிறுவணிகப் படங்களை மட்டுமே தியேட்டர்களில் வெளியிடலாம்' என்ற நிபந்தனையோடு தியேட்டர்களைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இப்போதைய சூழலில், பெரிய நடிகர்களின் படங்களைத் தியேட்டர்களில் திரையிட்டால் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடுவார்கள். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும். மாறாக சிறு முதலீட்டுப் படங்களை மட்டும் வெளியிட்டால், தியேட்டருக்கு 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமே வரும்.

கே.ராஜன்

இதனால், திரையரங்கினுள் நல்ல இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்க்கும் பாதுகாப்பான சூழல் உருவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்த் திரைத்துறையில் உள்ள சிறு தயாரிப்பாளர்களும் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே, 'தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என ஏற்கெனவே நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார் தெளிவாக.

Also Read: “வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது!” - நடிகர் நாசர்

இந்த நிலையில், நடிகர் நாசர் இவ்விவகாரம் குறித்துப் பேசும்போது, ``மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தற்போது குறைந்த எண்ணிக்கையினரைக் கொண்ட காட்சிகளைத்தான் படமாக்க முடியும். திருவிழா போன்ற பிரமாண்ட காட்சிகளை எல்லாம் படமாக்க முடியாது. போகப்போக இந்த நடைமுறைகளில் தளர்வு வரும்போதுதான் திரைத்துறையினர் முழுமையாக தாங்கள் நினைத்த காட்சிகளை எல்லாம் படமாக்க முடியும்!

இது திரைப்படம் உருவாக்குதல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களது பிரச்னைகள். அடுத்து, உருவான திரைப்படங்களை வெளியிட்டு விற்பனை செய்வதென்பது வேறொரு தளத்திலுள்ள தொழிலாளர்களின் பிரச்னையாக இருக்கிறது. ஆனாலும்கூட இந்தத் துறைகள் அனைத்துமே ஒன்றையொன்று சார்ந்தேதான் இயங்கவேண்டியிருக்கிறது.

நாசர்

அதாவது, தியேட்டர்கள் மூடிக்கிடக்கும் இந்தச் சூழலில், ஏற்கெனவே திரையிடத் தயாராக இருக்கும் திரைப்படங்களை ஓ.டி.டி எனப்படும் இணையதளத்தின் வழியே வெளியிடலாமா, கூடாதா என்பதிலேயே திரைத்துறையினரிடையே தெளிவான புரிதல் இல்லை. இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஓ.டி.டி-யில் ஏற்கெனவே சில தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது, சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' படமும் ஓ.டி.டி-யில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், `பெரிய நடிகர்களின் படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிடக்கூடாது; திரையரங்குகளில்தான் வெளியிடவேண்டும்' என்று ஒருதரப்பினர் சொல்லிவருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் இந்தப் பிரச்னைகள் குறித்தத் தெளிவு, திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். எனவே, திரைத்துறையைச் சார்ந்தவர்களே உட்கார்ந்து பேசித்தான் இதுபோன்ற பிரச்னைகளில் நல்லதொரு தீர்வை எட்டமுடியும். மற்றபடி அரசிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டுசென்றால், அவர்கள் இதற்கென தனி அதிகாரிகளைத்தான் நியமிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஏற்கெனவே பல துறைகள் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றபோது, திரைத்துறையிலுள்ள சிக்கல்கள் என்பது கூடுதலான இன்னொரு பிரச்னை அவ்வளவுதான்!'' என்கிறார்.

ஷூட்டிங் அனுபவம் குறித்து சின்னத்திரை நடிகை ஃப்ரினாவிடம் கேட்டோம். ``ஷூட்டிங் ஸ்பாட்டிலும்கூட நடிக்கும்போது மட்டும்தான் முகக் கவசமின்றி இருக்கிறோம். மற்றபடி கேமராவைவிட்டு விலகிய உடனேயே அவரவர் முகக்கவசத்தை அணிந்துகொள்கிறோம். அடிக்கடிக் கைகளைக் கழுவுகிறோம். ஆரம்பத்தில் இந்தப் பழக்கங்கள் எல்லாவற்றையுமே கடைப்பிடிப்பதில் கொஞ்சம் சிரமமிருந்தது.

ஃபரினா

ஆனால், இப்போது பழக்கத்துக்கு வந்துவிட்டதால், பெரிய அளவில் சிரமம் ஏதுமில்லை. அதேசமயம் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்களைவிடவும் கொஞ்சம் கூடுதல் சிரமம் உண்டு. நடிகர், நடிகைகள் தங்களுக்கான உதவியாளர்களை உடன் அழைத்துவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால், எங்களுக்குக் கொஞ்சம் கூடுதல் சிரமம். எங்கள் லக்கேஜ்களை நாங்களே தூக்கிச் சுமக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதில் ஆரம்பித்து டீ, காபி, டச் அப், ஹேர் டிரெஸ் என ஒவ்வொரு தேவைக்கும் நாங்களே அலைந்து திரிந்துதான் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது'' என்றார்.

Also Read: செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்கலாம்... ஆனால், விஜய்யின் `மாஸ்டர்' ரிலீஸாகுமா?!

இதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், 'தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்... படப்பிடிப்புகளுக்கான அனுமதி எப்போது வழங்கப்படும்...' என்ற கேள்விகளை முன்வைத்தோம்...

``ஷூட்டிங் தொடங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு இப்போதுதான் வழங்கியுள்ளது. எனவே, இதுகுறித்து தெளிவாகப் படித்து அறிந்தபிறகு, முதலமைச்சரோடு கலந்து பேசி, அடுத்த சில நாள்களுக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியேட்டர்களைத் திறப்பது என்பது, இந்தியா முழுமைக்குமான பிரச்னை. எனவே, இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டியுள்ளது. வருகிற செப்டம்பர் 1-ம் தேதிக்குள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் மத்திய அரசே கூறியுள்ளது. அதன்பிறகே நம் மாநில நிலைப்பாட்டையும் தெரிவிக்க முடியும்!'' என்கிறார் அமைச்சர்.



source https://www.vikatan.com/news/politics/minister-kadambur-raju-and-cinema-personalities-speaks-about-theater-opening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக