குளித்தலை நகராட்சியில் தொடர்ச்சியாக ஆணையர்களாக இருந்தவர்கள், கணக்காளர், அலுவலர்கள் என ஆறுபேர் அரசு ஆவணங்களைத் திருத்தி, ரூ. 1 கோடி வரை கையாடல் செய்ததாக தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் கடந்த 2019 - 2020-ம் ஆண்டு வளர்ச்சி பணிகள் திட்டத்தின் நிதி செலவு செய்யப்பட்டது குறித்து, கடந்த 10 நாள்களாக வருடாந்திர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில், பல்வேறு மோசடி நடந்துள்ளதை அறிந்து அதிர்ந்துபோனார்கள். அவர்கள், குளித்தலை நகராட்சி வளர்ச்சி நிதிகளில் நடைபெற்ற முறைகேடுகளைப் பற்றி புகார் கூறியதைத் தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாக அக்கவுன்ட் ஆடிட் உதவி இயக்குநர் அசோக்குமார், குளித்தலை நகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
Also Read: கரூர்: `117 வருட கட்டடத்தை இடிச்சுட்டாங்க!' - கமிஷனுக்காக செய்தாரா நகராட்சி கமிஷனர்?
தொடர்ந்து, விசாரணை செய்து தணிக்கை மேற்கொண்டதில், குளித்தலை நகராட்சியில் கணக்காளராகப் பணியாற்றும் சத்யா, ரூ. 1 கோடிக்கு மேலாக அரசு ஆவணங்களைத் திருத்தி அரசு நிதிகளான சி.பி.எஸ், பி.எஃப், நகராட்சி நிர்வாக நிதி போன்றவற்றில் உள்ள பணத்தை சிபி, பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.சுப்பிரமணி ஆகிய பெயர்களில் செக் மூலம் மோசடிசெய்துள்ளதைக் கண்டறிந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, குளித்தலை நகராட்சியின் தற்போதைய ஆணையர் மோகன்குமார் கரூர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரை தொடர்ந்து, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், இந்தக் கையாடலில் தொடர்புடையதாக சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையராகத் தலைவராகப் பணியாற்றிவரும் பாஸ்கரன், கணக்கராகப் பணியாற்றிவரும் சத்யா, முன்னாள் ஆணையர் பொறுப்பில் இருந்த புகழேந்தி, கார்த்திகேயன், தற்போது உள்ள ஆணையர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி ஆகிய ஆறு நபர்கள் மீதும் தற்காலிகப் பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார். புகார் கொடுத்த தற்போதைய ஆணையர் மோகன்குமாரே இந்தக் கையாடலில் ஈடுப்பட்டிருப்பது விசாரணை அதிகாரிகளை அதிர வைத்தது.
'பல செக்குகள் மூலம் இந்த மோசடியில் ஈடுப்பட்டதால், சம்பந்தப்பட்ட இரண்டு அரசு வங்கிகளில் பணியாற்றும் மேலாளர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு இதில் தொடர்பிருக்கக்கூடும் என்று கருதும் கரூர் குற்றப்பரிவு போலீஸார், ``அவர்களையும் விசாரிப்போம். விசாரணைக்கு பிறகு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று சொல்கிறார்கள். மேலும், "விசாரணையின் முடிவில்தான், அதிகாரிகளும் ஊழியர்களும் சேர்ந்து கையாடல் செய்தது ரூ. 1 கோடி மட்டுமா அல்லது அதற்கும் அதிகமான தொகையா என்பது தெரியவரும்" என்று அதிகாரிகள் தரப்ப்பில் சொல்கிறார்கள். நகராட்சி அதிகாரிகளே, ஊழியர்களின் சேம நல நிதியில் ரூ. 1 கோடி வரை கையாடல் செய்திருக்கும் சம்பவம், குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/kulithalai-municipality-officers-and-workers-forgery-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக