Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கேரள தலைமைச் செயலகத்தில் தீ; தங்கம் கடத்தல் வழக்கு ஆவணங்கள் எரிந்ததா? - கொதிக்கும் எதிர்கட்சிகள்

கேரள மாநில தலைமைச் செயலகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கில் உள்ள சீஃப் புரோட்டோக்கால் அதிகாரியின் அலுவலகத்தில் நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஒரு கம்ப்யூட்டர் மற்றும் சில பைல்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தூதரகம் வழியாக தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன் சிக்கியுள்ளதால் பைல்களை அழிப்பதற்காக அரசு செய்த சதி என எதிர்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க-வும் குற்றம்சாட்டியுள்ளன. தீ விபத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் செல்ல முயன்றனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகம் முன்பு காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற உறும்மினர்களை அலுவலகத்துக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த தீ விபத்து ஸ்வப்னா வழக்கில் ஆவணங்களை அழிக்கும் செயல் என காங்கிரஸார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

கேரள காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா

இதுகுறித்து காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், "பொது நிர்வாகத்துறை செயல்பட்டுவரும் கட்டடத்தில் தீ பிடித்ததில் பல பைல்கள் அழிந்துள்ளன. அனைத்து ஊழல்களையும் மறைக்கும் நடவடிக்கை இது. ஏற்கனவே இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி கேமராக்கள் நாசமானதாக சொன்னார்கள். இப்போது தீ எரிந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் சொன்னதன்பேரில் ஆதாரங்களை அழிக்க நடந்த செயல்கள்தான் இவை.

தங்கம் கடத்தல் வழக்கில் இப்போது விசாரணை வளையத்தில் உள்ளது சீஃப் புரோட்டோக்கால் ஆப்பிசரின் அலுவலகமாகும். அங்குதான் இப்போது தீ எரிந்துள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என தெளிவாக தெரிகிறது. இது அவமானகரமான செயல். தங்கம் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றும் முதல்வரின் முயற்சி கண்டிக்கத்தக்கது. மேலும் தீ விபத்து குறித்து பார்வையிடச் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்களை முதலில் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது" என்றார்.

கேரள பி.ஜே.பி தலைவர் கே.சுரேந்திரன்

இதுகுறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில்,``புரோட்டோக்கால் அலுவலகத்தில் சில அதிகாரிகளுக்கு கொரோனா என்பதால் நேற்று அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இன்று அங்கு யாரும் இல்லை. இந்த நிலையில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக அரசே தீவைத்துள்ளது. வழக்குக்கான ஆவணங்கள் புரோட்டோக்கால் அலுவலகத்தில் இருந்தது. எனவே விசாரணை நடத்தும் மத்திய அரசின் ஏஜென்சிகள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

முன்னதாக கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் பா.ஜ.க வினரும் திரண்டு தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், வஜ்ரா வாகனம் மூலம் பா.ஜ.வினரை அதிகாரிகள் கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.



source https://www.vikatan.com/news/accident/kerala-secretariat-fire-accident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக