'காண்போம் இனி ஒரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி’ என்ற தலைப்பில் பா.ஜ.க பொதுக்கூட்டம் புதுச்சேரி ஏ.எஃப்.டி மைதானத்தில் நடைப்பெற்றது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய குஷ்பு, "புதுச்சேரிக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறை இங்கு வரும்போதும் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் இப்போது புதுச்சேரி இருக்கும் நிலை சங்கடமாக இருக்கிறது. புதுவை முதல்வரை பார்த்து நான் கேட்கிறேன், எம்மக்களை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? நாராயணசாமி ஆட்சியில் புதுச்சேரி சீரழிந்திருக்கிறது. மக்கள் வலியோடும், வேதனையோடும் இருக்கின்றனர். ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளது. என் வீட்டில் இருக்கும் ரேஷன் கார்டுதான் உங்கள் வீட்டிலும் இருக்கும். நீங்கள் வாங்கும் பொருளை நானும் வாங்குவேன்.
மக்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ஒரே நாடு ஒரே ரேஷன். ஆனால் ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ரேஷன் கடைகளை நீங்கள் மூடி வைத்திருக்கிறீர்கள். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளமில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருட்கள் 57% விற்பனையாகிறது. ஆனால் அனைத்துப் பழியையும் ஆளுநர் மீது சுமத்துகிறார் நாராயணசாமி. முதல்வர் நாராயணசாமிக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர தெரியவில்லை.
அதனால்தான் ஆளுநரை தவறாக பேசி வருகிறார். மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்களை கொடுத்துள்ளது. எதிர்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசு மீது தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். ஜாதிக்கான கட்சி, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பா.ஜ.கவை சொல்கின்றனர். அது தவறானது. சமீபத்தில் கேரளாவில் 21 வயது பெண் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தில் மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக அது பாராட்டுக்குரிய விஷயம். அந்த செய்தி மட்டும்தான் செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கிறது.
ஆனால் பந்தளம் என்ற பகுதியில் பா.ஜ.கவால் நிறுத்தப்பட்ட சுசீலா சந்தோஷ் என்ற பெண் நகரசபை தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார். அந்த பெண் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இந்த வெற்றியைப் பற்றியும், இந்தப் பெண்ணை பற்றியும் எத்தனை பேருக்கு தெரியும்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணை பா.ஜ.க தனித்தொகுதியில் நிற்க வைக்கவில்லை. பாதுகாப்பாக காய் நகர்த்தியிருக்கலாம். ஆனால் பா.ஜ.க அப்படி செய்யாமல் அவரை பொதுத் தொகுதியில் நிற்க வைத்து, வெற்றிபெற வைத்து அழகு பார்க்கிறது. எங்களைப் பார்த்து சாதி அரசியல் செய்கிறோம் என்று குற்றம் சுமத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சியிலும் தி.மு.கவிலும் சாதி அடிப்படையில்தான் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்கிறார்கள். சாதி, மத அரசியலை செய்வது காங்கிரஸும், தி.மு.கவும்தான். நான் சிறுபான்மையினத்தை சேர்ந்தவள்தான். என்னைப்போல பலரும் பா.ஜ.கவில் இருக்கின்றனர்.
விவசாயிகள்தான் நம் அன்னதாத்தா, நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் நம் பிரதமர், அவர்கள் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஒரு விவசாயி 1 கிலோ தக்காளியை நான்கு ரூபாய்க்கு விற்கிறார். நாம் வாங்கும்போது அதன் விலை ரூ.80 ஆக இருக்கிறது. இடையில் 76 ரூபாய் எங்கே செல்கிறது? நாட்டில் பஞ்சாப், அரியானாவில் மட்டும்தான் விவசாயிகள் இருக்கிறார்களா? தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மற்ற மாநிலத்தில் விவசாயிகள் இல்லையா? விவசாய சட்டத்தை கொண்டுவரும் முன்பு ஒன்றரை லட்சம் விவசாய சங்கங்களுடன் கலந்துரையாடிதான் சட்டத்தை கொண்டுவந்தார்கள்.
Also Read: ` இட்லி பற்றிப் பேசிய சித்து மீது குஷ்பு கோபப்படாதது ஏன்?!' - கொந்தளித்த தமிழிசை
காங்கிரஸும், தி.மு.கவும் எதிர்கட்சிகள் என்பதால் எதிராக பேசுகின்றனர். எதிர்க்கட்சிகள் என்பதால் எதிராக பேச வேண்டும் என்பதில்லை. நல்ல திட்டங்களை வரவேற்றும் பேச வேண்டும். 1970-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 5 விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்படவில்லையா? 2016-ல் தி.மு.க தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டம் பற்றி என்ன பேசியிருக்கிறீர்கள்? நீங்கள் பேசினால் நியாயம், நாங்கள் செய்தால் அநியாயமா? தி.மு.கவில்தான் என் அரசியல் பயணம் தொடங்கியது. தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி யாரைப்பற்றியும் அவமரியாதையாக பேசக்கூடாது என சொல்வார். அவர் இருக்கும் காலத்தில் ஜெயலலிதாவை அம்மையார் என்றுதான் குறிப்பிடுவார். ஆனால் ஸ்டாலின் தமிழக முதல்வரை, "எடுபிடி முதல்வர்" என சொல்கிறார். அவரின் மகன் உதயநிதி கூட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்தபோது, ’இன்னும் 5 மாதம்தான் உங்களை என்ன செய்கிறேன் பார்’ என அவர்களை மிரட்டுகிறார். தாத்தா எங்கே? பேரன் எங்கே? ஊழல் முறைகேடுகளை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காங்கிரஸும், தி.மு.கவும் பேசவே கூடாது. ஊழல் என்றால் என்ன? என நாட்டிற்கே எடுத்துக்காட்டியது காங்கிரஸ்தான். காங்கிரஸ், தி.மு.கவின் காலம் முடிந்துவிட்டது" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-and-dmk-shouldnt-speak-about-the-corruption-kushboo-slams-in-puducherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக