Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

`பாஜக, அதிமுக கூட்டணி உறுதி ஆன போதே, நம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது! - ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். திருவரங்குளம் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர், ``பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணி உறுதி செய்யப்பட்ட போதே தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழக மக்கள் ஒரு போதும் பா.ஜ.கவை ஏற்க மாட்டார்கள்.

ப.சிதம்பரம்

வரும் 100 நாட்கள் நாம் கடுமையாக உழைத்து, 200 தொகுதிகளை வென்று தமிழ்ப்புத்தாண்டில் தமிழன்னைக்குப் படைப்போம்" என்றார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு அரசியல் கட்சித் தலைவர் மக்களைச் சந்திப்பதில் என்ன சர்ச்சை இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கிறார். அதே போல். மு.க.ஸ்டாலினும் மக்களைச் சந்திக்கிறார்.

இதில் சர்ச்சை இயற்கையாக உருவாகவில்லை. அ.தி.மு.க-வினர் செயற்கையாகவே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 40 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்குச் செவி சாய்க்காமலும், தனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது.

ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு, சீன ஊடுருவல் தொடங்கி விவசாயிகள் போராட்டம் வரையிலும் மத்திய பா.ஜ.க அரசு பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. பிடிவாதத்துடன் முரட்டுத்தனமான இயந்திரம் போலவும் செயல்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ரஜினி காந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பர், அவருடைய முடிவை நான் வரவேற்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/chidambaram-attacks-bjp-and-admk-in-pudhukottai-event

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக