Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கஷ்டங்கள் தீர்க்கும் ராதாஷ்டமி... கட்டாயம் பஜனை செய்து பகவான் கிருஷ்ணரை வழிபட வேண்டிய நாள்!

கவி ஜெயதேவர் காவியத்தில் தன்னை முழுதும் இழந்திருந்தார். வரிவரியாக அதை இழைத்திருந்தார். கிருஷ்ணனின் அன்பும் ராதையும் அர்ப்பணிப்பும் அவர் கவிதைகளில் கரைபுரண்டு ஓடின. ஆற்று வெள்ளத்தில் வீழ்ந்தவர் மீள முடியாமல் அடித்துச் செல்லப்படுவதைப்போல பக்தி வெள்ளத்தில் வீழ்ந்த அந்தக் கவியும் அதன் ஓட்டத்திலேயே அடித்துச் செல்லப்படுகிறார். காவியத்தில் ஒரு கட்டம். கிருஷ்ணருக்கும் ராதைக்கும் சிறு ஊடல். காவியமரபுப்படி கவி கிருஷ்ணராகி ராதையிடம் அன்புக்காகக் கெஞ்ச வேண்டும். அளவை மீறிக் கொஞ்ச வேண்டும்.

"அடியே ராதே, விரகத்தினால் தவிக்கும் என் சிரத்திலே உன் பனிமலர் போன்ற தாமரை தளிர் பாதங்களை வைத்து அருள்வாய்'' என்று எழுதுகிறார். அவரா எழுதுகிறார்... அந்தக் கண்ணன் அல்லவா அவர் மூலம் எழுதுகிறார். எழுதி முடித்த கணம் கவி தன் சுய நினைவுக்கு மீள்கிறார். அடுத்த கணம், 'என்ன அபசாரம் செய்துவிட்டோம்,' என்று அலறினார்.

கிருஷ்ணர்

'பகவானின் சிரசில் ராதையின் பாதங்களா...' ஜீவாத்மாக்கள் எல்லாம் பற்ற வேண்டியது அந்தப் பரமனின் திருவடியல்லவா... சாதாரண கோபியின் கால்களை அந்த கோகுலன் பற்றுவதா என்று வெதும்பினார். அந்தக் கவி எழுதிய ஏட்டைக் கிழித்தார். பண்ணிய பாவத்துக்குப் பிராயச்சித்தமாக நதியில் நீராடித் திரும்பலாம் என்று புறப்பட்டுப் போகிறார்.

சிறுது நேரம் சென்றது. பாதிக்குளியலில் திரும்பி வருகிறார். "என்ன பாதி நீராடலில் திரும்பும் கோலம்..." மனைவி பத்மாவதி கேட்கிறாள். அதற்குக் கவியோ, "ஒரு கவிதை நினைவுக்கு வந்துவிட்டது. அதை எழுதி வைத்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லி ஏட்டில் எழுதி வைத்துவிட்டு மீண்டும் நீராடச் சென்றுவிட்டார்.

குளித்துமுடித்துத் திருமண் இட்டு அந்த தாமோதரனின் நாமம் சொல்லியபடி வீடு வந்த சேர்ந்தார் ஜெயதேவர், ஏட்டில் ஒரு கவிதை எழுதியிருப்பதைக் கண்டார். தான் கிழித்து எறிந்த அதே கவிதை. "யார் என் ஏட்டில் கவிதை எழுதியது" என்று பத்மாவதியிடம் கேட்டார். "நீங்கள்தானே பாதிக்குளியலில் வந்து எழுதிப்போனீர்கள்..." என்று பதிலளித்தார்.

'நான் எங்கே பாதியில் வந்தேன்' என்று எதிர்க்கேள்வி கேட்டார். அடுத்த கணம் அவருக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. தான் புறந்தள்ளிய கவிதையை அந்த மாலவன் தன் கரம் கொண்டு எழுதியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டார். ராதையின் மேன்மையை உலகுக்கு உணர்த்த அந்த ஜகன்நாதர் செய்த திருவிளையாடல் என்பதை அறிந்துகொண்டார். ராதையின் புகழை நா தழுக்கப் பாடினார்.

ஜெயதேவர்

ராதை, கிருஷ்ண பக்தியின் ஆகச்சிறந்த அடையாளம். ராதையின் அளவுக்கு யாராலும் கிருஷ்ணன் மேல் அன்பையும் பக்தியையும் செலுத்த முடியாது. கிருஷ்ணனே ராதையிடம் ஒரு முறை,

"சதா சர்வ காலமும் என் நாமத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறாயே, அதில் அப்படி என்னதான் இன்பம் இருக்கிறது..." என்று கேட்டார். அதற்கு ராதை, "நீங்கள் ராதையாக மாறினால் மட்டுமே அதை அறிந்துகொள்ள முடியும்" என்று பதிலுரைத்தாள். அதை அறிந்துகொள்வதற்காகவே கிருஷ்ணர் சைதன்யராக அவதரித்தார் என்று சொல்கிறார்கள் பெரியோர்கள்.

ராதை திருமகளின் அம்சம். கண்ணன் அவதரிப்பதற்கு முன்பாகவே அவதரித்துக் கண்ணனுக்காகக் காத்திருந்தவள் ராதா. ராதா கண்ணனுக்கு முன்பாக பிறந்துவிட்டாலும், கண்ணன் பிறந்தபின்புதான் கண் திறந்தாள் என்று சொல்வார்கள். கிருஷ்ண சிந்தனையே கலியுகத்தில் இருக்கும் துன்பங்களைக் கடக்க வழி. கலியுகத்தில் யாகங்களும் தவங்களும் செய்தல் அரிது. ஆனால் நாம சங்கீர்த்தனம் செய்வது எளிது. அதுவும் கிருஷ்ண நாமம் சொல்பவர்களை பகவான் ஓடிவந்து காப்பார் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே ராதை, 'கிருஷ்ண ஜப'த்திலேயே மூழ்கிக் கிடந்தாள்.

நலம் தரும் ராதாஷ்டமி மகிமைகள்! நாளை (26.8.20) ராதாஷ்டமி. ஶ்ரீ கிருஷ்ண நாம ஜபம் செய்வதையே தன் வாழ்நாள் சங்கல்பமாகக்...

Posted by Vikatan EMagazine on Tuesday, August 25, 2020

அதன் பலன் கிருஷ்ணனை நினைவுக்கூரும்போதே ராதையும் நினைவு கூரப்படுகிறாள். ராதே கிருஷ்ணா என்பதற்கு இணையான உயர்வான நாமம் நாம சங்கீர்த்தனத்தில் இல்லை. அதனால்தான் பாகவதர்கள் தங்களுக்குள் 'ராதே கிருஷ்ணா' என்று எப்போதும் சொல்லிக்கொள்கிறார்கள்.

ராதை, உத்தரப்பிரதேசம் மதுராவில் இருக்கும் பிரம்மஸரண் என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள பர்ஸானா என்னும் ஊரில் பிறந்தாள். இந்த ஊரில் ராதையை 'ராதா ராணி' என்றே போற்றுகிறார்கள். ராதா ராணிக்கு இங்கு ஓர் ஆலயமும் உள்ளது. இங்கு வாழும் மக்கள் அனைவரும் தங்களை ராதையாகவே பாவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது, 'ராதே, ராதே' என்றே அழைத்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு கிருஷ்ண பக்தி அவர்களுக்குள் நிறைந்திருக்கிறது.

கிருஷ்ணர்

Also Read: ஆபத்சகாய விநாயகர், பிரளயம் காத்த பிள்ளையார்... 9 விநாயகர் திருத்தல மகிமைகள்!

கிருஷ்ணனைப்போலவே ராதா பிறந்ததும் ஓர் அஷ்டமி தினத்திலேயே. எனவே ராதாவும் கிருஷ்ணரும் வேறு வேறல்ல என்றும் சொல்வார்கள். கிருஷ்ணரின் சக்தி ரூபமே ராதா என்பது நம்பிக்கை. ராதா அவதரித்த அஷ்டமியை ராதாஷ்டமி என்று அழைக்கிறார்கள். ராதாஷ்டமி நாளின் நண்பகலில் ராதே கிருஷ்ண வழிபாடு செய்து நாம சங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் உண்டு. ராதை அவதரித்த இந்த நன்னாளில் அஷ்டபதி பஜனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அஷ்டபதி தெரியாதவர்கள், 'ராதே கிருஷ்ணா' என்னும் நாமத்தை 108 முறை ஜபம் செய்து கிருஷ்ணர் படத்துக்குப் பூ சாத்தி வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.



source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-the-importance-of-radhashtami

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக